Published : 12 Feb 2018 09:22 AM
Last Updated : 12 Feb 2018 09:22 AM
நேயம் மிக்க இளைஞர்களை வளர்ப்போம்
க
ல்வித் துறை மட்டுமின்றி நாமும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய சூழலில் உள்ளதைத்தான் ‘ரத்தம் சிந்தும் வகுப்பறைகள்: நாம் என்ன செய்ய வேண்டும்?’ (பிப்.9) கட்டுரை உணர்த்தியது. வேலை - பணம் ஈட்டுதலை மட்டுமே மையப்படுத்தப்பட்ட கற்றல் - கற்பித்தல் உள்ள இன்றைய நிலையில், மாணவர் - ஆசிரியர், மாணவர் - பெற்றோர் உறவு புரிதலின்றி, மன உளைச்சலுக்கும் உட்ச பட்சமாக விபரீதமான முடிவுகளுக்கும் வித்திடுகின்றன என்கின்ற வாதங்கள் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல. பள்ளி, கல்லூரிகளில் இன்றைய மாணவ சமுதாயம் கற்க வேண்டியவை ஏராளமாக உள்ளன. பிராய்லர் கோழி வளர்ப்பில் சதை வளர்ச்சி மட்டுமே குறிக்கோள் என்பதுபோல, வேலைவாய்ப்பையே அடிப்படையாகக் கொண்ட கற்றலில் ஒழுக்கம், நேர்மை, மனித நேயம், சுயமரியாதை, தன்னம்பிக்கை, சமூக அக்கறை, நேரிய சிந்தனை போன்றவையெல்லாம் அடிபட்டுப்போகின்றன. இவற்றையெல்லாம் பள்ளி, கல்லூரிகள் தவிர வேறெங்கும் பயில்வதற்கு வாய்ப்பில்லை. ஆசிரியர்களின்றி வேறு யாராலும் கற்றுத் தரவும் இயலாது. ஒழுக்கம் நிறைந்த மாணவர்கள்தான் ஓரளவேனும் நேர்மையாக இருப்பார்கள். ஒழுக்கமும் நேர்மையும் நிறைந்து காணப்படும் ஒருவனிடத்தில் மனித நேயம் இயல்பாகவே காணப்படும். மனித நேயம் மிக்க இளைஞனால் மட்டுமே, நாட்டின் தலைசிறந்த குடிமகனாகத் திகழ முடியும். ஆகவே, ஆசிரியர்கள் முதலில் கற்பிக்க வேண்டியது ஒழுக்கம்தான். ஒழுக்கம் மிக்க மாணவர்களை உருவாக்கு தன் மூலம் வன்முறையற்ற சமுதாயம் உருவாகும்.
- சு.தட்சிணாமூர்த்தி, புதூர்.
ஆ
யிஷா.இரா.நடராசன் எழுதியிருந்த ரத்தம் சிந்தும் வகுப்பறைகள்: நாம் என்ன செய்ய வேண்டும்?’ கட்டுரை, நாம் குழந்தை வளர்ப் பிலும், கல்வியின் அணுகுமுறையிலும், ஆசிரியர் - மாணவர் தோழமையிலும், பெற்றோர் - குழந்தைகள் உறவு முறையிலும் தெளிவின்றி இருக்கிறோமோ என்கிற அச்சத்தைத் தருகிறது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகள் மீது எதையும் திணிக்காமல், அவர்களை நம் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்கிறவர்களாக மட்டும் வளர்க்காமல் இருந்தாலே போதும். வகுப்பறைகள், குழந்தை நேய வகுப்பறைகளாகவும் கற்றல் மகிழ்ச்சியாக நடைபெறும் இடமாகவும் மாறும். அப்படியான மாற்றத்துக்கு நாம் அனைவரும் தயாராவோம்.
- க.விக்னேஷ், காரைக்குடி.
இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்!
செ
ல்வ.புவியரசன் எழுதிய ‘தற்காலிகமாகத் தப்பித்தது கேப் டவுன்’ என்கிற கட்டுரையில் (பிப். 8), தென்னாப்பிரிக்க நகரமான கேப் டவுனில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர்ப் பற்றாக்குறையையும் குடிநீர் நெருக்கடியையும் அறிந்துகொள்ள முடிந்தது. நீர், நிலம், காற்று இவை மாசுபடுதலும் இவற்றைத் தரமாக நுகர்வதிலும் உள்ள பிரச்சினைகள் நம் நகரங்களிலும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. மண்ணின் மணத்தோடும் ஊற்றுநீரின் ருசியோடும் குளத்து நீரின் ஸ்பரிசத்தோடும் உழைத்துக் களித்து வாழ முடிந்த நிலப்பரப்புகளிலிருந்தும்கூட, மக்கள் கூட்டம் கூட்டமாய் நகரங்களை நோக்கி நகர நிர்ப்பந்திக்கப்படுவது கவலையளிப்பதாகவே உள்ளது. உயிர்ப்புள்ள வாழ்தலுக்காக உழைத்த மக்கள், பொருளாதாரரீதியாக நகரங்களை நோக்கி இடம்பெயர்வது பெருந் துயரங்களுக்கும் சுற்றுச்சூழல் - சுகாதாரச் சீர்கேடுகளுக்குமே வழிவகுக்கிறது.
- மருதம் செல்வா, திருப்பூர்.
பிரவரம் என்பது...
பி
ப். 11 (ஞாயிறு) அன்று வெளியான ‘பெண் இன்று’ இணைப்பில் ‘முகூர்த்தம்@கல் யாண்’ தொடரில், பிராமணர்கள் திருமண முறை பற்றிய குறிப்பு வெளியாகியிருந்தது. திருமணம், ஸப்தபதி நிகழ்வுக்குப் பிறகு, ‘பிரவரம்’ எனப்படும் நிகழ்வு நடைபெறும் என்று எழுதியிருந்தோம். இது தவறு. கன்னிகாதானம், மாங்கல்ய தாரணம் ஆகியவற்றுக்கு முன்பாகவே நடைபெறு வது பிரவரம். தவறுக்கு வருந்துகிறோம்.
- ஆசிரியர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT