Published : 27 Feb 2018 09:22 AM
Last Updated : 27 Feb 2018 09:22 AM
தாய்வீடு திரும்பும் குழந்தைகள்!
‘எ
ண்ணமெல்லாம் வண்ணமம்மா!’ கட்டுரை வாசித்தேன். இந்தக் கட்டுரை உள்ளிட்ட பல கட்டுரைகள், அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிகுறித்த பல செய்திகளைத் தாங்கிவருவதைத் தொடர்ந்து ‘தி இந்து’வில் படித்துவருகிறேன். தனியார்மயத்தின் வருகையால் கடந்த பத்தாண்டுகளில் தமிழகக் கல்வி அடைந்திருக்கும் பெரும் மாற்றம் ஆரோக்கியமற்றது. வெளிப்படையான வியாபாரப் பொருளாகக் கல்வி மாறி நிற்கும் சூழலில், வசதியற்றவர்களின் பிள்ளைகள் படிக்கும் கல்விநிலையமாகவே அரசுப் பள்ளிகள் இன்று திகழ்கின்றன. சமீப காலங்களில் அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், ஆசிரியர்கள் செய்த பல மாற்று முயற்சிகளும் அடைவுகளும் வெளிச்சம் விழாமல் தனியார்மய விளம்பரங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கின்றன. அரசியல் வியாபாரத்தில் கண்டுகொள்ளப்படாத தன்மை அரசுப் பள்ளிகளை மறைமுகமாகப் பாதித்திருப்பதாக உணர்கிறேன். மீண்டும் குழந்தைகள் தாய் வீடு திரும்பும் நிலை மெல்ல மெல்ல மலர்ந்துகொண்டிருக்கிறது. இச்சூழலில், ‘தி இந்து’வின் அரசுப் பள்ளிக்கு ஆதரவான பயணம் அசலான கல்விக் கூடங்களின் வேருக்கு நீரூற்றிக்கொண்டிருக்கிறது. தாங்கள் வெளியிடும் கட்டுரை களுக்கு ஓர் அரசுப் பள்ளி ஆசிரியன் என்கிற முறையில் என் நன்றிகள்!
- சக.முத்துக்கண்ணன், பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, விக்கிரமங்கலம்.
பொதுத்துறை வங்கிகளைக் காப்போம்!
‘பொ
துத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக் கும் திட்டம் இல்லை!’ என்று, பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிகழ்ந்துள்ள நிதி மோசடி குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார், இந்திய நிதி அமைச்சர். இதற்கு எதிராக, ஸ்டெய்ன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் அமைப்பின் தலைவர் ரங்கராஜன் சுந்தரம், ‘வங்கிகள் தனியார்மயம் காலத்தின் அவசியம்’ என்று கூறி, பொதுத்துறையை முற்றிலுமாக ஒழிக்க நினைக்கிறார். மத்திய அரசின் அதிக சதவிகிதப் பங்கு களுடன் பொதுத்துறை வங்கிகள் இருப்பதால்தான், சாமானிய வாடிக்கையாளர்கள், கடுமையாக உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை, குறைந்த வட்டி வழங்கப் பட்டாலும் பாதுகாப்பு கருதி நம்பிக்கையுடன் முதலீடு செய்கின்றனர். ‘பொதுத்துறை வங்கிகளை ரிசர்வ் வங்கி மூன்றாவது கண்கொண்டு கண்காணித்து, முறைகேடுகளைத் தடுக்க வேண்டும்’ என்கிறார் மத்திய நிதியமைச்சர். மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிக் குக் கடும் தண்டனை அளிக்க வேண்டும். மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளைப் பாதுகாத்து, அரசியல் தலையீடு இன்றி, திட்டமிட்டு ஏமாற்றும் பெரும் தனியார் நிறுவனத் தொழிலதிபர்களைத் தப்பவிடாமல், கண் காணிப்புச் சட்ட விதிமுறைகளை மேம்படுத்துவதே மக்களுக்குப் பாதுகாப்பானதாகும்.
- கு.மா.பா.திருநாவுக்கரசு, சென்னை.
கல்வி - கடன் அல்ல; முதலீடு!
பொ
றியியல் பட்டதாரி மாணவிக்கு கல்விக் கடன் வழங்க மறுத்த வங்கிக்கு, கடன் வழங்கு மாறு நீதிமன்றம் உத்தரவிட்டும், கடன் வழங்காமல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடுசெய்த அந்த வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்த உயர் நீதிமன்ற நடவடிக்கை பற்றிய செய்தி (பிப். 25) எல்லோருக்கும் ஆறுதலும், நம்பிக்கையையும் ஊட்டவல்லதாக இருந்தது. கல்விக் கடன், நம் நாட்டின் எதிர்கால நம்பிக்கைகளின் கரத்தை வலுப்படுத்துவதாகும். அது இந்தியாவின் வளர்ச்சிக்கு இடும் உரம். கல்விக் கடன் அல்ல அது; கல்வி மூலதனம். நீதிமன்றத் தீர்ப்பில் கூறியுள்ள, ‘கல்விக் கடன் மறுக்கப்படுவதால், நாட்டுக்கு மிகச் சிறந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள்,பொறியாளர்கள் கிடைக்காமல் போய்விடுகிறார்கள்’ என்ற வாசகங் கள் ஒவ்வொரு வங்கியின் வாசலிலும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.
- சிவ.ராஜ்குமார், சிதம்பரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT