Published : 26 Dec 2017 10:55 AM
Last Updated : 26 Dec 2017 10:55 AM

இப்படிக்கு இவர்கள்: கூடாது இனியொரு துயரம்!

வெண்மணி 50-ம் ஆண்டு நினைவையொட்டி டிச.25-ல் வெளியான தலையங்கத்தையும் கட்டுரையையும் படித்து மனம் வேதனையால் துடித்தது. விவசாயக் கூலிகளை எப்படியெல்லாம் பண்ணையாளர்கள் ஏய்த்துப் பிழைத்துள்ளார்கள் என்பதை நினைக்கும்போது மனம் கனமாகிப்போனது. தங்களுக்கான நியாயமான உழைப்புக்கேற்ற கூலியைக் கேட்டதற்காகவே 44 பேரைத் தீயிட்டுக் கொளுத்திய நிகழ்வு எத்தனை கொடுமையானது. இனி இப்படியொரு அநீதி எங்கும் எப்போதும் நடந்துவிடக் கூடாது. நினைவுகள் நம்மை வழிநடத்தட்டும்!

- கூத்தப்பாடி மா.பழனி, தருமபுரி

‘பாண்டிச்சேரி’ என்று சொல்வதா?

புதுச்சேரி ‘ஸ்மார்ட் சிட்டி’ தன்னுடைய சின்னத்தை வெளியிட்டுள்ளது என்ற செய்தியை ‘தி இந்து’ நாளிதழ் புதுச்சேரி பதிப்பில் (டிச.25) படித்தேன். சின்னத்தில் Pondiche'ry என்று பிரெஞ்சு மொழியில் குறிக்கப்பட்டிருக்கிறது. பாண்டிச்சேரி என்ற பெயர் புதுச்சேரி என்று மாற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டு, அரசு, பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களிலும் பொதுமக்களின் பேச்சு, எழுத்து, பழக்க வழக்கங்களிலும் நடைமுறைக்கு வந்து பல ஆண்டுகளாகிவிட்டன. அந்தப் பெயர் மாற்றத்துக்காக அரசியல் கட்சிகளாலும் பொதுநல இயக்கங்களாலும் நடத்தப்பட்ட போராட்டங்கள் ஏராளம்.

ஆனால் இப்போது, வெகு எளிதாக யாரோ சிலரால் மீண்டும் ‘பாண்டிச்சேரி’ என்று மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அதே நாளில், கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ‘லோகோ’ செய்தியையும் பார்க்க முடிந்தது. பெங்களூரு என்று அண்மையில் பெயர்மாற்றம் செய்துகொண்ட கர்நாடக மக்கள் தங்களின் உரிமையை விட்டுக்கொடுக்கவில்லை. நிலைத்து நிற்கின்றனர். புதுச்சேரியில் மட்டும் ஏன் இந்த மாற்றம்?

- தூ.சடகோபன்-தலைவர், புதுச்சேரித் தன்னுரிமைக் கழகம்.

இடைத்தேர்தல் முடிவு?

ஆர். கே. நகர் இடைத்தேர்தல் முடிவு குறித்து வெளிவந்துள்ள செய்திகள், விமர்சனங்கள் எல்லாவற்றையும் படிக்கும்போது சில உண்மைகள் புலப்படுகின்றன. இடைத்தேர்தல் முடிவு என்பது இனி வாக்காளர்களின் உண்மையான மனநிலையை பிரதிபலிக்கப் போவதில்லை. கட்சிகளின் கொள்கைகளோ, பலமோ, கூட்டணியோ, சின்னமோ, நாட்டு நடப்புகளோ வெற்றியைத் தீர்மானிக்கப்போவதில்லை. தேர்தல் கால ‘கவனிப்பு’களைத் தங்கள் உரிமைகள் என்றே வாக்காளர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலை மாறாவிட்டால், ஜனநாயகம் என்பதே கேலிக்கூத்தாகிவிடும்.

-மு. செல்வராஜ், மதுரை.

அதையும் சொல்லியிருக்கலாமே!

டிச.23 அன்று வெளியான ஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்ணைப் பற்றிய கட்டுரை மிகச் சிறப்பு. முன்னாள் தலைமைக் கணக்காயர் வினோத் ராயின் முரண்பட்ட நிலைப்பாடுகளை அவர் தயாரித்த தணிக்கை அறிக்கையிலிருந்தும், அவரது சுயசரிதையிலிருந்தும் எடுத்துக்காட்டி விஷயங்களைப் புரியவைத்திருக்கும் கட்டுரை இது. தொலைத்தொடர்புத் துறையை ஆ.ராசா கையாண்ட விதம் என பொதுப்படையாகக் குறிப்பிட்டுள்ளார் கட்டுரையாளர். வாய்தா கேட்காமல் அனைத்து அமர்வுகளிலும் அவர் ஆஜரானது, அவரே சுயமாக வாதாடியது, கடைசி வரை வழக்கைத் துணிச்சலாக எதிர்கொண்டது ஆகிவற்றையும் சுட்டிக்காட்டியிருக்கலாம்.

- க.குருசாமி, கோயம்புத்தூர்

வழிகாட்டும் கட்டுரைகள்…

கக்கன் நினைவுதினக் கட்டுரையாக வெளியான, ' கக்கன்- அரசியல் நேர்மையின் முகம்' (டிச.22) கட்டுரை படித்தேன். அரசியல் என்றாலே ' ஊழல்' என்று அகராதியில் இடம்பெறும் அளவுக்கு, லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடும் இக்காலத்தில், கக்கன் அரசியலில் ஈடுபட்ட காலத்திலும், அமைச்சராகப் பத்தாண்டுகள் பணியாற்றியபோதும் எத்தகைய நேர்மையுடனும் தூய்மையுடனும் விளங்கினார் என்பதை அறிய முடிந்தது.

- பி.லலிதா, உய்யகொண்டான் திருமலை, திருச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x