Published : 29 Dec 2017 10:07 AM
Last Updated : 29 Dec 2017 10:07 AM
பாகிஸ்தானின் நடவடிக்கை மனிதாபிமானமற்றது!
பா
கிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, முன்னாள் இந்தியக் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவை அவரது மனைவியும் தாயும் சந்திக்க ஒப்புக்கொண்டாலும், அவர்கள் அவரைச் சந்தித்தபோது, அவர்கள் அணிந்திருந்த தாலி, வளையல்கள், பொட்டு ஆகியவற்றை அகற்ற வேண்டும் என பாகிஸ்தான் விதித்த கட்டுப்பாடுகள் மனிதாபிமானமற்றவை; கடுமையாகக் கண்டிக்கத் தக்கவை. மரணத்தில் இருப்பவரைக் கட்டித் தழுவி, கண்ணீர் விட்டுத் தங்கள் அன்பையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்த தாயும் மனைவியும் எண்ணியிருக்கக்கூடும்; மனித இயல்பும்கூட! ஆனால், அதற்கு வழியில்லாமல், ஜாதவ் இருந்ததோ கண்ணாடித் திரைக்குப் பின். உற்ற உறவுகளின் நுண்ணுணர்வுகளை மதிக்கத் தெரியாத பாகிஸ்தான் திருந்துவது எப்போது?
- அ.ஜெயினுலாப்தீன், சென்னை.
மனதில் உறுதி வேண்டும்!
டி
சம்பர் 28 அன்று வெளியான ‘மார்ட்டின் லூதர் எனும் மதச் சீர்திருத்தவாதி’ எனும் கட்டுரை படித்தேன். விவிலியத்தையும் புதிய ஏற்பாட்டையும் லத்தீன் மொழியிலிருந்து ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்து, சாதாரண மக்களையும் சென்றடைய வழிகண்டார். மாற்றங்களை எங்கு மேற்கொள்ள முயற்சித்தாலும், அங்கே எதிர்ப்புகள் மிக மோசமாக இருக்கும் என்பதையே மார்ட்டின் லூதருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நமக்கு உணர்த்துகிறது. இருப்பினும், அவர் சீர்திருத்தத்தைக் கைவிடாது உறுதியாக இருந்ததிலிருந்தே அங்கு எந்த அளவுக்குச் சீர்திருத்தம் தேவையாக இருந்திருக்கிறது என்பதையும் நம்மால் உணர முடிகிறது. இடைவிடாத போராட்டங்களும், போராளிகளின் மன உறுதியுமே எதிர்காலச் சமுதாயக் கட்டமைப்பினைச் சீர்திருத்தி மாற்றத்தைக் கொண்டுவர முடியும்; அதுதான் உண்மையும்கூட!
- கூத்தப்பாடி மா.பழனி, தருமபுரி.
எதிலும் ஆதார்
உ
லகமயம், தாராளமயம், தனியார்மயம் என்ற கோட்பாடுகளை எல்லாம்விட, ஆதார்மயம் முந்திவிடும் அளவுக்கு எங்கும் ஆதார், எதிலும் ஆதார் என்ற நிலையைக் கொண்டுவந்துவிட்டது, பாஜக தலைமையிலான அரசு. முகநூல் கணக்கு துவங்க ஆதார் தேவை என்ற நடவடிக்கை, உலக அளவில் ஆதாரை முன்னிறுத்தும் ஒரு முயற்சியாக இருக்குமே தவிர, இணையதளப் பாதுகாப்புக்கு வழிவகுக்காது. இணையதளம் வாயிலாக ஆன்லைன், ஏடிஎம் மோசடி என்று எவ்வளவோ சைபர் குற்றங்களைத் தடுக்க இயலாத கையறு நிலையில் இருக்கும் நாம், முகநூலின் பாதுகாப்புக்கு ஆதாரை நாடுவது தேவைதானா? மாறிவரும் தொழில் நுட்பத்துக்கேற்ப இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தை மாற்றியமைக்காத நிலையில், இது வீணான முயற்சியே. ஏற்கெனவே ஆதார் தகவல்கள் கசிந்த நிலையில், இனி நம் முகநூல் பக்கங்களின் அந்தரங்கங்களும் கசியாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
- எம்.விக்னேஷ், மதுரை.
எதிர்வினையாற்றுங்கள்
டி
சம்பர்-27 அன்று வெளியான ‘வெண்மணி வெறும் கூலிக்கான போராட்டம் அல்ல’ என்கிற தியாகுவின் நேர்காணல் படித்தேன். அடிமையாய் வாழ்ந்த விவசாயத் தொழிலாளர்கள் தாங்கள் சுரண்டப்படுகிறோம், ஒடுக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்து, செங்கொடியின் கீழ் அணிதிரண்ட வர்க்கப்போராட்டத்தில் 44 உயிர்கள் உயிரோடு பொசுக்கப்படுகின்றனர். அதிகார வர்க்கம் முதலாளிகளுக்கே தனது விசுவாசத்தைக் காட்டும் என்பது பண்ணையாளர்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்று அவர்கள் விடுதலை செய்கிறபோதே நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. இன்றும் நவீன அடிமைகளாய் உழைத்துக்கொண்டிருப்பவர்கள், தாங்கள் சுரண்டப்படுகிறோம், ஒடுக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்து அதற்காக எதிர்வினையாற்ற வேண்டும்.
- பா.ஜீவா, சாத்தூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT