Published : 28 May 2018 08:22 AM
Last Updated : 28 May 2018 08:22 AM
கருணாகரன், இலங்கை.
உறுத்தல் இல்லா வாழ்க்கை
மே
21 அன்று கோபாலகிருஷ்ணன் எழுதிய ‘சென்று வாருங்கள் செலமேஸ்வர்!’ கட்டுரையைப் படித்தேன். மேன்மையான மனிதர்களிடமிருந்து எந்தச் சூழலிலும் மேன்மையான எதிர்வினைகள்தான் வரும். ‘நீதித் துறையின் கோயில் என்று கருதப்பட்ட இடம், அப்படி ஒன்றும் புனிதமானதல்ல’ என்ற உண்மையை நாட்டுமக்களிடம் அப்பட்டமாகக் கொண்டுவந்தார். சீர்திருத்தத்தையே அவர் விரும்பினார், சீர்குலைவை அல்ல. ‘அமைப்புக்கு உள்ளிருந்தபடியே சீர்திருத்தத்துக்கு முயற்சிப்பவர்கள் பல இடையூறு களையும் இழப்புகளையும் எதிர்கொண்டபடியே அதைத் தொடர்ந்துசெய்கிறார்கள். தனது இறுதிக் காலம் வரை அப்படிக் குரல் எழுப்பிக்கொண்டே இருந்த செலமேஸ்வர் பணி வாய்ப்புகளை இழந்திருக்கலாம். ஆனால், தன் ஓய்வுக் காலத்தை எந்த உறுத்தலும் இல்லாமல் நிம்மதியாகக் கழிப்பார்’ போன்ற பகுதிகள் உச்சம். முக்கியமாக அமைப்புக்கு உள்ளிருந்தபடியே சீர்திருத்தத்துக்கும் மாற்றங்களுக்கும் முயற்சிப்பவர்கள் எதிர்கொள்ள வேண்டிய இழப்புகளையும் நெருக்கடிகளையும் சரியாக - அனுபவபூர்வமாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். போராட்ட அமைப்பில் இந்த அனுபவம் நமக்கு உண்டு. ஆனாலும் நம்மால் தளர்ந்துவிட முடியாது. இழப்புகளாலும் நெருக்கடிகளாலும் நம்மைத் தோற்கடிக்க முடியாது என்பதை உணர்ந்திருந்தேன். ஆனாலும் அவை உண்டாக்கிய சேதங்களும் வலிகளும் அதிகம். என் வாழ்வை எழுதியதைப் போல உணர்ந்தேன்.
கூத்தப்பாடி மா.பழனி, தருமபுரி.
இயற்கையைப் பாதுகாப்போம்
‘நி
பா எனும் புதிய அச்சுறுத்தல்!’ கட்டுரை படித்தேன் (மே 25). நாள்தோறும் புதுப் புது வியாதிகள், புதிய அச்சுறுத்தல்கள் மனித குலத்துக்கு எதிராக வந்துகொண்டே இருக்கின்றன. ‘புதிய நோய்கள் தோன்றக் காரணம் இயற்கையை அழிப்பது தான்’ என்ற உண்மையை அனைவரும் உணர்ந்து, அதற்கேற்றவாறு நம் வாழ்க்கையை மாற்றிக்கொள்வதே சிறந்தது.
சுந்தர்.அழகேசன், திருச்சுழி.
ஹிட்லர் அணுகுமுறை
ம
னித உரிமைச் செயல்பாட்டாளர் ஹென்றி டிஃபேன் நேர்காணல் (மே 24) படித்தேன். ஜனநாயக முறையில் போராடுவதைத் தன் அதிகபட்ச அதிகாரத்தின் மூலம் அடக்கிவிடலாம் என்று நினைத்தால் அது அறியாமையின் வெளிப்பாடு. நம் நாட்டை காந்தி தேசம் என்று நாம் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறோம். ஆனால் அரசாங்கம் ஹிட்லர் அணுகுமுறைக் கடைப்பிடிக்கிறது.
ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.
ஏழைக்கும் அதே விலை ஏற்புடையதா?
பெ
ட்ரோல், டீசல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஒரு பொருள் அரிதாக அல்லது விலை உயர்வாக இருக்கும்போது ரேஷனும் இரட்டை விலையும்தான் கை கொடுக்கும். அந்த வகையில் அரசு நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்குக் குறைந்த விலையிலும் மற்றவர்களுக்கு வழக்கமான விலையிலும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய வேண்டும். இரு சக்கர வாகனம் வைத்திருப்போருக்கு மாதத்துக்கு இத்தனை லிட்டர் என்ற கணக்கில் குறைந்த விலையிலும் அதற்கு மேல் உயர்த்தப்பட்ட விலையிலும் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும். குறைந்த வருவாய் ஈட்டும் ஏழை ஒருவருடைய இரு சக்கர வாகனத்துக்கும், லட்சக் கணக்கில் வருவாய் ஈட்டும் ஒருவருடைய காருக்கும் ஒரே விலையில் எரிபொருளை விற்பது எந்த வகையில் ஏற்புடையது?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT