Published : 13 Dec 2017 10:03 AM
Last Updated : 13 Dec 2017 10:03 AM
என்னதான் செய்கிறது அரசு?
வ
றீதையா கான்ஸ்தந்தின் எழுதிய ‘பியான் முதல் ஒக்கி’ வரை- பேரிடர்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோமா?’ என்ற கட்டுரை (டிசம்.8) ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பட்டியலிட்டுள்ளது. 2015-ல் பெருமழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு கிடைத்த ஆதரவும் உதவியும்கூட கன்னியாகுமரி மக்களுக்குக் கிடைக்கவில்லை. சொல்லப்போனால், எந்த ஒரு பேரிடருக்கும் தகுந்த முன்னச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை. அடுத்து சுனாமியோ புயலோ வந்தால் என்ன மாதிரியான முன்னச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்படும் என்று அரசால் உறுதியாகச் சொல்ல முடியுமா? இயற்கைப் பேரிடர் பாதிப்புகளின்போது தெளிவான வழிகாட்டுதல் அவசியத் தேவை. மக்களைக் காப்பாற்றுவதைத் தவிர்த்துவிட்டு, அரசு வேறு என்ன முக்கியமான வேலையைச் செய்துகொண்டிருக்கிறது?
-சு.சந்திரகலா, சிவகங்கை.
கு
மரியைத் தமிழகத்தோடு சேர்க்க வேண்டுமென 60 ஆண்டுகளுக்குமுன் போராடிய மக்கள், இப்போது அதே கேரளத்துடன் இணையப்போவதாக கூறுவது பற்றி வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார் கொடிக்கால் ஷேக் அப்துல்லா (டிசம்.11). 2015-ல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு நிவாரணப் பணி செய்ய முதல்வர் இன்னும் உத்தரவிடவில்லை என்று சொன்னது போலவே, இப்போதும் ஒக்கி புயல் விஷயத்தில் தமிழக அமைச்சர்கள் மந்தமாக இருந்துவிட்டார்கள். நாங்கள் கேரளத்தோடு சேர்ந்து விடுகிறோம் என்று அம்மக்கள் குரல் கொடுத்தபிறகுதான் புயலின் தாக்கம் தமிழக அரசுக்குத் தெரிகிறது போலும்.
-முத்துசொக்கலிங்கம், கல்பாக்கம்.
அப்புசாமிக்கு மரணமில்லை
பா
க்கியம் ராமசாமி எனும் ஜ.ரா.சுந்தரேசனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஓவியர் ஜெயராஜ் மற்றும் சாருகேசி எழுதியிருந்த கட்டுரைகள் சிறப்பாக இருந்தன. அதிலும் ஜெயராஜ் தன்னுடைய கடிதங்களின் முகப்பிலேயே அப்புசாமி -சீதாபாட்டியை வரைந்துவைத்திருப்பது அந்தக் கதாபாத்திரங்கள் மீது அவருக்குள்ள அபிமானத்தைக் காட்டுகிறது. ஜெயராஜின் கட்டுரையில் அவருக்கும் ஜ.ரா.சுந்தரேசனுக்கும் இடையிலான உறவின் நெருக்கத்தையும், மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அவற்றைப் புன்னகையுடன் ஏற்றுக்கொள்ளும் ஜ.ரா. சுந்தரேசனின் பாங்கையும் விவரித்திருப்பது நெகிழ்ச்சியைத் தந்தது.
-மு.செல்வராஜ், மதுரை.
பராமரிப்பு இல்லாத அணைகள்
கி
ருஷ்ணகிரி அணை மதகு உடைப்பு, நெரிஞ்சிப்பேட்டை காவேரி நீர் மின்நிலைய கதவணையின் மதகு உடைப்பு என்று வருகிற செய்திகள் எல்லாம் பொதுப்பணித் துறையின் பராமரிப்புகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் இருக்கின்றன. காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள முக்கொம்பு அணை, கல்லணை மதகுகளை பொதுப்பணித் துறையினர் உரிய முறையில் கண்காணித்து, பராமரிப்பில் தவறு நிகழாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். கர்நாடக மாநில விவசாய சங்கத் தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர், தமிழக அணைகளின் பராமரிப்பைப் பற்றி குறை கூறியிருப்பதைக் கவனத்தில் கொண்டு, நமது மாநிலத்தின் பெருமைக்கு பங்கம் வராதபடி அரசும் அதிகாரிகளும் செயல்பட வேண்டும்!
-பெ.குழந்தைவேலு, வேலூர் (நாமக்கல்).
நாடு தழுவிய இயக்கம் தேவை!
பா
லியல் தொந்தரவுகளில் இருந்து பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் பள்ளிகளில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் மேற்கு வங்க அரசின் முடிவு வரவேற்புக்குரியது. பாலியல் தொல்லைகள் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். எனவே அரசு இது குறித்து நாடு தழுவிய அளவில் ஒரு விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்க வேண்டும். பாலியல் தொந்தரவுகள் குறித்த விழிப்புணர்வைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.
-நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT