Published : 06 Jun 2018 10:51 AM
Last Updated : 06 Jun 2018 10:51 AM

இப்படிக்கு இவர்கள்: மறக்க முடியாத தங்கப் பா!

நவஜீவன், திருச்சி.

மறக்க முடியாத தங்கப் பா!

ழ.அதியமானின் ‘ம.இலெ.தங்கப்பா: உள்ளத்தின் உண்மை ஒளி’ என்ற கட்டுரையை ‘கலை ஞாயிறு’வில் கண்டேன். தனித்தமிழ் இயக்கம் தோன்றிய காலகட்டத்தில் எனக்கு12 அல்லது 13 வயதிருக்கும். தனித்தமிழ் இயக்க அமைப்பாக ‘உலகத் தமிழ்க் கழகம்’ தோற்றுவிக்கப்பட்டது. தனித்தமிழ் இயக்க ஏடுகளாக ‘தென்மொழி’, ‘தமிழ்ச்சிட்டு’ ஆகியவை வெளிவந்தன. இவற்றுள் ‘தமிழ்ச்சிட்டு’ சிறுவர்க்கான மாதிகை. இதில் ம.இலெ.தங்கப்பாவின் கவிதை கள் வெளிவரும். எளிய சொற்கள், இனிய சந்தம் கொண்ட மரபுக் கவிதைகள் அவை. என்னையும் என் நண்பர்களையும் கவிதையின்பால் அக்கவிதைகள்தான் ஆற்றுப்படுத்தின எனலாம். அவர் கவிதைகளை நாங்கள் ‘தங்கப் பா’ (பொன்னொத்த கவிதை) என்றே குறிப்பிட்டோம். அதியமான் குறிப்பிடுவதுபோல தூய தமிழ் இயக்கத்தை முன்னெடுத்த தமிழறிஞர்களில் ம.இலெ.த வரலாறு புறக்கணிக்க வியலாத ஆளுமை. தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், ம.இலெ.தங்கப்பா ஆகியோ ரின் கருத்துரைகள் ஏற்படுத்திய தாக்கம், கடந்த அரை நூற்றாண்டு காலமாகக் குன்றாமல் குறையாமல் இருந்துவருகிறது. ஆர்ப்பாட்ட அரசியலின் பேரிரைச்சலில் கண்டுகொள்ளா மல் விடப்பட்ட ஓர் அரிய தமிழறிரைத் தமிழ் வாசகர் மேடைக்குக் கொண்டுவந்த தமிழ் இந்துவுக்குத் தனித்தமிழ் ஆர்வலர்கள் சார்பில் மனங்கனிந்த நன்றியையும் பாராட்டு களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஸ்ரீமதிவண்ணன், அரூர், தருமபுரி.

உங்கள் குரல் வழியாக..

தங்கப்பா எழுதாத வடிவம் இல்லை!

பெ

ருங்கவிஞர் ம.இலெ.தங்கப்பா பற்றிய கட்டுரை படித்தேன். தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றான நொண்டிச் சிந்தில் நான்தான் எழுதுகிறேன் என்று நினைத்துக் கர்வமுற்றிருந்தேன். ஆனால் அவருடைய எழுத்தைப் படித்தபின் என்னுடைய கர்வம் அப்படியே அடங்கிப்போய்விட்டது. மரபுக் கவிதையில் தங்கப்பா எழுதாத வடிவமே கிடையாதுபோல.

காளிதாஸ் க்ரிஷ், மின்னஞ்சல் வழியாக.

மகிழ்ச்சி!

பு

திய பாடநூல்கள் பற்றி வகுப்புவாரியாக தமிழ் இந்துவில் படித்ததைத் தொடர்ந்து, ஜூன் 1-ல் கல்வித் துறைச் செயலரின் பேட்டி படித்தேன். உண்மையில், எதிர்காலச் சவால்களைச் சந்திக்கத் தேவையான திறனாய்வு மிக்க பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு பாடப் புத்தகத்தில் கைவீசம்மா பாடலில், ‘கணினி கற்கலாம் கைவீசு’ என இன்றைய சூழலுக்குகேற்ப அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

கூத்தப்பாடி மா.பழனி, தருமபுரி.

எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை

மு

க்தா சீனிவாசன் பற்றி மே 31 அன்று கட்டுரை படித்தேன். சீனிவாசன் தன் வாழ்வில் கடைப்பிடித்து வந்த எளிமை, சிக்கனம், நேர்மை போன்ற அற்புதமான பண்புகள் ஒவ்வொருவரின் வாழ்விலும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியவை. தனக்கு நஷ்டம் வந்தபோதும், மற்றவர்கள் நஷ்டப்படாதவாறு அதைச் சரிசெய்திருப்பதன் மூலம் சீனிவாசனின் அறம்சார்ந்த பண்பு வெளிப்படுகிறது. புத்தகக் காட்சியிலும் அக்கறையுடன் இவர் செயல்பட்டதைவைத்து, வாசிப்பை எந்த அளவு நேசித்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x