Published : 24 Jan 2018 09:26 AM
Last Updated : 24 Jan 2018 09:26 AM

இப்படிக்கு இவர்கள்: ஆதார் ஒன்றே போதுமா?

ஆதார் ஒன்றே போதுமே!

பு

திய தலைமைத் தேர்தல் ஆணையர் பொறுப்பை ஏற்கவிருக்கும் ஓம் பிரகாஷ் ராவத், ‘வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்’ என்று பேசியிருக்கிறார். ஆதார் விவகாரத்தில் சிக்காமல் இருக்கும் ஒரே அட்டை வாக்காளர் அடையாள அட்டைதான். அதையும் ஆதாரோடு இணைத்து மக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், ஏராளமான வாக்காளர்களை வாக்களிக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடுவார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ‘ஆதார்’தான் எல்லாமே, அது இல்லையேல் ஒன்றுமே இல்லை என்ற மத்திய அரசின் கொள்கையை, பொறுப்பேற்கும் முன்பே பிரதிபலிக்கிறார் ஓம் பிரகாஷ் ராவத். ஒரு சந்தேகம் - வாக்காளர் அட்டையோடு ஏன் ஆதாரை இணைக்க வேண்டும்? அதற்குப் பதில் ஆதாரையே வாக்காளர் அட்டையாகப் பயன்படுத்தலாமே?

- ஆர்.முருகேசன், அந்தியூர்.

கவனம் தேவை

பு

கையிலை சிகரெட்டுக்கு மாற்று என்று சொல்லப்படும் ‘இ-சிகரெட்’ ஏற்படுத்தும் கேடுகளை விவரித்த ‘இ-சிகரெட்: புதிய புற்றுநோய் பூதம்!’ கட்டுரை (ஜன. 23), அதன் பாதிப்புகளைத் தெளிவாக விளக்கியது. எப்படியாவது சிகரெட் பிடித்தே தீர வேண்டும் என்ற கொள்கையை ‘இ-சிகரெட்’ வலியுறுத்துவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. மனித குலத்துக்கு எதிரான கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்துவது மோசமான வர்த்தக நோக்கமாகும். இந்தியா போன்ற நாடுகள் இவ்விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

- சிவ.ராஜகுமார், சிதம்பரம்.

பயனுள்ள தகவல்கள்

செ

ன்னையில் நடந்த புத்தகக் காட்சி குறித்து ஆரம்ப நாள் முதல் நிறைவு நாள்வரை செய்திகளையும் தகவல்களையும் வெளியிட்டது சிறப்பு. ஒவ்வொரு நாளும் புதிய புத்தகங்கள் பற்றிய விவரம், தமிழ் இலக்கியவாதிகளின் கருத்துகள், முக்கியத்துவம் கொண்ட புத்தகங்களின் முகவரி, என்னென்ன புத்தகங்கள் வாங்கினர் என்று பல அறிஞர்களின் பேட்டி, என்ன வாங்கலாம் என்ற பரிந்துரை, பிரபலங்களைச் செதுக்கிய புத்தக விவரங்கள், தமிழ் எழுத்தாளர்களின் கட்டுரைகள் சிறப்பாக இருந்தன. புத்தகக் காட்சி மேம்பாட்டுக்கான பரிந்துரைகளும் பயனுள்ளவை. ‘தி இந்து’வுக்கு மனமார்ந்த நன்றி!

- கே.ராமநாதன், மதுரை.

இப்போது அவசியமா?

ப்போது உள்ள பொருளாதாரச் சூழலில், சட்ட மன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பு (ரூ.44 கோடி) ஆகியவை தற்போதைக்குத் தேவையில்லை என்று தோன்றுகிறது, இவை வேண்டாம் என்றும் கூறவில்லை; பேருந்துக் கட்டண உயர்வு போன்ற மக்களின் முக்கியப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டுப் பிறகு இவற்றை நிறைவேற்றலாமே?

- விவேக்.முரா, தாராபுரம்.

அச்சம் தரும் அறிக்கை

ன.22 அன்று வெளியான ‘சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்?’ கட்டுரை படித்து அதிர்ச்சியடைந்தேன். நீதிபதி மலிமத் அறிக்கையைச் சட்டமாக்க முயலும் மத்திய அரசின் உள்நோக்கம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் எதிர்க் கட்சியினரும் ஆளுங்கட்சியுடன் இணைந்து செல்லாதவர்கள் அனைவரும் இலகுவாகத் தண்டிக்கப்பட பரிந்துரைகள் வழி செய்து கொடுக்கும். அரசால் தொடர்ந்து நெருக்கடிகளுக்குள்ளாகிவரும் சிறுபான்மை இனம் குறிவைத்து குற்றப்படுத்தப்பட இது ஒன்றே போதும். மக்களின் போராட்டம், எதிர்ப்பு, கண்டனம் எதுவும் இதன் வழியே தண்டனைக்கு உள்ளாகும்.

- மவ்லவி. எம்ஒய். முஹம்மது அன்சாரி மன்பயீ. (மின்னஞ்சல் வழியாக)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x