Published : 14 May 2018 08:46 AM
Last Updated : 14 May 2018 08:46 AM
செல்லமுத்து, மதுரை.
வதந்திகளும் வன்முறையும்
கு
ழந்தைக் கடத்தல் காரர்கள் வந்திருப்பதாகப் பரவிவரும் வாட்ஸப் வதந்திகள் காரணமாக அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் வேதனை தருகின்றன. முன்பெல்லாம் வட மாநிலங்களில் எங்கோ ஒரு மூலையில் இதுபோன்ற கும்பல் கொலைகள் நடப்பதாகச் செய்திகள் மூலம் தெரிந்துகொண்டோம். இன்றோ தமிழகத்திலேயே இப்படிப்பட்ட கொடூரச் சம்பவங்கள் நடப்ப தைப் பார்க்கும்போது அதிர்ச்சி யாக இருக்கிறது. தங்களுக்கு வரும் வாட்ஸப் செய்திகளின் நம்பகத்தன்மை பற்றிக் கவலைப்படாமல் மற்றவர் களுக்கு அனுப்புகிறவர்கள், தங்களை அறியாமலேயே கொலைக் குற்றங்களுக்குத் துணைபோகிறார்கள். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடராமல் தடுப்பது மிக மிக அவசியம்!
சுந்தர்.அழகேசன், திருச்சுழி.
நூறாண்டுக் காலம் வாழ்க!
‘அ
டுத்த பாய்ச்சலுக்குத் தயாராகும் லிஃப்கோ’ (மே 10) செய்தி படித்தேன். ஆங்கிலம் - தமிழ் அகராதி என்றாலே லிஃப்கோதான் நினைவுக்கு வரும். 1929-ல் பிரசுரமான லிஃப்கோ அகராதி இன்னும் வீட்டில் இருக்கிறது. அப்பா படித்து பிறகு அண்ணா, அக்கா, நான் என்று எங்கள் குடும்பத்தினர் அனைவரும் படித்தது இதைத்தான். இன்னும் பல தலைமுறைகள் லிஃப்கோவுடன் வாழ்வார்கள். 90-வது ஆண்டு விழா மட்டுமல்ல; இன்னும் பல நூற்றாண்டு விழா காண வாழ்த்துகிறோம்!
பேராசிரியர் செ.சேவியர், திருச்சி.
திட்டங்கள் யாருக்கானவை?
கூ
ட்டாட்சித் தத்துவத்துக்கு விடுக்கப்படும் சவாலாகவே தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களைப் பார்க்க வேண்டியுள்ளது. ஸ்டெர்லைட், நியூட்ரினோ, ஷேல் கேஸ், கூடங்குளம், நெடுவாசல் ஆகியவற்றைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டக் கிராமங்களிலும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்க சுமார் 46 இடங்களில் ஆழ்துளைக்கிணறு அமைக்க முடிவுசெய்துள்ளனர். அங்குள்ள இளையோர் எதிர்த்தவுடன் பின்வாங்கியிருப்பது ஒரு நாடகம் போலவே இருக்கிறது. மக்களுக்குத் தேவையான, இயற்கைச் சமன்பாடு மாற்றப்படாத, வெகுமக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகின்ற, நாட்டின் முன்னேற்றத்துக்குப் பயன்படுகின்ற திட்டங்கள்தான் தேவை; பன்னாட்டு நிறுவனங் களுக்கு லாபம் தரும் திட்டங்கள் அல்ல.
ரவிச்சந்திரன், மின்னஞ்சல் வழியாக…
எண்ணெய் விலை மர்மம்!
அ
ரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை விலையை உயர்த்தாததன் பின்னணியில் உள்ள மர்மம் - கர்நாடகத் தேர்தல்தான் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது ‘பெட்ரோல், டீசல் விலையில் தேர்தல் அரசியல் கூடாது!’ (மே 11) தலையங்கம். மத்திய அரசின் கண் ஜாடைக்குக் கட்டுப்பட்டு, பெட்ரோல்-டீசல் விற்பனை விலையை உயர்த்தாமல் எண்ணெய் நிறுவனங்கள் மவுனம் காக்கின்றன என்றால், தேர்தல் வெற்றிக்காக அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் - குறிப்பாக மக்களின் வாழ்வில் நேரடியாகத் தொடர்புள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? ஓர் அரசு இப்படிச் செயல்பட்டால், அதன் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT