Published : 31 Jan 2018 09:29 AM
Last Updated : 31 Jan 2018 09:29 AM
காந்தி சூழ் உலகு!
கா
ந்தியின் நினைவு தினத்தையொட்டி வெளியான மூன்று கட்டுரைகளும் வெவ்வேறு பரிமாணங்களைக் கொண்டவையாக அமைந்தன. ய.மணிகண்டனின் கட்டுரை, பாரதியியலுக்குப் புதிய திறப்புகளைக் கொண்டுவருகிறது. அன்புசெல்வத்தின் கட்டுரை காந்தியை வேறு கோணத்தில் பார்க்கச் செய்கிறது. தீண்டாமை குறித்துப் பேசியும் எழுதியும் வந்த காந்தி, சாதி குறித்தும் சாதி மறுப்புத் திருமணம் குறித்தும் தீவிரமாக இயங்கியிருக்கிறார் என்பதை உதாரணங்களோடு எடுத்துக்காட்டுகிறது அன்புசெல்வத்தின் கட்டுரை. மு.அருணாசலம், இலக்கிய வரலாறு உள்ளிட்ட சில முக்கியமான நூல்களை எழுதியவர் என்பதைத் தாண்டி, காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்தத் தத்துவம் மற்றும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர், காந்திய கல்விக்கொள்கையின் அடிப்படையில் பள்ளிகள் நடத்தியவர் என்று அவரது அறியப்படாத ஆளுமைகளையும் அறிமுகப்படுத்தியது சுடர்விழியின் கட்டுரை. மூன்று கட்டுரைகளுமே முற்றிலும் தனித்த விதமாக, காந்தியை அணுகியிருந்தது அருமை.
- சீனு.தமிழ்மணி, புதுச்சேரி
தே
சத் தந்தை காந்தி நினைவு தினத்தில், ‘தி இந்து’ வில் வெளியாகியிருக்கும் ‘சாதி மறுப்புப் பாதையில் காந்தியின் பயணம்’ கட்டுரை, காந்தி தீண்டாமையை மட்டுமின்றி சாதியத்தையும் எவ்வளவு தீவிரமாக எதிர்த்துள்ளார், சாதியை எவ்வாறெல்லாம் மறுத்துள்ளார் என்று விளக்கியிருக்கிறது. ‘சாதி மறுப்புத் திருமணங்களுக்கு மட்டுமே என் ஆசிர்வாதம் உண்டு’ என்ற காந்தியின் கூற்றே அவரைச் சரியாக அடையாளப்படுத்துகிறது. சாதி மறுப்புப் பாதையில் காந்தியின் பங்களிப்பை அடுத்தத் தலைமுறைக்கு நினைவூட்டியிருக்கும் அன்புசெல்வத்தின் பணி பாராட்டுக்குரியது.
-பொன். குமார், சேலம்
அரசியல் களமல்ல நீதித் துறை!
ஜ
ன.30ல் வெளியான “குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு இடைக்காலத் தடை” என்ற செய்தியைப் படித்தேன். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக திறமை தகுதிகளைக் கருத்தில் கொள்ளாமல் ஆளும்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களே உயர் நீதிமன்றங்களிலும் கீழமை நீதிமன்றங்களிலும் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுவருகின்றனர் என்று வழக்கு தாக்கல்செய்யப்பட்டு அதன்மீது மேற்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நீதித் துறை அரசியல்மயமாக்கப்பட்டுவிடக் கூடாது. அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இப்படி அரசு வழக்கறிஞராகி, பிறகு நீதிபதியாகவும் ஆகிவிடுகின்றனர். தகுதியில்லாத பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களால் ஏற்படும் பாதிப்பு பொதுவெளிக்கு வந்துவிடுகிறது. ஆனால் அதேபோல அரசு வழக்கறிஞர் விஷயத்தில் ஏற்படும் பாதிப்புகள் பொதுவெளிக்கு வருவதில்லை.
- சிவ.ராஜ்குமார், சிதம்பரம்.
சரியான விளக்கம்
மும்பை மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. இயந்திரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் பல்வேறு விதிமீறல்கள் நிகழ்ந்ததைச் சுட்டிக்காட்டியிருக்கிறது கு.கணேசன் எழுதிய ‘எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை ஆபத்தானதா?’ (ஜன.30) கட்டுரை. உடலில் காந்தப்புலத்தை ஏற்படுத்தி எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுவதால் இரும்பு கலந்த உலோகங்கள் உடலில் பொருத்தப்பட்டவர்களுக்கு அந்தப் பரிசோதனை நடத்தப்படுவதில்லை என்பதையும் அந்தக் கட்டுரை விரிவாக விளக்கியிருக்கிறது.
- ஆர். நல்லசிவம், மின்னஞ்சல் வழியாக…
தமிழர்களுக்குப் பெருமை
ஜ
ன.29 அன்று ‘தி இந்து’வில் வெளியான என்.டி.ராஜ்குமாரின் ‘அபூர்வ ராஜா!’ கட்டுரை படித்தேன். இளையராஜாவின் இசைத்திறமைக்கு மிகவும் தாமதமாகவே கௌரவம் கிடைத்திருந்தாலும், அந்த விருதுக்கு முற்றிலும் தகுதியுடையவருக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியானது. பாமர மக்களும் ரசிக்கும் வகையில் திரையிசையில் நுட்பங்களைப் புகுத்திய அந்த இசைமேதைக்கு நாட்டின் உயரிய கௌரவம் கிடைத்திருப்பது தமிழர்களுக்குப் பெருமை.
- பி.கே. ஜீவன், கும்பகோணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT