Published : 26 Feb 2018 08:30 AM
Last Updated : 26 Feb 2018 08:30 AM
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டும் விதிகளைத் தளர்த்தும் வங்கிகள்!
பி
ப்ரவரி 25 அன்று வெளியான ‘நீரவ் மோடி குழுமத்தின் ரூ.523 கோடி சொத்துகள் பறிமுதல்’ என்ற செய்தியை வாசித்து மிகவும் கவலை அடைந்தேன். நீரவ் மோடி என்கிற கார்ப்பரேட் முதலாளி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி அளவுக்கு மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டார். ஏற்கெனவே இவருக்கு வழிகாட்டியாக விஜய்மல்லையா ரூ.900 கோடியை வங்கிகளில் வாங்கி ஏப்பம் விட்டுவிட்டு, வெளிநாடுகளில் உல்லாசமாக உள்ளார். நீரவ் மோடிக்கு உள்நாட்டில் உள்ள 21 சொத்துகளின் மதிப்பு ரூ.523.72 கோடி என்று கூறி, அவற்றை அமலாக்கத் துறை கைப்பற்றி உள்ளது. அதுவும்கூட, பண மோசடி தடுப்புச் சட்டத்தின்படி இச்சொத்துகளைத் தற்காலிகமாகக் கைப்பற்ற முடிவு எடுக்கப்பட்டதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளதாக செய்தி கூறுகிறது. எனவே, இந்நடவடிக்கைகூட முழுமையானது அல்ல போலும்.
வழங்கப்பட்ட கடனுக்கும் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளுக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமாக உள்ளது. கொடுத்தது யானை அளவு; பறித்தது எறும்பளவா? விஜய்மல்லையா, நீரவ் மோடியைப் பின்தொடர்ந்து பொதுத்துறை வங்கிகளை ஏமாற்றும் கார்ப்பரேட் முதலாளிகளின் பட்டியல் நீளுமானால், நாட்டின் பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும். இதனால் பாதிக்கப்படப்போவது சாதாரண ஏழை, நடுத்தர மக்கள்தான். எனவே, பொதுத்துறை வங்கிகளை ஏமாற்றும் கார்ப்பரேட் முதலாளிகளைத் தண்டிக்கக் கடுமையான தண்டனைப் பிரிவுகளைக் கொண்ட தனியான சிறப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட வேண்டும்.
ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஊக்குவிப்பு நடவடிக்கை என்கிற பெயரில், பல லட்சம் கோடிகளை மத்திய அரசிடமிருந்து சலுகையாகப் பெறும் கார்ப்பரேட்டுகள், அது போதாதென்று வங்கி களையும் ஏமாற்றுகின்றன. நம் நாட்டின் சாதாரண மக்களுக்குக் கல்விக் கடன், சிறுதொழில் கடன் கொடுக்க ஆயிரம் கட்டுப்பாடுகள், விதிமுறைகளை விதிக்கும் பொதுத்துறை வங்கி அதிகாரிகள், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை, விதிமுறைகளைத் தளர்த்தி வளைந்துகொடுப்பதால் ஏற்படும் விளைவுகள்தான் இவை. இத்தகைய வங்கி அதிகாரிகளை நிரந்தரப் பணிநீக்கம்செய்து, ஆயுள் சிறைத் தண்டனை கிடைக்கும்படியான சட்டத்தை உடனடியாகக் கொண்டுவர வேண்டும்.
- ஆர்.முருகேசன், அந்தியூர்.
தமிழகத்தின் தண்ணீர் மனிதர் யார்?
பி
ப். 25 அன்று வெளியான ‘நீர் மேலாண்மையில் தமிழகத்துக்கு வ்சழி காட்டும் தண்ணீர் மனிதர்’ கட்டுரை முக்கியமான விழிப்புணர்வுப் பகிர்தல். உத்தரப் பிரதேசத்திலிருந்து ராஜேந்திர சிங் என்ற தண்ணீர் மனிதர் ராஜஸ்தானுக்குக் கிடைத்தார். ஏழாண்டுக் காலம் ஒற்றை மனிதராக கோபால் புராவில் ஒரு ஏரியைத் தூர்வாரி, 370 வழக்குகளைச் சந்தித்து, மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். ‘தமிழகத்தின் கோபால் புரா எது.. தமிழ்நாட்டின் தண்ணீர் மனிதர் யார்..?’ என்பது நம்முன் உள்ள கேள்வி. கிராமப்புறங்களிலிருந்து என்று... ராஜஸ்தான் போல அப்படியே நாம் பின்பற்ற வேண்டியதில்லை. தமிழ்நாட்டின் பள்ளி - கல்லூரிகளி லிருந்தும் தொடங்கலாம். பள்ளியும் கல்லூரியும் தங்கள் சுயதேவையைப் பூர்த்திசெய்தலை இலக்காகக் கொண்டு முன்னேறி, கிராமங்களை நோக்கிப் பயணிக்கலாம். தண்ணீரைப் பொறுத்தவரை சேமிப்பும் சிக்கனமுமே எல்லாம். ஆற்றையும் ஆழ்குழாய்க் கிணறு களையும் நம்பி நாம் நீண்ட காலம் பயணிக்க முடியாது என்பதை உணர்ந்து செயல்படுதல் நலம்.
- நா.மணி, ஈரோடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT