Published : 15 May 2018 08:31 AM
Last Updated : 15 May 2018 08:31 AM
ந.பாலகிருஷ்ணன்,
கோவை.
இன்றைய தலைமுறைக்குத்
தெரிய வேண்டாமா?
மே
12 அன்று வெளியான நெல்லை - பாளையங்கோட்டை இடையே 1884-ல் கட்டப்பட்ட தாமிரபரணி ஆற்றுப் பாலத்தைப் பற்றிய கட்டுரை படித்தேன். பாலம் கட்ட வேண்டிய தேவை பற்றிய கோரிக்கை எழுந்தபோது, திருநெல்வேலி கலெக்டர் தாம்சன், அரசிடம் நிதி இல்லை. பொதுமக்களிடம் வசூல்செய்து கட்டலாம் என்று முடிவெடுத்தார். பொதுமக்களின் சிரமமான நிலையைப் பார்த்த சிரஸ்தார் சுலோச்சனா முதலியார், தனது சொத்துகளை விற்று ரூ.50,000 (இன்றைய மதிப்பு ரூ.10 கோடி) கொடுத்து பாலம் கட்டச்செய்தார். பாலம் அவரால் திறக்கப்பட்டது. இந்த விவரம் பாலத்தின் நுழைவில் கல்வெட்டாகப் பதியப்பட்டது. 1970-ல் பாலம் விரிவுபடுத்தப்பட்டபோது, அந்தக் கல்வெட்டு காணாமல் போய்விட்டது. வரலாறு மறைக்கப்பட்டுவிட்டது. இது தவறல்லவா? இன்றைய தலைமுறைக்கு இது தெரிய வேண்டாமா?
சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.
காலம் கடந்து நிற்கும் பிரதியை
உருவாக்கக் கவனம் அவசியம்!
ஒ
ரு படைப்பு, காலம் கடந்து கொண்டாடப்படுவதற்கு அதன் பாசாங்கற்ற யதார்த்தமும் உண்மைத் தன்மையுமே காரணமாக அமைகின்றன.
10 ஆண்டு உழைப்பில் லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘புத்துயிர்ப்பு’ நாவலை இன்றும் புதிதுபோல் வாசிக்க முடிகிறது. நாவலில் வரும் மாஸ்லாவும் ‘கடல்புரத்தில்’ நாவலில் வரும் பிலோமியும் நம்மால் மறக்க இயலுமா?இப்போதெல்லாம் அத்திப் பூத்தாற்போல் எப்போதாவது எழுதும் வண்ண நிலவனின் கடல்புரத்தில் நாவலை இன்று வாசித்தால்கூட மணப்பாடு கடலும் அது உட்பொதிந்த கண்ணீர் வாழ்வும் நம் மனத்தைக் கனமாக்கும். சாமர்செட் மாம் எழுதிய ‘மூன் அண்ட் சிக்ஸ் பென்ஸ்’ நாவலை வேற்று மொழி நாவல் என்று நம்மால் புறந்தள்ள முடியுமா? வாழ்வின் ஓடல்கள் எல்லாவற்றையும் தூக்கிஎறிந்துவிட்டு, தூரிகையோடு ஓவியனாய் மாறிப்போன மனிதனின் வாழ்வை அவர் எழுதும்போது, அவர் முன்வைக்கும் தத்துவார்த்தமான கருத்தியல் வாசகனுக்குள் எப்படி நிரம்பிவழிகிறது? சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’கூட அப்படித்தான். சுந்தர ராமசாமி ஒரு பிரதியை உருவாக்க எவ்வளவு கவனமாக இருந்தார் என்பதை அவர் அடித்துத் திருத்தி எழுதிய காகிதப் பக்கங்கள் இன்றும் சான்று சொல்கின்றன. கதை பிறந்த கதையைக் ‘கலை ஞாயிறு’ பகுதியில் சி.மோகன் மிக நேர்மையாகச் சொல்லியுள்ளார்.
ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
காலத்தின் கட்டாயம்!
பி
ரிட்டிஷ் இந்தியாவில் பிறந்து, பாரதியாரது ஒப்பற்ற பாரத சமுதாயத்தின் மாண்புகளைப் போற்றி வளர்ந்த என்னைப் போன்றவர்க்கு, தற்போதைய அரசியல் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றது. வாக்குக்குக் காசு முறை இன்று நாடு முழுவதும் பரவிவருவது பெரும் வேதனை. இன்றைய சூழலில் தன்னலம் கருதாது பணியாற்றும் ஒரு சமூக ஊழியர், பஞ்சாயத்து உறுப்பினர்கூட ஆக இயலாதவாறு பணம் தேர்தலை ஆக்கிரமித்துள்ளது. கர்நாடகத் தேர்தல் இதுவரை கண்டிராத அளவுக்கு அதல பாதாளத்துக்குச் சென்றுள்ளது. ஒரு நாட்டின் பிரதமரே வாக்குக்காகப் பொய்யுரைகளை வீசுவதும், ஊழல்வாதிகளை வேட்பாளர்களாக நிறுத்திவிட்டு, ஊழலைப் பற்றிப் பேசுவதும் மக்களை அடி முட்டாள்கள் என்று நினைப்பதை வெளிப்படுத்துகின்றது. இந்நிலையை மாற்ற முயல்வது காலத்தின் கட்டாயமாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT