Published : 23 Feb 2018 09:18 AM
Last Updated : 23 Feb 2018 09:18 AM
அரசு வங்கிகளின் ஊழல்களுக்கு அரசியல்வாதிகளே காரணம்!
சி
ல அரசு வங்கிகளில் நடைபெற்றுள்ள ஊழல்கள் காரணமாக, அரசு வங்கிகளில் தனியார் பங்கேற்க வேண்டுமென்ற குரல்கள் ஒலிப்பது வரலாறு தெரியாமையால். ஒரு வங்கி, ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவற்றைத் தொடங்கி, அதில் பொதுமக்களின் சேமிப்புகளைப் பெற்று, அப்பணத்தைத் தம் தொழில் நிறுவனங்களில் முதலிட்டு சுய வளர்ச்சி பெற்றுவந்தனர் தனியார். தனியார் வங்கிகளில் பலவித முறைகேடுகளும் நடைபெற்றன. சில திவால் ஆகி, பொதுமக்கள் பணம் சூறையாடப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே பெரிய வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மக்கள் பணம் உதவியது. மாணவர்களுக்கு வங்கிக் கடன், விவசாயிகளுக்குப் பல்வேறு கடன் திட்டங்கள், சிறு தொழில் வளர்ச்சி போன்ற பலவற்றுக்கும் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் பெரிதும் உதவின. அரசியல் தலையீடுகளே அவற்றின் செயல்பாட்டுக்கு உலைவைத்தன. தற்போது வெளிவந்துள்ள ஊழல் பற்றிப் பொது விசாரணை மேற்கொண்டால், இவ்வூழல்களில் அரசியல்வாதிகளின் பங்கு வெளிவரும். தனியார் மயமாக்கினால் வங்கிச் சேவை பாமரனுக்கு மறுக்கப்படும். அவர்களது சேமிப்பு பெருமுதலாளிகளின் வளர்ச்சிக்கே உதவும்.
- ச.சீ.இராஜகோபாலன்,கல்வியாளர், சென்னை.
கிராமங்களில் பணிசெய்யத் தயங்குவது
மருத்துவப் பணிக்கே இழுக்கு!
பி
ப்.22 அன்று வெளியா ‘கிராமப்புறப் பகுதிகளில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது எப்படி?’ என்கிற கட்டுரை படித்தேன். மருத்துவப் பணி, உயிர் காக்கும் உயர்வான.. உன்னதமான பணி என்பதை மருத்துவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியதில்லை. கிராமப்புறங்களில் பெரும்பாலான மருத்துவர்கள் பணிசெய்யத் தயங்குவது, சேவைப் பணியான மருத்துவப் பணிக்கே இழுக்கு. பல்வேறு இன்னல்கள், நோய்களுடன் கிராமப்புற மக்கள் உடல் உழைப்பைச் செய்துவருகின்றனர். அத்தகைய இடங்களில் மருத்துவ சேவை முழுமையாகச் சென்றடைய எம்பிபிஎஸ் படித்த மருத்துவர்களை மட்டுமே நம்பியிருந்தால் பயனில்லை. மாறாக, மாற்று மருத்துவத்தில் நுண்ணறிவு கொண்டவர்களை வைத்து, மருத்துவம் பார்க்கச் செய்வதன் மூலம் கிராமப்புற மருத்துவ சேவையை அதிகரிக்கலாம்!
- கூத்தப்பாடி மா.பழனி, தருமபுரி.
நீதி நிலைநாட்டப்படும் சாத்தியங்கள்!
பி
ப்.22 அன்று வெளியான, ‘இனியேனும் சரிபார்க்கப்ப டுமா வேட்பாளர்களின் சொத்துக் கணக்கு?’ என்கிற தலையங்கம் படித்தேன். வேட்பாளர்களின் சொத்துக் கள் பற்றிய உறுதிமொழி ஆவணத்தில், அவர்களின் ரத்த சம்பந்தமான உறவுகளிடம் ஒப்புதல் பெற்று, வேட்பாளர்களின் தகவல்களுக்கு அவர்களையும் பொறுப்பாக்கலாம். வேட்பாளர்கள் அளித்த விவரங்களில் தவறான தகவல்கள் இருந்தால், அவர்களுக்கும் ரத்த சம்பந்தமான உறவு களுக்கும் உடனடியாகத் தன்டனை வழங்க வழிசெய்யலாம். வேட்பாளர்கள் அளித்த தகவல்களை ஆராயாமல், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் தேர்தல் அதிகாரிகள் மீதும் சட்டம் பாய வேண்டும்.
- சிவ.ராஜ்குமார். சிதம்பரம்.
சாதாரண வார்டு கவுன்சிலரிடமே நம்மால் கேள்வி கேட்க முடியாது
பி
ப். 21 அன்று சர்வதேசம் பகுதியில் வந்த அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள ஸ்டோன்மேன்டக்ளஸ் பள்ளியின் ஒரு மாணவி டிரம்ப் நிர்வாகத்தைக் கண்டித்து வீசப்பட்ட கேள்விக்கணை தான் இது. சக மாணவர்கள் உட்பட 17 பேர் இறந்த துக்கம் தாங்காமல் ‘அதிபரைப் பார்த்து எவ்வளவு பணம் நன்கொடை வாங்கினீர்கள்?’ என்று கேட்கும் அளவுக்கு அந்த நாட்டில் ஜனநாயகத் துணிச்சல், சாதாரண ஒரு மாணவிக்கு இருப்பது வியப்பாக இருக்கிறது. மேலும் ஒரு வியப்பு, அடுத்த நாளே அதிபர் டிரம்ப் அதற்குரிய நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதுதான். எந்த நிர்வாகத்திலும் தவறுகள் நடக்கலாம், அதை யார் சுட்டிக்காட்டினாலும் அதற்குரிய சரியான நடவடிக்கைகள் எடுப்பதே மக்கள் நலம் பேணும் அரசுக்கு அழகு.
- அ.பட்டவராயன், திருச்செந்தூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT