Published : 09 Feb 2018 09:03 AM
Last Updated : 09 Feb 2018 09:03 AM
எழுத்தறி‘வித்தவனை’ என்ன சொல்லி அழைப்பது?
பிப். 8 அன்று வெளியான ‘கற்றுத் தெளிந்த அறிவு அறத்தைப் போதிக்கவில்லையா?’ என்கிற கட்டுரை, கல்வி கடைச்சரக்காய் மாறிவிட்ட அவலத்தையே உணர்த்துகிறது. கல்வியால் உயர் நிலைக்கு வந்தவரகள், அது கற்றுத்தந்த உயர் குணங்களை உதறித் தள்ளுவதும், உதாசீனப்படுத்துவதும் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி மிதிக்கும் செயல். இன்று நேற்றல்ல.. கால் நூற்றாண்டு காலமாய், கல்வித் துறை வியாபாரமாகிப் போனதைக் கண்டு கொதித்தெழுந்த ஒரு நேர்மையாளரின் உள்ளக் குமுறல் இந்தக் கட்டுரை. ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்று நாம் படித்திருக் கிறோம். ஆனால் இங்கே, எழுத்தையும் அறிவையும் விற்றவர்களை.. விற்பவர்களை என்ன சொல்லி அழைப்பது? இது போன்ற ஊழல்களில் அரசியல் பின்னணி இருப்பத மறுக்க முடியாது. கடந்த கால் நூற்றாண்டாக, உயர் கல்வித் துறையில் ஊழல் என்பது பல்கலைக்கழகப் பணி நியமனங்களில் மட்டுமின்றி, அஞ்சல்வழிக் கல்வி மூலம் பட்டங்களை விற்பதிலும் நடந்தேறிவருகிறது. கலாச்சாரத்துக்கு வித்திடும் கல்வியில் ஊழல் நடைபெறுவதைத் தடுக்க நாம் என்ன செய்யப்போகிறோம்?
- வெ.பாஸ்கர், அலங்காநல்லூர்.
கல்விக் கோயிலும் அடையாளம்
பி
ப். 8 இதழில் வெளியான ‘ஆழ்வார் புத்தகக் கடை இனி என்னவாகும்?’ கட்டுரை கண்ணீரை வரவழைத்தது. ஆழ்வாரும் மறைந்து, அவருக்குப் பின்னால் புத்தகக் கடையை ஒரு தவம்போல் நடத்திவந்த அவரது மனைவியும் இறந்தது, புத்தகப் பிரியர்களுக்குப் பேரிழப்பு. அண்ணா இப்புத்தகக் கடையின் வாடிக்கையாளர் என்றால், எத்தகைய சிறந்த புத்தகங்கள் இக்கடையில் கிடைக்கும் என்பது சொல்லாமலே விளங்கும். மயிலாப்பூருக்கான அடையாளங்களில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு அடுத்து இந்தக் கல்விக் கோயிலும் சிறப்பானதொரு அடையாளமாகும். மழை, வெள்ளம், ஆக்கிரமிப்புகளை அகற்றல் ஆகியவற்றைத்தாண்டியும் இக்கடை இயங்கியது. ஒருமுறை மாநகராட்சி அதிகாரிகள் இவரது கடையையும் லாரியில் அள்ளிக்கொண்டு சென்றுவிட்டனர். இதனை அறிந்த அப்போதைய மாநகராட்சி ஆணையர் ஷீலாராணி சுங்கத், அதிகாரிகளிடம் சொல்லி, ஆழ்வாரிடம் திரும்பவும் புத்தகங்களை ஒப்படைக்கச் சொன்ன வரலாறு இந்தப் புத்தகக் கடைக்கு உண்டு. இந்தக் கடை தொடர்ந்து இயங்க, புத்தக ஆர்வலர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.
- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.
ஆ
ழ்வார் புத்தகக் கடையைப் பற்றிய ஒரு நிமிடக் கட்டுரையைப் படித்ததிலிருந்து என் குலதெய்வக் கோயிலுக்கு ஏதோ தீங்கு ஏற்பட்டதுபோல அப்படி ஒரு கவலை உண்டானது எனக்கு. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஒருமுறை இந்தப் புத்தகக் கடையைப் பற்றி சிலாகித்து முன்பு எழுதிய ஞாபகம். இந்த கடையைக் காப்பாற்ற என்ன செய்யப்போகிறோம் என்றுதான் புரியவில்லை?
- கோ.கிருஷ்ணமூர்த்தி, கடலூர்.
பொருளாதார நம்பிக்கைகள்
பி
ப். 8 அன்று வெளியான ‘பங்குச் சந்தை சரிவும் பொருளாதாரமும்’ கட்டுரை படித்தேன். பங்குகளின் முக மதிப்பு அல்லது விற்பனை மதிப்பு குறைவதால் எதிர்காலப் பொருளாதாரப் போக்கைக் கணிக்க முடியாது என்பதைக் கட்டுரையாளர் பால் க்ரூக்மேன் எளிமையாக உணர்த்தியிருக்கிறார். தவறான நம்பிக்கைகளை இக்கட்டுரை தகர்த்திருக்கிறது. அமெரிக்கப் பங்குச் சந்தை பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை என்றாலும் இந்தியாவுக்கும் பொருந்தக்கூடிய அம்சங்கள் இதில் ஏராளம் இருக்கின்றன.
- ரகு, திருச்சி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT