Published : 11 Dec 2017 09:34 AM
Last Updated : 11 Dec 2017 09:34 AM
காந்தி தேசமே, நியாயமா?
இ
ந்தோனேஷியாவில் நடைபெற்ற வளர்ச்சிக் கருத்தரங்கில், ரோஹிங்கியா மக்களுக்கான பாலி பிரகடனத்தை இந்தியா நிராகரித்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. ஒரு காலத்தில் பர்மாவில் இருந்து தமிழர்கள் சொந்த நாட்டுக்கு அகதிகளாக வந்து, தமிழகத்தில் குடியேறியுள்ள இடங்கள் பர்மா காலனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அகதிகளையும், திபெத்தியர்களையும் இந்தியா ஆதரிக்கிறது. காந்தி தேசம் இந்தியா என்று நமக்கு நாமே சொல்லிக்கொண்டு, அகதிகள் வராமல் தடுக்க வேலி அமைப்பது எந்த வகையில் நியாயம். நம் மனித நேயம் எங்கே போனது? மற்றொரு புறம், வங்கதேச அரசோ இவ்வின மக்களை, வாழ்வதற்கே தகுதியற்ற தீவு ஒன்றில் வலுக்கட்டாயமாகக் குடியேற்ற முனைவது இன்னும் மோசமானது.
-சு.பாலகணேஷ், மாதவன்குறிச்சி, திருச்செந்தூர் தாலுகா.
ஆங்கில பேச்சுத் திறன்
‘பு
திய பாடம் புதிய பாதை?’ பகுதியில் கல்வியாளர்களின் பார்வை தெளிவாக இருக்கிறது. ‘தி இந்து’ வில் வெளியான ஆலோசனைகளையும் கவனத்தில் கொண்டு பாடத்திட்டத்தை அரசு இறுதிசெய்ய வேண்டும். ஆங்கிலக் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளில் பல புதுமைகள் நாள்தோறும் புகுத்தப்பட்ட வண்ணம் இருக்கிறது. ஆங்கில மொழி பேசுவோர் அதிக அளவில் இல்லாத சூழலில், நம் மாணவர்களை ஆங்கிலப் புத்தகங்களைச் சத்தமாக வாசிக்கப் பழக்கலாம். இதன் மூலம் அவர்களின் வாசிப்பு மற்றும் பேச்சுத் திறன்கள் வளரும்.
- மு.சரவணன், உடன்குடி.
மக்கள் கருத்தறிய வாய்ப்பு
த
மிழ்நாட்டில் எத்தனை குழப்பங்கள் நடந்தேறிவிட்டன. ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை சொந்தங் கள் யாரென்றே தெரியாத நிலையில், அவர் இறந்த பின் அவருடைய உண்மையான வாரிசு நான்தான் என்று பல்வேறு தரப்பினர் கூறிவருவது துரதிர்ஷ்டவசமானது. 2016 சட்ட மன்றத் தேர்தல் வெற்றிகூட அவருக்காகத்தான். அகில இந்திய அளவில் அதிமுகவை மூன்றாவது இடத்துக்கு கொண்டுசென்ற பெருமை அவருக்கு உண்டு. இந்தக் குழப்பமான நிலையில், ஆள்வோரும், மத்திய அரசும் தமிழக மக்களின் மனநிலையை அறிந்துகொள்ளக் கிடைத்த அற்புதமான வாய்ப்புதான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். இந்தத் தேர்தலை நியாயமாக நடத்தி, மக்கள் கருத்தறிந்து செயல்பட வேண்டும்.
- எம்.ஆர்.லட்சுமிநாராயணன், தாத்தையங்கார்ப்பட்டி.
நம்பிக்கை நட்சத்திரம்!
தி
யாகத் தலைமுறையின் தொடர்ச்சியாய் விளங்கும் நல்லகண்ணு போன்ற தலைவர்களே நம் தலைமுறைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாய்த் திகழ்கிறார்கள். எளிமை, நேர்மை, பொதுவாழ்வில் ஒழுக்கம் ஆகிய பண்புகள் தமிழகத்தில் மேலும் மேலும் விரைவில் மலரும் என்பதற்கான நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் நல்லகண்ணு. அவரைப் பற்றிய ‘தலைவர் 11’ பதிவு சிறப்பு.
-நா.வீரபாண்டியன், பட்டுக்கோட்டை.
சுதந்திரமும், புத்த மதமும்!
அ
ம்பேத்கர் நினைவு தினத்தன்று வெளியான, ‘சுதந்திரம் ஏன் முக்கியமானது?’ கட்டுரை வாசித்தேன். தன்னுடைய 30 வயதைக் கடந்த நிலையில், லண்டனின் ஹென்றி வீதியில் அம்பேத்கர் தங்கியிருந்த வீடு குறித்து அழகாக விவரித்திருக்கிறார் கட்டுரையாளர். ‘அந்த வீடு அம்பேத்கர் தனது இளமையில் வாழ்ந்த காலத்தை மட்டும் நினைவுபடுத்தவில்லை, படிப்பின் மூலம் ‘விடுதலை’ பெற்றுவிட வேண்டும் என்ற அவருடைய விருப்பத்தையும் நினைவுபடுத்தியது’ என்ற வரிகள் சிந்திக்க வைக்கின்றன. கல்வி முன்னேற்றம் ஒரு மனிதனை மேம்படுத்தும் என்றார் அம்பேத்கர். அவர் ஏன் புத்த மதத்துக்கு மாறினார், என்பதைச் சுட்டும் வாக்கியத்துடன் கட்டுரை முடிந்திருப்பது நிறைவு.
- மா.கார்த்திகேயன், ஆர்.எஸ்.மங்கலம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT