Published : 03 Apr 2018 08:51 AM
Last Updated : 03 Apr 2018 08:51 AM
வாசிப்பு எனும் வழிகாட்டி!
மார்ச் 31 அன்று வெளியான ‘கோடை விடுமுறையைப் புத்தகங்களோடு திட்டமிடுங்கள்’ தலையங்கம் படித்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வாசிப்பு அனுபவம் வசீகரம் மிக்கதாக மாறத் தொடங்குவது அறியாப் பருவத்தில்தான். சின்னஞ்சிறு வயதில் வண்ண வண்ணப் படங்களுடன் இருக்கும் காமிக்ஸ் புத்தகங்களும், வீர தீர சாகச நிகழ்வுகளுடன் கூடிய புதினங்களுமே வாசிப்பை நோக்கிக் குழந்தைகளை ஈர்ப்பவை. தொலைக்காட்சி, மடிக்கணினி, அலைபேசி ஆகியவற்றில் சிறையுண்டு இருக்கும் இளைய தலைமுறையை மனமலர்ச்சியுடன், அறிவார்ந்த குடிமக்களாக உயர்த்துவதற்கு வாசிப்பு வழிவகுக்கும். இன்று எல்லா ரசனைகளுக்கும் ஏற்ற புத்தகங்கள் நம்முன் குவிந்துகிடக்கின்றன. குழந்தைகள் தங்களுக்கான புத்தகங்களைத் தேர்வுசெய்யும் சுதந்திரத்தை நாம் அளிக்க வேண்டும். வாசிக்கும் சூழலை உருவாக்கித் தருவதும் பெற்றோரின் கடமை. கோடை விடுமுறையை அர்த்தபூர்வமாக செலவழிப்பதற்குக் குழந்தைகளுக்கு வழிகாட்டுவோம்!
- ரஞ்சனி பாசு, மின்னஞ்சல் வழியாக...
ஜானகியம்மாளுக்குப் பாராட்டுகள்!
ஞாயிறு அரங்கம் பகுதியில் வெளியான ‘காமதேனு’ இதழ் கட்டுரை (‘பெண்கள் என்ன கடைச் சரக்கா?’) மிகச் சிறப்பானது. ஆர்யாவின் ‘சுயம்வரம்’ நிகழ்ச்சி பற்றி வழக்கு தொடர்ந்த ஜானகியம்மாளுக்குப் பாராட்டுகள். பெண்களை இழிவுபடுத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தங்கள் பெண்கள் கலந்துகொள்ள எப்படித்தான் பெற்றோர்கள் அனுமதி தருகிறார்கள்? பெண்கள் எந்த தைரியத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ள முன்வருகிறார்கள்? பொழுதுபோக்கு எனும் பெயரில் ஒளிபரப்பாகும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நாம் அனுமதிக்கக் கூடாது. இதை மக்களின் கவனத்துக்குக் கொண்டுவந்த 'காமதேனு' வார இதழும் 'தி இந்து' நாளிதழும் பாராட்டுக்குரியவை.
- யசோதா பழனிச்சாமி, ஈரோடு.
கேள்விக்குறியான நம்பகத்தன்மை
ஏப்ரல் 2 அன்று வெளியான ‘சிபிஎஸ்இ தேர்வு மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்!’ தலையங்கம் மிக முக்கியமான பிரச்சினையைப் பதிவுசெய்திருக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பங்கு பொதுத் தேர்வுகளுக்கு உண்டு என்ற வகையில், வினாத்தாள் வெளியாவது என்பது தீவிரமான பிரச்சினை. சிபிஎஸ்இ தேர்வில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு வினாத்தாள்கள் வெளியாகியிருப்பதன் மூலம் சிபிஎஸ்இ மீதான நம்பகத்தன்மை கேள்விக்குரியதாகியிருக்கிறது. இந்நிலையில், இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
- அன்பழகன், திருச்சி.
காவிரி விஷயத்தில் ஒற்றுமை அவசியம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது. ஆனால், இங்கே என்ன நடக்கிறது? முதல்வர் , துணை முதல்வர் இல்லாமல் அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறது. திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் அனைத்துக்கட்சிக் கூட்டம், கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன. பாமக கடையடைப்பு நடத்துகிறது.
இப்படி எல்லாக் கட்சியினரும் தங்களுடைய கண்டனத்தைப் பெயருடன் பதிவுசெய்ய விரும்புகிறார்களே ஒழிய, மத்திய அரசை உலுக்கி எடுக்கும் வகையில் ஒற்றுமையாகப் போராடுவோம் என்ற எண்ணமே இல்லை. தேர்தல் ஆதாயத்துக்காக மட்டும் யாரும் யாரோடு வேண்டுமானாலும் கூட்டுசேர்கிறார்கள். இதுதான் தமிழக அரசியல் கட்சிகளின் பலவீனம். இந்தப் பலவீனம் தொடரும் வரை அசுர பலம் கொண்ட மத்திய அரசு எதையும் கண்டுகொள்ளாமல்தான் இருக்கும்!
- ஹெச். உமர் பாரூக், திண்டுக்கல் மாவட்டம் .
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT