Published : 22 Feb 2018 09:13 AM
Last Updated : 22 Feb 2018 09:13 AM
வாடிக்கையாளர் நம்பிக்கை இழந்தால் வங்கிகள் திவாலாகிவிடும்!
பி
ப். 21 அன்று வெளியான ‘வங்கி மோசடிகளுக்கு எப்போது முடிவு?' தலையங்கம், வங்கி வாடிக்கையாளர்கள், பொதுமக்களின் ஆத்திரம் கலந்த ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. பஞ்சாப் தேசிய வங்கியில், ரூ.11,500 கோடி மோசடி, வங்கி ஊழியர்களின் துணையுடனே நடந்திருப்பதால், எதிர்காலத்தில் இப்படி நடக்காதபடி நடைமுறைகளை உருவாக்கிக் கண்காணிக்க வேண்டும். லலித் மோடி, விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றோரின் தொடர் மோசடிகளையும், அவர்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளையும், வங்கி வாடிக்கையாளர்களான பொதுமக்கள், ஊடகங்கள் வாயிலாக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுதான் வருகின்றனர். இந்தியா முழுமைக்கும் தேசிய வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் சேமிப்புத் தொகை ரூ.110 லட்சம் கோடிக்கு இனிமேலும் பாதுகாப்பு கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. வாடிக்கையாளர்கள் நம்பிக்கை இழந்து தங்களது சேமிப்புத் தொகையைத் திரும்பப்பெற முயலும் பட்சத்தில், வங்கிகள் அனைத்தும் திவாலாகிவிடுவதோடு, இந்தியப் பொருளாதாரமும் அதல பாதாளத்துக்குள் சென்றுவிடும்.
- வெ. பாஸ்கர், அலங்காநல்லூர்.
ஊருக்கு ஓரிருவராவது
மரம் வளர்க்க வேண்டும்
தி
ட்டக்குடியில் கடந்த பத்து ஆண்டுகளில் 5,000 மரக் கன்றுகள் நட்டு, கிராமத்துக்குச் செழிப்பை அளிக்கும் திட்டக்குடி அறிவழகனையும், சிங்கப்பூர் பெரியசாமியையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர்களை இனம் கண்டு தமிழகத்துக்கு அறிமுகம் செய்த ‘தி இந்து’ நாளிதழுக்கு நன்றி. இந்தச் செய்தியைப் படித்த பிறகு ஊருக்கு ஒரு சிலராவது தங்களது கிராமத்திலும் இந்த நற்பணியைத் தொடங்கினால் தமிழ் நாட்டுக்கு மிகவும் நல்லது.
- பெ.குழந்தைவேலு ,வேலூர் (நாமக்கல்).
கல்வித் துறை சிக்கல்களின் வேர்
பி
ப். 19 அன்று வெளியான ‘கல்வித் துறைச் சிக்கல்களுக்கு முடிவு எப்போது?’ எனும் கட்டுரை நன்று. பெரும்பாலும் எல்லாக் கல்வியாளர்களும் உயர் கல்வியைப் பற்றியும் உயர் கல்வியில் நிலவும் சிக்கல்களைப் பற்றியும் மட்டுமே சிந்திக்கின்றனர். உயர் கல்விக்கு அடிப்படையாக இருக்கும் தொடக்கக் கல்வியில் நீடிக்கும் சிக்கல்களைப் பெரிதாகப் பொதுவெளியில் விவாதிப்பது இல்லை. பொருளாதாரத்தைத் தாண்டியும் பல முக்கியப் பிரச்சினைகள் இங்குண்டு. கல்வித் துறையின் பல சிக்கல்களுக்கு வேர், தொடக்கக் கல்வியில் உள்ளது. இதை இந்தச் சமூகம் என்று உணர்ந்துகொள்ளுமோ அன்றுதான் விடியல் ஏற்படும்.
-ரங்கன்.அய்யாசாமி, தொடக்கப் பள்ளி ஆசிரியர், பல்லடம்.
கவலை தரும் காவிரிப் பிரச்சினை
கா
விரி மேலாண்மை வாரியம் அமையுமா, இந்த குறைக்கப்பட்ட அளவு தண்ணீரையாவது ஒழுங்காக திறந்துவிடுவார்களா என்று தெரியவில்லை. மழை, வெள்ளம் சமயங்களில் கடலில் பல டிஎம்சி தண்ணீர் வீணாகக் கலக்கிறது. மேட்டூர் அணையைத் தூர்வாரவில்லை, வெள்ள காலத்தில் ஏராளமான நீர் கடலில் கலப்பதைத் தடுக்க, தமிழ்நாட்டுக்குள் தடுப்பணையைக் கட்டவோ, பெரிய ஏரிகளை உருவாக்கவோ இன்னமும்கூட நாம் சிந்திக்கவில்லை.
-எஸ். மோகன், கோவில்பட்டி.
ஐஏஎஸ் ஆர்வலர்களுக்கு வழிகாட்டி!
பெ
ரியார் கண்ட சமூகநீதியும் வ.உ.சி. போதித்த தொழிலாளர் நலனும் காக்கப்பட வேண்டுமெனில், தமிழக மாணவர்கள் அதிகளவில் இந்திய ஆட்சிப் பணிக்கு வரவேண்டும். அப்படி வந்தால் அரசியல் நீதி காக்கப்படும் என்பதை ‘ஐஏஎஸ் வழிகாட்டி' நிகழ்ச்சி குறித்த செய்திகள் மூலம் அறிந்து கொண்டேன். தமிழக மாணவர்கள், ஐஏஎஸ் ஆக வழிகாட்டும் இந்த நிகழ்ச்சி பாராட்டத்தக்கது.
- சு. பாலகணேஷ், மாதவன்குறிச்சி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT