Published : 07 May 2018 09:38 AM
Last Updated : 07 May 2018 09:38 AM
சு.தட்சிணாமூர்த்தி, பி.என்.புதூர்.
தமிழகத்தின் பங்களிப்பை உயர்த்திக் காட்டுவோம்!
மே
4-ல் வெளியான ‘அகில இந்தியத் தேர்வுகளில் பின்தங்குகிறதா தமிழகம்?’ என்கிற கட்டுரை வாசித்தேன். ஐஐடி, நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் நமது பின்னடைவின் இயல்பான அலசலாக இருந்தது. 10,12 வகுப்புப் பொதுத் தேர்வுகளில் பாடநூல் களிலிருந்து நேரடியான வினாக்கள் கேட்கப்படுவதும், அதற்குரிய விடைகள் மட்டும் தெரிந்திருந்தாலே அவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்று வெற்றியாளராகக் கருதப்படும் நிலையில், பாடத்திட்டத்தின் கருத்துருக்களும் பயன்பாடுகளும் மட்டுமே முதன்மையாகக் கொண்ட போட்டித் தேர்வுகளில், நமது மாணவர்கள் தோல்வியையே தழுவ வேண்டியுள்ளது. அதிலும் நகர்ப்புற மாணவர்களுக்குக் கிடைக்கும் பொருளாதார வசதியும், முழுவதும் வணிகமயமாகிவிட்ட பயிற்சி வகுப்பில் பயில்வதற்கான வாய்ப்பும், பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவர் களுக்கு எட்டாக்கனியாக இருப்பதும் தோல்வியின் சத விகிதத்தை அதிகரிக்கின்றது. வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்த உள்ள 1,3,5,7,9,11 வகுப்புப் பாடநூல்கள், போட்டித் தேர்வுகளை எளிதில் கையாளும் விதமாக கருத்துகளும் பயன்பாடுகளும் கொண்ட நூல்களாக வெளிவர இருப்பது வரவேற்கத்தக்கது. பள்ளிக் கல்வித் துறையின் முயற்சியும், ஆசிரியர் - மாணவரின் பங்களிப்பும் வரும் ஆண்டுகளில் போட்டித் தேர்வுகளில் தமிழகத்தின் பங்களிப்பை உயர்த்திக் காட்டும் என நம்புவோம்.
க.துள்ளுக்குட்டி, நூர்சாகிபுரம்.
பிணையல் மாடுகளும் மார்க்ஸும்!
எ
ஸ்.வி.ராஜதுரை எழுதிய ‘மார்க்ஸ்: விடுதலை யின் இலக்கணம்’ (மே.4) என்ற தலைப்பிலான கட்டுரையைப் படித்தவுடன், நிலத்திலிருந்து குடியிருந்த வீடு வரை விற்றுக் கடனை அடைத்ததுதான் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது.
மூன்று மாடுகளைப் பிரிக்கயிற்றால் இணைப்பது ஒரு பிணையல் மாடு ஜோடியாகும். ஒரு மரக்கா, ஒரு குறுக்கம், ஒரு ஏக்கர் என வகைப்படுத்தப்பட்ட நிலங்களில் விளையும் நெற்கதிரின் அடர்த்தியை வைத்துப் பிணையல் வட்டம் முடிவுசெய்யப்படும். அடித்துப் போட்ட நெற்கதிரில் மிஞ்சியிருக்கும் நெல்மணிகள் பிரியும் வரை மாடுகள் பிணையல் வட்டத்தில் சுத்த வேண்டும். அதற்கேற்பப் பிணையல் மாட்டு ஜோடிகளைக் களத்தில் இறக்கி நெற்கதிரை மிதிக்க விடுவர்.
எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து, அடித்த நெற் கதிரைக் களத்தில் போட்டுப் பிணையல் மாட்டு ஜோடிகள் மிதிப்பதை நிறுத்திவிட்டு டிராக்டர் வரும் வரை, ஒரு பிணையல் மாட்டு ஜோடிக்கு மூன்று படி முதல் ஐந்து படி வரை நெல் வழங்கப்பட்டது.
முதலாண்டு அறுவடையில் பெறப்பட்ட நெல்மணிகள் மறு ஆண்டு அறுவடை முடிந்த பின்பும், குறைந்தபட்சம் ஆறு மூட்டை நெல்மணிகளாவது எங்கள் வீட்டில் இருக்கும்; எலிகள் உண்டது போக! மணிக்கு இவ்வளவு ரூபாய் எனப் பிணையலுக்கு டிராக்டர் வந்த பின்பு, எங்கள் வீட்டு நெற்களஞ்சியத்தில் பெயருக்குக்கூட ஒரு நெல் மணியைப் பார்க்க முடிந்ததில்லை. எங்களின் உழைப்பு, உணவுக்கான அரிசியை வாங்கக்கூடப் போதவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT