Published : 13 Apr 2018 09:12 AM
Last Updated : 13 Apr 2018 09:12 AM
ராமராஜன் சுப்புராஜ்,
அருப்புக்கோட்டை
உழுதவன் கணக்கு
பாரம்பரியமாக விவசாயம் செய்யும் எங்கள் குடும்பத்தில் என்னையும் சேர்த்து 7 பேர். விவசாயம் பார்த்து எங்களை ஆளாக்க முடியாதென்று மிதிவண்டியில் அலுமினியப் பாத்திர வியாபாரம் செய்தனர் பெற்றோர். கல்விக் கடன் வாங்கி பொறியாளர் பட்டம்பெற்று பிரபல தனியார் நிறுவனத்தில் பணி கிடைத்து, 5 வருடங்களாகின்றன. மீண்டும், சொந்த ஊரிலுள்ள எம் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். வானம் பார்த்த பூமியாதலால், பருவமழையை எதிர்பார்த்து 6 ஏக்கர் முழுவதும் மக்காச்சோளம் விதைத்தோம். கடந்த பிப்ரவரி மாதம் அறுவடை - மகசூல் எடுத்து எடை வைத்து, வாங்கிய கடனுக்கு சமன் செய்ததில் மிஞ்சியது 500 ரூபாய்தான். உழுத காசு முதல் சோளமணிகள் பிரியும் வரை ஆன செலவுகள் எங்கள் ஓராண்டு உழைப்பை விழுங்கி விட்டன. வீட்டிலும் கிராமத்திலும் என் தலைமுறை பிள்ளைகள் யாரும் விவசாயம் செய்யவில்லை. ஏறத்தாழ தமிழகத்தின் குக்கிராமங்களின் நிலை இதுதான். நிச்சயம் ஒரு நாள், ஒரு கிலோ அரிசி ரூ.200 ரூபாய் விற்கும். அன்று இந்த ஏழை மக்கள், உங்கள் வரிகளில் சொன்னால்... `இன்னும் எத்தனை பேர் மாநகரத்துச் சாலைகளில் பிச்சை எடுத்துக் கொண்டும், பொம்மைகள் விற்றுக் கொண்டும் பரட்டைத் தலையுடன் அலைவார்களோ!'
வ.சுந்தரராஜு, முன்னாள் துணை வனப் பாதுகாவலர், திருச்சி
வனங்கள் விலைமதிப்பற்றவை
ஏப்ரல் 12-ல் வெளியான 'வன வளர்ப்பில் சமூகங்களுக்கு அக்கறை வேண்டாமா?' என்ற நேஹா சின்ஹாவின் கட்டுரை பாராட்டுக்குரியது. மிகமிக அத்தியாவசியமான திட்டங்கள் தவிர இதர திட்டங்களுக்கு வன நிலம் ஒதுக்கப்படுவது தடை செய்யப்படவேண்டும். 2002ஆம் ஆண்டு பல்லுயிர்ப் பெருக்கப் பாதுகாப்புச் சட்டத்தின் படி ஒவ்வொரு ஊராட்சியிலும் மேலாண்மைக் குழு அமைக்கப்படுவதோடு, தயார் செய்யப்படும் மக்களுக்கான பல்லுயிர்ப் பதிவேட்டையும், பல்லுயிர் நிர்வாகக் குழுவையும் வன வரைவுக் கொள்கையில் இணைத்தால்தான் வனங்களை நாம் திறமையாக நிர்வகிக்க முடியும். தற்போது பயன்பாட்டில் உள்ள டிஜிட்டல்மய வனவரைபடங்களை மேம்படுத்தி, நவீன வனப்பாதுகாப்பு சாதனங்களையும் பயன்படுத்தினால் மட்டுமே, வனங்களை அறிவியல் முறையில் திறம்பட மேலாண்மை செய்ய இயலும். வணிகப் பயன்பாட்டிற்காக வனங்களைப் பராமரிக்கவேண்டும் என்ற கூற்று ஏற்கும்படியாக இல்லை. வன ஆக்கிரமிப்பு, மரம் வெட்டிக் கடத்துதல், காட்டுத்தீ, கள்ள வேட்டை, களைச் செடிகள் ஊடுருவல் போன்றவற்றைத் தடுக்கவும், காடுகளைப் பாதுகாக்கவும், அதன் பரப்பளவை அதிகரிக்கவும் காடுகளில் வாழ்பவர்கள் மற்றும் அதைச் சார்ந்து வாழ்பவர்களையும் பங்களிப்பாளர்களாக மாற்றவேண்டும். கலாச்சார மதிப்புமட்டுமல்லாது, வனங்கள் ஆற்றும் சூழலியல் சேவைகள் விலைமதிப்பற்றவை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
என். மணி, ஈரோடு.
சொல்லோவியம் அற்புதம்!
மதுவுக்கு ஒப்புக்கொடுக்க ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை முன் வைக்கிறார்கள். அதில் மண்டோ முன்னிறுத்திய காரணம், மனிதகுல துயரங்களைத் தாங்கமுடியவில்லை என்பது. மதுவுக்கு அடிமையாகும் மனித உளவியல்தான் உற்றுநோக்கப்பட வேண்டியது. அத்தகைய சிரத்தை இருந்தால் மண்டோவைப் போன்ற பலரைக் காக்க முடியும். மதுவுக்கு மண்டோ அடிமையான சூழலைக் கடந்து பார்த்தால், ஒரு எழுத்தாளனை வடித்தெடுக்கும் காரணிகளும் அ.வெண்ணிலாவின் விவரிப்பிலிருந்து புரிந்துகொள்ள முடியும். ‘மதுக் கோப்பையில் அஸ்தமித்த சூரியன்’ (ஏப்ரல்.12) என்ற தலைப்பு கட்டுரைக்கு மிகவும் பொருத்தமானதே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT