Published : 29 Jan 2018 10:12 AM
Last Updated : 29 Jan 2018 10:12 AM
யூகங்களுக்கு முற்றுப்புள்ளி!
ஜ
ன. 28-ல் ‘ஞாயிறு அரங்கம்’ பகுதியில் மு.க.ஸ்டாலின் பேட்டி படித்தேன். நடுநிலையாளர்கள் இன்றைய சூழலில், திமுகவின் செயல்தலைவரிடம் என்னென்ன கேட்க நினைக்கிறார்களோ, அந்தக் கேள்விகள் அனைத்தையுமே ‘தி இந்து’ அவரிடம் கேட்டுப் பதில் பெற்றவிதம் சிறப்பாக இருந்தது. “தலைவரும்கூட அப்படி எந்தக் கட்சியையும் உடைச்சு, என்னைக்கும் ஆட்சிக்கு வந்ததில்லை” என்று கருணாநிதியின் நிலைப்பாட்டை மட்டுமல்ல.. தனது நிலைப்பாட்டையும் கூறி, யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஸ்டாலின். குறிப்பாக, “திமுக தனது தவறுகளிலிருந்து வெளியே வந்துக்கிட்டிருக்கு, அதை முழுசா மீட்டெடுக்க மெனக்கெட்டுக்கிட்டு இருக்கேன்” என்று அக்கட்சியின் நிலையில் மாற்றம் நிகழ்ந்துகொண்டிருப்பதையும் உணர்த்தியுள்ளார். இந்த மெனக்கெடல் இரண்டாம்கட்டத் தலைவர்களிலிருந்து கடைநிலைத் தொண்டர்கள் வரை பரவினால் மீண்டும் திமுக தலைநிமிர்ந்து நிற்கும் என்று நம்பலாம்.
- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி
சித்தாந்தமே வலிமை!
தி
முக செயல்தலைவர் ஸ்டாலின் பேட்டியைப் படித்தேன். சித்தாந்த சரிவுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் தொடர்பில்லை என்று அவர் கூறியிருப்பது முரணாக உள்ளது. திமுகவின் நிரந்தர வாக்கு வங்கி என்பது சித்தாந்த வலுவினாலும், சொற்பொழிவுகளாலும், வாசிப்பு இயக்கத்தாலும் கட்டமைக்கப்பட்டது. வலிமையான தலைமைக்கான பிம்பத்தை, கொள்கை நிலைத்தன்மையே கொடுக்கிறது. மதச்சார்பின்மையைத் தாண்டி பகுத்தறிவுக் கொள்கைக்குப் பங்கம் வரும்போதெல்லாம், வலிமையான எதிர்க் குரல் கொடுத்துவரும் இயக்கம் திமுக. அது காலத்துக்கேற்ப தம்மைத் தகவமைத்து, இளம் தலைமுறையினருக்குக் கொள்கை உரமூட்டிச் செயல்படுவதே இயக்கத்தின் சிறந்த எதிர்கால முன்னேற்றத்துக்கு அடிகோலும்.
- செ.த.ஆகாஷ், தஞ்சாவூர்.
ஆண்டுக்கு இருமுறை புத்தகக் காட்சி?
ஜ
ன. 27 அன்று வெளியான ‘புத்தகக் காட்சியை மேலும் விரித்திடுங்கள்’ தலையங்கம் வாசித்தேன். ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி யைச் சிறப்பாக நடத்தும் ‘பபாசி’க்கு வாழ்த்துக்கள். அதேசமயம், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடத்துவதற்குப் பதிலாக இரண்டு முறை நடத்த வழி இருக்கிறதா என்றும் பரிசீலிக்க வேண்டும்.
- மா.கோவிந்தசாமி, கூத்தப்பாடி
அரசுத் துறையாகட்டும் போக்குவரத்து!
பே
ருந்துக் கட்டண உயர்வுக்கு எதிரான அ.குமரேசனின் கட்டுரை (ஜன. 26) முன்வைத்த வாதங்கள் உண்மையே. டீசல் விலையேற்றத்துக்கு இடையே, போக்குவரத்துக் கழகங்கள் சேவைத் துறையாகத் தொடர வேண்டுமானால், அவற்றை அரசுத் துறையாக்குவதே உரிய வழிமுறையாக இருக்க முடியும். குறைந்தபட்சம், பற்றாக்குறை தொகையையாவது அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி, ஆண்டுதோறும் சரிசெய்ய வேண்டும். அப்போதுதான் போக்குவரத்துத் தொழிலாளிக்கு நியாயமான ஊதியமும், ஓய்வுபெற்ற தொழிலாளிக்குப் பணிநிறைவுப் பலனும், பொதுமக்களுக்கு நியாயமான கட்டணத்தில் பயணிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
- சா.சந்தானம், மாநில துணைத் தலைவர், அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் சம்மேளனம். திருநெல்வேலி.
குளிர்பானங்கள்… ஜாக்கிரதை!
ஜ
ன. 27-ல், உலக மசாலா பகுதியில் அயர்லாந்தைச் சேர்ந்த மைக்கேல் ஷெரிடன் குளிர்பானங்களுக்கு அடிமையாகி 32 வயதிலேயே 32 பற்களையும் இழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் இதுபோல் குளிர்பானங்களுக்கு அடிமையானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இனிமேலாவது குளிர்பானங்களின் மீது கவனமாக இருக்க வேண்டும். இயற்கை அளித்துள்ள பானங்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்!
- பி.கே.ஜீவன், கும்பகோணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT