Published : 10 Jan 2018 08:49 AM
Last Updated : 10 Jan 2018 08:49 AM
ஆள்வோர் உரை!
ஆ
ளுநர் உரை என்பதே தவறானது. ஆள்வோர் உரையை ஆளுநர் படிக்கின்றார். அதில் ஒரு எழுத்தைக்கூட மாற்ற முடியாது. இலக்கணப் பிழையைக்கூடத் திருத்திப் படிக்க முடியாது. இதே போன்றதுதான் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் ஆற்றும் உரையும். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இச்சடங்கு ஏற்பட்டதற்கு வரலாற்றுப் பின்னணி உண்டு. நம் நாட்டில் இன்னும் அந்த நடைமுறை தொடர்வது அவசியமா என்ற கேள்வியும் எழுகிறது.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
வழமைகளை மதிக்காத விதிமுறைகள்
ம
ருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வின்போது தாலியைக் கழற்றிவிட்டுப் பரீட்சை எழுதச் சென்ற பெண் டாக்டர்களின் நிலை குறித்த செய்தி (ஜன.8) யோசிக்க வைத்தது. பாகிஸ்தான் சிறையிலிருந்த குல்பூஷண் ஜாதவை பார்க்கச் சென்ற அவரது தாய் மற்றும் மனைவி திருமாங்கல்யம் அணிய தடை என்றதும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களும் பாகிஸ்தான் அதிகாரிகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டினர். இன்று பெண் டாக்டர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்வு விதிமுறைகள் என்ற பெயரில், அதே கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. அரசின் சட்டங்களும் விதிகளும் மக்களின் வழமைகளுக்கும் கலாச்சாரக் கூறுகளுக்கும் முரணாக இருக்கக் கூடாது. இந்நிலை மேலும் மேலும் தொடராமல் கடிவாளம் போட்டு நிறுத்த வேண்டிய பொறுப்பு டிஜிட்டல் இந்தியாவின் மக்களாகிய நமக்கு உண்டு.
- சு.பாலகணேஷ். மாதவன்குறிச்சி.
திருப்புமுனையாக அமையட்டும்!
சி
றுகதை வடிவம் செல்வாக்கு இழக்கின்றதோ என்று எண்ணவைக்கும் இன்றைய காலகட்டத்தில், சிறுகதைகளுக்காக இலக்கிய விழா நடத்தியிருக்கும் ‘தி இந்து’ பாராட்டத்தக்கது. இம்மாதிரியான இலக்கிய விழாக்களை மாவட்டந்தோறும் நடத்தினால், அந்தந்த மாவட்டத்தில் உள்ள இலக்கிய ஆளுமைகளும் வெளிச்சத்துக்கு வருவார்கள். இந்த இலக்கியத் திருவிழா, இலக்கிய உலகில் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாக அமையட்டும்.
- மா.கார்த்திகேயன், ஆர்.எஸ்.மங்கலம்.
தமிழால்
இணைய வைத்த விழா
ச
மகால எழுத்துகளை வாசிப்பதும் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவதும் குறைந்துவரும் நாளில், தமிழால் இணைவோம் எனும் அறைகூவலோடு ‘தி இந்து’ எடுத்துள்ள இலக்கிய முயற்சி பாராட்டுக்குரியது. சமகால எழுத்தாளர்களைக் கௌரவித்தன் மூலம், புதிய வாசகர்களுக்கு அவர்களின் சிறந்த எழுத்துகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இலக்கிய விழாவை, நவீன இலக்கியக் கருத்தரங்கமாக ‘தி இந்து’ மாற்றியுள்ளது.
- சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.
நம்பிக்கை பிறக்கிறது
ஜ
ன.6 தலையங்கம் கண்டேன்! தங்களது நோக்கு, இலக்கு ஆகியவற்றை தமது படைப்புகளின் வழியாக முன்னெடுத்துச் செல்லும் சமரசமற்ற படைப்பாளிகளுக்கு, அந்த முன்னோடிகளின் பெயரிலான விருதுகளும், அதற்கெனத் தரப்படும் பெருந்தொகையும் படைப்பாளிகளுக்கு தமது இலக்கில் மேற்செல்ல பெருநம்பிக்கைத் தரக்கூடிய ஒன்றாகும். அதை விருதுகள் வழியாக பொருத்தமான நபர்களை தெரிவு செய்து சாத்தியப்படுத்தியிருக்கும் ‘தமிழ் இந்து’வை எத்தனை பாராட்டினாலும் தகும்! விருதும் அதைப் பெறுபவரும் ஒரே நேரத்தில் கெளரவப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தலையங்கத்தின் ஆதங்கத்தை ‘தி இந்து’வே முன்வந்து தீர்க்க முனைந்திருக்கிறது. மேலைநாட்டுப் படைப்பாளிகளுக்கு இணையான மரியாதையும், நல்வாழ்வும் இனிமேல் தமிழ் எழுத்தாளனுக்கும் அமையும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. அர்த்தமுள்ள கொண்டாட்டத்தைச் சரியான நேரத்தில் முன்னெடுத்திருக்கும் ‘தி இந்து’வுக்கு நன்றியும் வாழ்த்தும்!
- இரா.மோகன்ராஜன், முத்துப்பேட்டை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT