Published : 12 Dec 2017 09:55 AM
Last Updated : 12 Dec 2017 09:55 AM
துயரம் அகலட்டும்
மீ
னவர் உயிரிழப்புகளின் துயரமும், கொடிக்கால் ஷேக் அப்துல்லாவின் மிகுதுயர வரிகளும் நமது வரம்புகளை மட்டும் காட்டவில்லை, வரம்புகளைத் தாண்டவேண்டிய அவசியங்களையும் காட்டுகின்றன. கொடிக்கால் ஷேக் அப்துல்லா போன்றவர்களை மறந்துவிட்டு யார் யாரையோ கொண்டாடிய தமிழினத்துக்கான தண்டனைதான் இந்தத் துயரம். இன்னும் காலம் கடலுள் மொத்தமாக அமிழ்ந்துவிடவில்லை, குமரி தமிழ் மீனவர்களுக்கான நமது செயல்பாடுகள் தொடரட்டும்!
- ஆழி செந்தில்நாதன், மொழியுரிமைச் செயற்பாட்டாளர், சென்னை.
தஞ்சைக்குப் பெருமை தந்த பாரதி!
பே
ராசிரியர் ய.மணிகண்டன் எழுதிய 'பாரதியின் கைதை எப்படி எதிர்கொண்டது தமிழகம்?' என்னும் கட்டுரையில் அவர் சுட்டிக்காட்டிய தகவல் தஞ்சை மாவட்ட மக்களுக்குப் பெருமை சேர்த்துள்ளது. ஆங்கிலேயர்களால் பாரதி கைது செய்யப்பட்டபோது அதைக் கண்டித்தும், அவர் விடுதலை செய்யப்பட்டபோது மகிழ்ந்து வரவேற்றும் தீர்மானம் நிறைவேற்றிய ஒரே மண் தஞ்சை மண் எனக் கூறியிருப்பது புதிய தகவல். நெல்லை பூமி சுதந்திரப் போராட்ட வீரர்களை உற்பத்திசெய்தது. தஞ்சை மண் அவர்களுக்கு அடைக்கலம் தந்தது. பாரதி மீசையை மழித்துக்கொண்டு தலைமறைவாய் இருந்த இடம் முன்னைய தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கீழை நாகை என்பதையும் நினைத்துப்பார்க்க வேண்டியுள்ளது. சிறப்பான பதிவு.
-வெ.மதியரசன், பாப்பாநாடு, தஞ்சாவூர் மாவட்டம்.
தற்கொலையும் தீர்வும்
மே
லும் இரு மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள செய்தியைப் பார்த்தேன். ஒரு கோடி மாணவர்களில் ஓரிருவர் சம்பந்தப்பட்டதுதானே என்று இவ்விஷயத்தில் மெத்தனமாக இருத்தல் கூடாது. மதிப்பெண்களைக் கொண்டே மாணவரை மதிப்பிடும் முறையிலிருந்தும் விலக வேண்டும். ஒவ்வொரு மாணவரிடமும் ஒன்றுக்கு மேற்பட்ட சிறப்புகள், திறன்கள் இருக்கும். அவற்றை முன்னிறுத்தி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இசை, ஒவியம், நாடகம், கைத்திறன் போன்றவற்றில் தனித்திறன் இருப்பதைப் பாராட்ட வேண்டும். அறிவியல் பாடத்தில் சுணக்கமாக இருக்கும் மாணவரிடம் கதை சொல்லும் திறனோ, கவிதை இயற்றும் திறனோ இருக்கக் கூடும். ஆசிரியர்கள் அவற்றை முன்னிறுத்தி மாணவரை ஊக்குவிக்க முற்பட்டால் தற்கொலை முடிவெடுக்க மாட்டார்கள். எதுவும் அறியாத மக்கு என்று எவரும் இல்லை என்பதை முதலில் ஆசிரியர்கள் நம்ப வேண்டும்!
-ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
முதலில் இதைக் கவனியுங்கள்
டி
ச.8-ல் வெளியான, ‘வங்கி டெபாசிட்தாரர்களின் நலனைக் காப்பாற்றுங்கள்’ தலையங்கம் வங்கி வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கியுள்ள ஒரு பெரிய அபாயத்தைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. மத்திய அரசு கொண்டுவர எத்தனிக்கும் எப்.ஆர்.டி.ஐ. மசோதா- 2017-ல் வங்கி வாடிக்கையாளர்கள் வைத்துள்ள வைப்புத் தொகைகளின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் சில வாசகங்கள் சேர்க்கப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. வாராக்கடன்கள் வசூலுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இன்றைய தினம் பொதுத் துறை வங்கிகள் சந்திக்கும் முக்கியப் பிரச்சினை அது. இதைச் செய்தாலே பொதுத்துறை வங்கிகள் திரும்பவும் வலிமை பெறும்.
-ஜா.அனந்த பத்மநாபன், திருச்சி.
காலத்தின் எச்சரிக்கை
த
மிழக மக்களில் ஒரு பகுதியினர் அடுத்த மாநிலத்துடன் இணைய விரும்புகிறோம் என்று கூறுகிறார்கள் எனில், தமிழக அரசு மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை கேள்விக்குறியாகிறது. எஞ்சியுள்ள தமிழ் மக்களும் இதே வார்த்தையை கூறும் முன்னர் மெத்தனப் போக்கிலிருந்து அரசு நிர்வாகம் உடனடியாக விடுபட வேண்டியது அவசியம். காலம் தரும் சரியான எச்சரிக்கை இது!
- சசிபாலன், ‘தி இந்து’ இணையதளத்தில்…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT