Published : 21 Feb 2018 08:43 AM
Last Updated : 21 Feb 2018 08:43 AM

இப்படிக்கு இவர்கள்: சமூகநீதி மேம்பாட்டுக்கு காந்தியும் காங்கிரஸும் ஆற்றிய பங்கு!

சமூகநீதி மேம்பாட்டுக்கு காந்தியும் காங்கிரஸும் ஆற்றிய பங்கு!

மூகநீதி நாளன்று வெளியான 'எதிர்காலத்துக்கான சமூகநீதி விதைகளைக் கடந்த அறுவடைகளில் இருந்து பெறுவோம்' கட்டுரை கவனம் ஈர்த்தது. காந்தியும் காங்கிரஸும் சமூகநீதித் தளத்தில் செய்த சில அளப்பரிய சாதனைகளை இத்தருணத்தில் நினைவுகூரத் தோன்றுகிறது. வைக்கம் போராட்டத்தைக் கையில் எடுத்தது காங்கிரஸ்தான். வைக்கத்தில் களமாடிய பெரியார் அந்நாட்களில் ஒரு காங்கிரஸ்காரர். அந்தப் போராட்டத்தை வழிநடத்தியதில் காந்திக்கு முக்கியமான பங்குண்டு. பிரிட்டிஷ் இந்தியாவில் முதன்முதலாக முழு அதிகாரத்துடன் தலித் ஒருவரை அமைச்சராக்கியதும் காங்கிரஸ்தான். 1937-ல் ராஜாஜியின் ஆட்சியில் வி.எம்.முனுசாமி அமைச்சரானார். முனுசாமியுடன் ராஜாஜி பழநி கோயிலிலுக்குச் சென்றபோது அதைப் பெரும் பிரச்சினை ஆக்கினார்கள். காந்தியின் காதுக்கு விஷயம் சென்றது. காந்தியும் ராஜாஜியும் இணைந்து ஆலயப் பிரவேசப் போராட்டத்தைப் பெரும் அளவில் முன்னெடுக்க அதுவும் உத்வேகம் தரும் நிகழ்வானது. மதுரையில் வைத்தியநாத அய்யர் தலைமையிலும், திருச்சியில் ஆலாசியம் ஐயங்கார் தலைமையிலும், திருவில்லிப்புத்தூரில் டாக்டர் நாராயணன் தலைமையிலும் போராட்டங்கள் நடைபெற்றன. சுதந்திர இந்தியாவிலும் ஓமாந்தூரர் முதலமைச்சராக இருந்தபோதுதான் திருப்பதி கோயிலுக்கு திண்டிவனத்தைச் சேர்ந்த ஒரு தலித் சகோதரரை அறங்காவலராக நியமித்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் நலனுக்காக துறையை உருவாக்கியவரும் ஓமாந்தூரார்தான். தொடர்ந்து, 1954-ல் காமரஜர் முதலமைச்சரானபோது, இந்து அறநிலையத்துறை அமைச்சர் பதவியில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பி.ஆர்.பரமேஸ்வரன் பிள்ளை அமைச்சரானார். காமராஜர் இதை ஒரு புரட்சியாக உரிமை கோராவிட்டாலும் நிச்சயமாக அந்நாட்களில் அது ஒரு பெரும் புரட்சி. ஒளிவண்ணனின் கட்டுரை திராவிட இயக்கப் பணிகளைப் பட்டியலிட்டதோடு நின்றிடாமல் இவற்றையும் தொட்டிருந்திருக்கலாம். சமூகநீதித் தளமானது நாம் தொடர்ந்து போரிட வேண்டிய ஒன்று. ஒரு கை அல்ல; நூறு கைகளும் கோத்து வெல்ல வேண்டிய யுத்தம் அது!

- திருச்சி வேலுசாமி, செய்தித் தொடர்பாளர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.

நீடாமங்கலத்துக்கு ரயில்வே மேம்பாலம் வேண்டும்!

‘ம

ன்னை எக்ஸ்பிரஸ் தஞ்சை வழியாக தொடர்ந்து செல்ல போராட்டம்’ என்ற செய்தி வேதனையைத் தந்தது. ஏனென்றால், முதலில் இது மன்னை - திருவாருர் வழியாக சென்னைக்கு இயக்கப்படும் திட்டத்தின்படியே அறிமுகப்படுத்தப்பட்டது. திருவாருர், மயிலாடுதுறை அகலப் பாதைப் பணிகள் தாமதமாகிவந்ததால் தஞ்சாவூர் வழியாக இயக்கப்பட்டது. இப்போது அகல ரயில் பாதைப் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் வண்டியின் பயணத் திட்டம் மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் திருவாரூர் மட்டும் அல்ல; வேளாங்கண்ணி, நாகூர், நாகப்பட்டினம் மக்களுக்கும் பயன் அடைவார்கள். இதற்கு ஏன் எதிர்ப்பு? நியாயமாக தஞ்சாவூரிலிருந்து இந்த ரயிலை வந்தடைய மன்னார்குடிக்கு ஒரு இணைப்பு ரயிலை இயக்க போராட்டக்காரர்கள் கோரிக்கை வைக்கலாம். கூடவே நீடாமங்கலத்தில் ஒரு ரயில்வே மேம்பாலம் கட்டவும் குரல் கொடுக்கலாம். ஏனென்றால், தஞ்சை - நாகை நெடுஞ்சாலை மற்றும் கும்பகோணம் - மன்னார்குடி சாலையின் குறுக்கே வரும் முக்கிய சந்திப்பு நீடாமங்கலம். ரயில் நிலையச் சந்திப்பின் குறுக்கே பேருந்துகளும் வாகனங்களும் செல்வது இங்கு மட்டும்தான். இதனால் ஒவ்வொரு நாளும் காலை, இரவு என இரண்டு முறை பல மணி நேரம் போக்குவரத்துக்குத் தடை ஏற்படுகிறது. பல்லாயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். ஆம்புலன்ஸ்கள்கூட நோயாளிகளுடன் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆக, இதுகுறித்து ரயில்வே நிர்வாகமும் யோசிக்க வேண்டும்!

- ந.குமார், திருவாரூர்.

கட்சிகள் மக்களை முன்னிலைப்படுத்த வேண்டும்

ங்கள் மாநில நலனும், மக்கள் நலனும் பாதிக்கப்பட்டால் பிற மாநிலங்களில் கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக இணைந்து போராடுகிறார்கள். தமிழ்நாட்டில் அவரவர் கட்சியை முதன்மைப்படுத்துவதில் அக்கறை செலுத்துகிறார்கள். மக்களைப் புறக்கணிக்கிறார்கள். தமிழக உழவர்கள் டெல்லியிலும், தமிழக மாணவர்கள், தமிழகத் தொழிலாளர்கள் பிற மாநிலங்களிலும் அவமானப்படுத்தப்படுகின்றனர்; கொல்லப்படுகின்றனர். இதற்கெல்லாம் நமது அரசியல் கட்சிகளிடம் ஒற்றுமையின்மையே காரணம்.

- சீனு. தமிழ்மணி, புதுச்சேரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x