Published : 11 Jan 2018 09:41 AM
Last Updated : 11 Jan 2018 09:41 AM

இப்படிக்கு இவர்கள்: அரசுக்கு இல்லையா நீதி?

அரசுக்கு இல்லையா நீதி?

ய்வுபெற்றவர்களின் வருங்காலம் வளமுடன் தொடர வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசால் 1952 மார்ச் மாதத்தில் உருவாக்கப்பட்டதுதான், ‘வருங்கால வைப்புநிதிச் சட்டமும் திட்டங்களும்’. அதன் முக்கிய அம்சமே, இந்த சட்டதிட்டங்களுக்கு முரணாகத் தொழிலாளர்களிடம் பிடித்தம்செய்த வருங்கால வைப்பு நிதியை, வேறு காரணங்களுக்கு நிர்வாகம் பயன்படுத்துமானால், அச்செயல் நிதி மோசடி (நிதி கையாடல்) என்று தீர்மானிக்கப்பட்டு, இந்திய தண்டனை சட்டப் பிரிவு (IPC)406/409-ன் படி, தவறிழைத்த நிர்வாகத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால், இன்று வரை இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாமலே உள்ளது. இந்த வழக்கை தொழிற்சங்கங்களே தொடரலாம். இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட பல தனியார் நிறுவனங்களுக்குப் பல்வேறு நீதிமன்றங்கள் கடுமையான தண்டனைகள் வழங்கியிருக்கின்றன. தனியாருக்கு ஒரு நீதி, அரசுக்கு ஒரு நீதியா? நீதிபதிகள், இந்த ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினரின் இன்னல் களைய நடவடிக்கை எடுத்தால் நலம்.

- அ.பட்டவராயன், திருச்செந்தூர்.

நமக்கு நாமே வஞ்சனை

நீ

திபதி அரிபரந்தாமனின் ‘தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு நீதிமன்றம் தடை போடலாமா?’என்ற கட்டுரை படித்து மகிழ்ந்தேன். ஏராளமான உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற முன்னுதாரணங்கள் காட்டப்பட்டுள்ளன. தொழிலாளர்களின் கூட்டுபேர சக்தியை முறியடிக்கும் எந்த நடவடிக்கையிலும் நீதிமன்ற ஆணைகள் கூடாது என்ற கருத்து பாராட்டப்படவேண்டிய ஒன்று. தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய இந்தத் தருணத்தில், தொழிலாளர்களின் நியாயமான போராட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டியது அவசியம். போராடுகின்ற தொழிலாளர்களும் மக்களல்லவா? ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் தொழிலாளர்தான். அவர்களுக்கு ஆதரவளிக்காமல் இருப்பது, தொழிலாளர்களை வஞ்சிப்பது மட்டுமல்ல; நம்மை நாமே வஞ்சித்துக்கொள்வதுபோலாகும்.

- எஸ்.தேவதாஸ், மின்னஞ்சல் வழியாக.

லட்சுமி என்னும் பயணி

மூகத்தில் ஆண்களைவிடப் பெண்களே போராடி வாழ வேண்டியுள்ளது. லட்சுமி என்னும் பெண் தனக்காகவும் சமூகத்துக்காகவும் போராடியுள்ளார். அவரின் வரலாற்றை அவரே எழுதியுள்ளார். ‘லட்சுமி என்னும் பயணி’ என்னும் தலைப்பிலான நூல் குறித்து எழுத்தாளர் பிரபஞ்சன், லட்சுமி என்னும் பெண் லட்சுமி அம்மாள் ஆன கதையை விவரித்துள்ளார். லட்சுமி சிபிஎம்ஐச் சேர்ந்தவர் என்றாலும், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் மாறிமாறிக் கூட்டணி வைப்பது வெட்கமாக இருக்கிறது என்பது கவனிப்புக்குரியது. பெண் என்றால், தோழர்களும் தவறாகவே புரிந்து வைத்துள்ளார்கள் என்பதையும் தோழர்கள் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். தோழமை என்ற ஒரு சொல்லுக்குப் பொருத்தமானவர் லட்சுமி என்று தோழமையுடன் எழுதியுள்ளார் பிரபஞ்சன்.

- பொன்.குமார், சேலம்.

படைகொண்டார் நெஞ்சம் நன்றூக்காது!

ட கொரிய அதிபர், அமெரிக்க அதிபர் இருவரும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி பரிமாறிக்கொண்டிருக்கும் வார்த்தைகள் அவர்களின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகின்றன. இது அவர்கள் வகிக்கும் பதவிக்கு உகந்தது அல்ல. உலக அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலும் மனித குலத்தையே அச்சுறுத்தும் வகையிலும் அணு ஆயுதங்களின் பின் விளைவுகளைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் இவ்விருவரும் பேசிவருவது, ‘படைகொண்டார் நெஞ்சம் போல் நன்றூக்காது’ என்னும் குறளின் உண்மையை உணர்த்தும் விதமாக உள்ளது. தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களைப் பற்றி பெருமை கொள்வதற்குப் பதிலாக மனித குலத்தின் எதிர்கால நன்மையை இருவரும் நினைத்துப் பார்ப்பது நல்லது.

- அ.குருநாதன், மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x