Published : 03 Jan 2018 09:31 AM
Last Updated : 03 Jan 2018 09:31 AM
ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு!
ஜ
னவரி 2 அன்று வெளியான ‘ஆர்.கே.நகரில் மாறிப்போன கணக்குகள்’ என்ற கட்டுரை படித்தேன். பலம் பொருந்திய இரு திராவிடக் கட்சிகள் இருந்தும், எப்படி ஒரு சுயேச்சை வேட்பாளா் அதுவும் புதிய சின்னத்தில் அதிக வாக்குகள் பெற்று ஜெயிக்க முடியும் என்ற கேள்வியின் பின்னணியில், தோ்தல் முடிவைப் பல்வேறு கோணங்களில் அலசியிருப்பது அருமை. தமிழ்நாட்டில் தோ்தல் என்றாலே ஒரு திருவிழா போல அரசியல்வாதிகளும் வாக்காளா்களும் கொண்டாடுகிறார்கள். பணமும் இலவசப் பொருட்களும் எல்லா கட்டுப்பாடுகளையும் மீறி தொகுதிக்குள் தாண்டவமாடுகின்றன. பணம் கொடுப்பது தவறா? அல்லது வாங்குவது தவறா? மக்களைக் குறைசொல்வது எளிது. தோ்தலில் ஜெயித்த பின்பு, ஐந்து ஆண்டுகளுக்குத் தொகுதிக்கு எதுவும் செய்யத் தேவையில்லை என்று அரசியல்வாதிகள் நினைப்பதால், பணத்தை அள்ளி வீசுகிறார்கள். ஒன்றும் செய்யாத அரசியல்வாதி தோ்தலுக்கு முன்பாவது பணம் கொடுக்கிறாரே என்று மக்களும் பணத்தை வாங்கிக்கொள்கிறார்கள். ஓட்டு போடுவதற்கு அடிப்படையாக இருந்த கொள்கை, கட்சி, கட்சியின் சின்னம், சாதி, இனம், மதம், சிறுபான்மையினா் அந்தஸ்து எல்லாம் இந்த இடைத்தேர்தலில் உடைந்துகிடக்கின்றன. பணம் மட்டுமே வெல்லும் ஆற்றல் கொண்டது என்று நிரூபித்திருக்கிறது ஆா்.கே.நகா். இது ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு என்றால் மிகையில்லை. பணம் மட்டுமே தோ்தலில் வெல்லும் என்றால், அப்படிப்பட்ட தோ்தல் இனிமேல் அவசியமில்லை என்றே தோன்றுகிறது.
- அ.இருதயராஜ், லென்ஸ் ஊடக மையம், மதுரை.
அரசியல் ஆட்டம்!
ந
டிகன் ஓர் கலைஞன். எத்தனையோ கலைகளுள் நடிப்பும் ஒரு கலை. நடிப்பு பல வகை. அதில் மிகச் சிறந்த நடிகர் சிவாஜி கணேசனைக் காட்டிலும் ரசிகர் கூட்டம் எம்ஜிஆருக்கு அதிகமாக இருந்தது. அதே கணக்கீடுதான் ரஜினிக்கும் கமலுக்கும். அதிலும் நடிப்பை மட்டும் ரசிப்பவன் மனம், விசித்திரமான மனம். அது எப்படிச் செயல்படுகிறது.. எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது? - இது ஒரு புரியாத புதிர். கலைஞன் அதுவும் நடிகன் எப்படித் தீவிர அரசியல் செயல்பாட்டாளனாக மாறுகிறான். ரசிகன் எப்படி அந்தச் செயல்பாட்டாளனின் கொள்கை, கோட்பாட்டை முன்னெடுக்கும் தொண்டனாக மாறுகிறான் என்பது அதைவிடவும் விசித்திரமானது. ஒரு நடிகனோ, ஒரு விளையாட்டு வீரனோ தனக்கு வேறு ஒரு துறையில் கிடைத்த பெயரை, புகழை, பிரபலத்தை வேறு ஒரு துறையில் முதலீடுசெய்வது ஒருவகையில் மோசடி என்றுகூடக் கூறலாம். தொட்டதில் எல்லாம் இருக்கும் அரசியலை அதில் இருக்கும் சாதிய, வர்க்க, மதக் கணக்கீடுகளை ஒட்டி தொடக்கத்தில் ஓர் இயக்குநர் எண்ணத்துக்கு ஏற்ப நடிக்கத் தொடங்கி, பிரபலமானவுடன் நடிப்புக்கேற்ற இயக்குநர்களை இயக்கி வாழ்ந்துவருவோரை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? நடிகனும் ரசிகனும் இணைந்து ஆடும் ஆட்டத்தில் அரசியல் புரிந்தவர்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
- என்.மணி, ஈரோடு.
வாசிப்பு வாழ்த்துகள்
ஆ
ண்டுதோறும் புத்தக வாசிப்பை முன்னெடுத்துச் செல்லும் ‘தி இந்து’ எழுத்தாளர்களையும், வாசகர்களையும் இணைக்கும் பாலமாகவே வலம்வருகிறது. புத்தாண்டை முன்னிட் டுத் தமிழகம் முழுக்க நிகழ்ந்த புத்தக வாசிப்பை அடையாளப்படுத்துவதன் வழியாக, சிறு நகரங்களிலும் வாசிப்பு இயக்கம் பரவியுள்ளது. பரவலாக விளம்பரப்படுத்துவதை முன்னெடுக்கவும் வேண்டும்.
- க.அம்சப்ரியா,
பொள்ளாச்சி இலக்கிய வட்டம், சமத்தூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT