Published : 11 Apr 2018 09:40 AM
Last Updated : 11 Apr 2018 09:40 AM
வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.
தமிழக
விவசாயிகளின்
ஓலம் உச்ச நீதிமன்றத்துக்குக் கேட்குமா?
ஏப்ரல் 10-ல் வெளியான ‘காவிரி என்பது வெறும் நீரல்ல’ என்ற கட்டுரை வாசித்தேன். நாம் இழந்திருப்பது விவசாயத்துக்கான நீரை மட்டுமே என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு நமது பண்பாட்டு கலாச்சாரங்களின் பெரும் பகுதியை இழந்து இருக்கிறோம் என்பதைப் புரிய வைத்தது. காவிரியில் நடைபெற்று வந்த அனைத்து கடவுள் வழிபாடுகளுமே கடவுளின் பெயரால் நாம் காவிரியைக் கௌரவித்துவந்துள்ளோம். ஆனால், காவிரி தற்போது வறண்டுவிட்டது. அதனால் கடவுளுக்குக்கூட கைப்பிடி நீரால்தான் அபிஷேகம் என்றாகிவிட்டது. நேற்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழர்களுக்கு நிச்சயம் ஒரு பின்னடைவாகவே பார்க்க வேண்டியுள்ளது. அவர்கள் கண்டிப்புடன் கூறிய தீர்ப்பை அவர்களே மீண்டும் கண்டனத்துடன் மாற்ற முடியும் என்பது நீதியை நம்பியவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமிழக விவசாயிகளுக்குத் தண்ணீர் தர நாங்கள் இருக்கிறோம் என்ற உச்ச நீதிமன்ற நீதியரசர்களின் வார்த்தைகளில் இதுநாள் வரை இருந்த நம்பிக்கை இப்போது குறைய ஆரம்பித்துள்ளது. ‘தண்ணீர் தர நீங்கள் இருப்பீர்கள் அதுவரை நாங்கள் இருப்போமா’ எனும் தமிழக விவசாயிகளின் ஓலம் உச்ச நீதிமன்றத்துக்குக் கேட்குமா?
சு.பாலகணேஷ், திருச்செந்தூர்
ஒலிம்பிக் போட்டிகளுக்கும் தயாராவோம்!
ஆ
ஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட்டில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் நாடுகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் இம்முறை இந்திய இளம் வீரர்கள் அதிகமான தங்கப் பதக்கங்களைப் பெற சாத்தியமுள்ளது. இச்செய்தி இளம் விளையாட்டு வீரர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. ‘ஸ்போர்ட்ஸ் கோட்டா’ என்பது படிப்புக்கும் வேலைக்கும் மட்டும் உதவிய காலம்மாறி, இன்று உலக அளவில் சாதனையாளர்களாக உத்வேகம் தரும் நிகழ்வாக காமன்வெல்த் போட்டிகள் அமைந்துள்ளன. ‘கேலோ இந்தியா’ திட்டத்தின் மூலம் இளம் விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து உரிய பயிற்சி அளித்து ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா தயாராக வேண்டிய தருணம் இது.
சிவ.ராஜ்குமார், சிதம்பரம்.
அத்துமீறும் காவலர்கள்
சென்னையில் சாலைவிதியை மீறிய பிரகாஷை அவரது குடும்பத்தினர் கண்முன்னே கட்டிவைத்து அடித்ததைக் கண்டித்து எழுதப்பட்ட ‘காவலர்கள் அத்துமீறலாமா?’ (ஏப்ரல் 10) என்ற தலையங்கம் வாசித்தேன். தனிமனிதனின் சுதந்திரம், பாதுகாப்பு இவற்றுக்கு ஒரு ஊடகம் அளித்திருக்கும் முக்கியத்துவத்தை, சமூக அக்கறையை இந்தத் தலையங்கம் வெளிப்படுத்துகிறது. தவிரவும், ஒரு நபரை ஒரு கம்பத்தோடு சேர்த்து ஒரு காவலர் தன் முழுபலம் கொண்டவரையில் பிடித்துக்கொள்வதும், அவரை இன்னொரு காவலர் பலம் முழுக்கப் பிரயோகித்து அவர் கையை முறுக்குவதும், இன்னொரு காவலர் அவர் பின்னால் நின்று தாக்குவதும், அவர்கள் மூவரிடமுமிருந்து வாலிபர் முரண்டுபிடிப்பதுமான காட்சி மனதை உலுக்குகிறது. காவலர்கள் பொதுமக்களை பொதுஇடத்தில் அவமானப்படுத்துதல் அபாயகரமானது. காவலர்களால் அவமானப்படுத்தப்பட்ட பலர் உயிரை மாய்த்துக்கொண்ட துயர சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. நடந்த அத்துமீறலுக்குக் காவல்துறை பொய்க்காரணம் கற்பிப்பது வாடிக்கைதான். இந்த வாக்கியங்களில் ‘காவலர்’ எனும் வார்த்தையை உபயோகிப்பது எவ்வளவு அபத்தமாக ஒலிக்கிறது?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT