Published : 28 Jun 2018 09:27 AM
Last Updated : 28 Jun 2018 09:27 AM
தேரும் சாமியும் எங்களுக்கானவர்கள்
ஆ
ன்மிகம் மீதான அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தை ஆதங்கக் குரலாக வெளிப்படுத்தியது ‘என்னையும் என் சாமியையும் விட்டுவிடுங்களேன்’ எனும் கட்டுரை. திருவாரூர் தேரின் அற்புதமான அழகை வர்ணித்த விதமும், தெய்வச் சிலைகளை உயிருள்ள தெய்வமாகவே காணும் நம் இந்திய மரபைச் சுட்டிக்காட்டி ஆன்மிகத்துக்கு உயிர்தந்த விதமும் மனதைத் தொட்டது. மன்னார்குடி ராஜகோபாலனின் பதினெட்டு நாள் விழாவை நேரில் கண்டு மகிழ வைத்துவிட்டார் தங்க. ஜெயராமன். சமுதாயத்துக்குப் பொது அடையாளம் தரும் இதுபோன்ற விழாக்கள் தற்சமயம் அரசியலின் பிடியில் சிக்கித் தன் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறது. அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்; தேரும் சாமியும் எங்களுக்கானவர்கள். உங்கள் அதிகாரத்தையும் பகட்டையும் காண்பித்து எங்களிடையே இருக்கும் நெருக்கத்தையும் விசுவாசத்தையும் குலைத்துவிடாதீர்கள். ஆலயங்களுக்கு எங்களைப் போல் சாதாரணமானவர்களாக வாருங்கள். வரவேற்போம்.
- சுபா தியாகராஜன், சேலம்.
எதேச்சதிகாரமான கேள்வி
‘ம
ரபுக்கு மதிப்பளிக்கட்டும் ஆளுநர்!’ தலையங்கம் சரியானது. ஆளுநர், ஆங்கிலேய வைஸ்ராயின் எச்சம். குடியரசுத் தலைவரோ இங்கிலாந்து ராணியின் இந்திய வடிவம். கவுரவப் பதவி என்பதால் இந்த இருவரும் எல்லை மீறாமல் இருப்பதே கவுரவம். சில கருத்துகள் சட்டமாகவும் சில கருத்துகள் மரபாகவும் இருப்பது, பின்னால் வருபவர்கள் மீற மாட்டார்கள் என்ற உயர்ந்த நோக்கத்தில்தான். அந்த மரபுகளை மீறத் துணியும்போது, ‘இப்படி செய்யக் கூடாது என்று எந்தச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது?’ என்று கேட்பதே எதேச்சதிகாரம்தான்.
- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.
தேர்தல் காலத்தில் மட்டும் சந்திப்பா?
த
மிழக அரசு தொடர்பான ‘மக்களிடம் செல்லுங்கள் அதற்காகத்தான் அரசைத் தேர்ந்தெடுக்கிறார்கள்’ என்ற தலையங்கம் அனைவரும் உணர வேண்டியது. ஓட்டு கேட்டு வரும்போது மட்டுமே அரசியல்வாதிகள் மக்களைச் சந்திக்கிறார்கள். மக்களின் துயர காலங்களில் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுப்பது வழக்கமாகிவருகிறது. நீதித் துறை முக்கிய தருணங்களில், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது எனச் சொல்வது மக்களுக்கு ஏமாற்றமே. பத்திரிகைகள், சில ஊடகங்கள் மட்டுமே உண்மையை உரக்கச் சொல்கின்றன. அண்டை நாடுகளில் ஜனநாயகம் இல்லை என்று சொல்லிக்கொண்டே இந்நாட்டின் ஆளும் அரசுகள் மக்களை வதைக்கிறார்கள். நகரங்களில் நடக்கும் சிறு விஷயமும் நாட்டை உலுக்கும்போது ஏனோ கிராமத்தின் குரலும் விவசாய நிலத்தின் கண்ணீரும் அரசாங்கத்தை விழிக்கச் செய்வதே இல்லை.
- சு.பாலகணேஷ், மாதவன்குறிச்சி.
தாய்ப்பாசப் பதிவு
உ
லக மசாலா (26.6.18) பகுதியில், ஐந்து குருவிக் குஞ்சுகள் தாயின் வாயில் உள்ள இரையைப் வாங்குவதற்காக ஒரே நேரத்தில் வாயைத் திறக்க, அந்தக் கண நேரத்தை அப்படியே தன் கேமராவில் பதிந்த அபூர்வ புகைப்படம் காணக்கிடைத்தது. தாயின் அன்பையும் பாசத்தையும் இதைவிட அழகாகக் காட்ட இயலாது. அரிய புகைப்படத்துடன் விவரம் அளித்தமைக்கு இந்து தமிழ் நாளிதழுக்குப் பாராட்டுகள்.
- ஜீவன்.பி.கே., கும்பகோணம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT