Published : 05 Apr 2018 09:53 AM
Last Updated : 05 Apr 2018 09:53 AM
பெற்றோர் எதிர்கொள்ளும் சிரமங்கள்
ஏ
ப்ரல் 4 இதழில் பா.செயப்பிரகாசம் எழுதிய ‘குழந்தைகள் பெண்கள் தேர்வுகள்’ கட்டுரை படித்தேன். என் பெற்றோர் இருவரும் ஆசிரியப் பெருமக்கள்தான். எங்கள் படிப்பு குறித்து அவர்களுக்கு அக்கறை இருந்தது. ஆனால், இந்தக் காலத்தில் பெற்றோர்கள் சிரமங்களை எதிர்கொள்வதுபோல் அப்போது இல்லை. இப்போதோ பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கல்விக்காகச் செலவுசெய்தது போதாது என்று அவர்களோடு யுத்தமே செய்கிறார்கள். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில் ஆரம்பிக்கும் யுத்தம், அவர்கள் படித்து முடித்து வேலைக்குப் போகும்வரை தொடர்கிறது. இந்த நிலை மாற அனைத்துத் தரப்பினரும் முயற்சி எடுக்க வேண்டும்.
- சுந்தர்.அழகேசன், திருச்சுழி.
வறட்டுக் கருத்தாளர்களுக்கு
நல்ல அறிவுரை
ஏ
ப்ரல் 4 அன்று வெளியான ‘சுற்றுச்சூழல் பிரச்சினைகள்: சரியாகத்தான் பேசுகிறோமா?' என கட்டுரை வலுவான வாதத்தை முன்வைத்திருக்கிறது. ஒரு பிரச்சினையின் மூலத்தை நன்றாக உள்வாங்கிக் கொண்டு, அதற்குத் தகுந்த கருத்துகளுடன் பேச்சும் செயல்பாடும் அமைய வேண்டும் என்று அந்தக் கட்டுரை உணர்த்துகிறது. வறட்டுக் கருத்து சொல்வதையும் அடிப்படையே புரியாமல் பேசுவதையும் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் கட்டுரை ஆசிரியர் சாடியிருக்கும் விதம் மெச்சும்படியாய் இருக்கிறது. இது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, சமூகம், பொருளாதாரம், மருத்துவம் போன்ற துறைகளுக்கும் பொருந்தும். 'ஒரு பிரச்சினை சார்ந்த புரிதலும், தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கக் கூடாது என்ற தீர்மான உணர்வும், அறிவியல் அடிப்படையிலும், தர்க்கரீதியாகவும் அமையும்போதே மக்களின் பிடிப்பு நீடிக்கும்' என்ற ஆசிரியரின் கருத்து கவனத்தில் நிறுத்தப்பட வேண்டிய உண்மை.
- வெ. பாஸ்கர், அலங்காநல்லூர்.
காவலர்களுக்கு யார் தந்த
அதிகாரம் இது?
தி
ருச்சி, துவாக்குடியில் கடந்த மாதம் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர், போக்குவரத்துக் காவலரின் அடாவடி நடவடிக்கைக்கு ஆளாகித் தன் மனைவியைப் பறிகொடுத்தார். இது நடந்து ஒரு மாதமாகவில்லை. சென்னை, தியாகராய நகரில் தன் தாய், தங்கையுடன் ஒரே இருசக்கர வாகனத்தில் தலைக்கவசமின்றிப் பயணித்த இளைஞர் ஒருவர் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி தருகிறது. சட்டரீதியான அபராதத்துக்கும் தண்டனைக்கும் உரியவர்தான் அந்த இளைஞர். ஆனால், அதே நேரத்தில் மூன்று காவலர்கள் அந்த இளைஞரைப் பொது இடத்தில் மக்கள் முன்னிலையில் தாக்கியதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இப்படித் துன்புறுத்துகின்ற அதிகாரத்தைக் காவலர்களுக்கு எந்தச் சட்டம் அளிக்கிறது? இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாக நிகழாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்!
- கு.மா.பா.திருநாவுக்கரசு, சென்னை.
பொருத்தமான தீர்ப்பா?
ஏ
ப்ரல் 2-ல் வெளியான ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் தவறான சமிக்ஞை’ கட்டுரை, சில தினங்களுக்குமுன் உச்ச நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பின் பாதக விளைவுகளை அலசுகிறது. இந்திய அரசியல் சட்டம் தீண்டாமையைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து, 68 ஆண்டுகள் ஆகின்றன. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டு 45 ஆண்டுகள் ஆகின்றன. இன்றும் தலித் மக்கள் சுயமரியாதையுடன் வாழ முடியவில்லை. அவர்கள்மீது ஏவப்படும் வன்கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரிக்கின்றன. சில தினங்களுக்கு முன் குஜராத்தில் குதிரையில் ஏறிச்சென்றார் என்பதற்காக தலித் இளைஞர் படுகொலைசெய்யப்பட்டார். இது போன்ற வன்கொடுமைகள் அதிகரித்துவரும் சூழ்நிலையில் இருக்கின்ற சட்டத்தையும் நீர்த்துப்போகின்ற வகையில் தீர்ப்பளிப்பது எத்தகைய முரண்!
- ப.சரவணன், கோயம்புத்தூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT