Published : 28 Dec 2017 09:55 AM
Last Updated : 28 Dec 2017 09:55 AM
கடவுளின் நாக்கு!
க
டவுளின் நாக்கு தொடர் முடிந்ததை நினைக்கும்போது வருத்தமளிக்கிறது.செவ்வாய் வந்தாலே எஸ்.ரா.வின் கட்டுரை இடம்பெறும் பக்கத்தைத் தேடிப் படித்த 77 வாரங்களும் காலைப் பொழுதைப் பயனுள்ளதாக்கிய நாட்கள். ஒவ்வொரு நாளும் சிந்தனையைத் தட்டிவிடும் வரிகள். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நாட்டின் நாட்டுப்புறக் கதைகளைப் பயன்படுத்தி நம்மையும் அக்கதைகளைத் தேடிப் பிடித்துப் படிக்க வைத்துவிடுவார். முல்லா, தண்ணீர் சுமந்துவரும் நண்பனிடம் ‘ஜாக்கிரதை’ என்பார். அவர், ‘தான் உடைக்கவில்லையே’ என்பார். ‘உடைந்த பிறகு கண்டித்து என்ன பிரயோசனம்’ என்று சொல்லி, ‘கவனத்தில் நிறுத்த வேண்டிய விஷயத்தை நூறு முறை சொல்வதில் தப்பில்லை’ என முடிப்பார். இதுதான் எஸ்.ரா.வின் முத்திரை. இதேபோல் இன்னும் பல. இத்தொடர் நிறைவடைந்தது வருத்தத்தைத் தந்தாலும்,எஸ்.ரா.வின் வரிகளே முடிவுக்கும் பொருத்தமாய் இருக்கும் என எண்ணுகிறேன். ஒரு பூனை நூல்கண்டு ஒன்றை உருட்டிச்செல்லும். பூனை நூல்கண்டின் பின்னாலேயே விரட்டிப்போகும். முடிவில் நூல் முடிந்துவிடும். பூனை திகைத்து நிற்கும். அந்தத் திகைப்பு அற்புதமானது. அந்த வெறுமையைப் புரிந்துகொள்ள முடியாத பூனைதான் வாசகனின் மனது.
- மணிகண்டபிரபு, திருப்பூர்.
விழிப்புணர்வு தேவை
டி
சம்பர் 21-ல் ‘காசநோயாளிகளுக்கான உதவித்தொகை மட்டுமல்ல; விழிப்புணர்வும் அவசியம்!’ தலையங்கம் வாசித்தேன். காசநோயினால் வறுமையில் வாடும் நோயாளிகளுக்கு 500 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பைப் பாராட்டியது தலையங்கத்தின் சிறப்பு. அதே சமயம், வறுமையினால் உதவித்தொகையை வேறு வழியில் செலவு செய்துவிடக் கூடாது என்பதற்காகச் சத்து நிறைந்த உணவுகளை உண்பதற்காகவே உதவித்தொகையைப் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை உணர்த்தியதும் வரவேற்கத்தக்கது. காசநோய் முற்றிலும் குணமாகக் கூடிய நோய் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும்.
- எஸ்.பரமசிவம், மதுரை.
உயர்ந்த கோமாளிகள்!
கோ
மாளி எனும் சொல் இன்று கேலியாக, கிண்டலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கோமாளிகள் கூத்தின் மூலம் நாட்டு நடப்புகளை ஆதிக்க சாதிகளின் அநியாயங்களைத் தெரிவிப்பவர்களாக இருந்துள்ளனர். கூத்து என்னும் கலையே மறந்துபோன இந்நாளில் கூத்தின் முக்கியப் பாத்திரமாக வந்த கோமாளிகள் குறித்து ஆய்வுசெய்து, ஓர் அற்புதமான தொகுப்பைத் தந்திருக்கிறார் ஆய்வாளர் இரா.தங்க பாண்டியன். இத்தொகுப்பை ஆய்ந்து, கோமாளிகள் மீதான தன் மதிப்பீட்டுடன் கோமாளிகளின் நிலையை உயர்த்திக் காட்டியுள்ளார் எழுத்தாளர் பிரபஞ்சன்.
- பொன்.குமார், சேலம்.
நாமே உருவாக்குவோம்
அ
ரசின் கொள்கை வகுத்தல் பணியில் மக்களின் பங்கு தொடர்பான கட்டுரை, அறத்தின் வழியில் அரசாங்கத்தைச் செல்ல வைக்கும் அங்குசம் தான் மக்கள் சக்தி என்பதை உணரவைத்தது. வெறுமனே கேள்விகள் கேட்டுப் பயனில்லை. பொதுமக்களின் கருத்துகளை ஒவ்வொரு துறை வாரியாக ஒன்று திரட்டி, பொதுவெளியில் அரசுக்கான கொள்கை முடிவுகளை நாம் அறிவிக்க வைக்க ஒன்றுபட வேண்டும். விவசாயிகளே விவசாய மேம்பாடு மற்றும் நிலையான வருமானத்துக்கான கொள்கைகளை அரசுக்கு வழங்கி, அமல்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும். மக்கள் சார்ந்த நலத் திட்டங்கள் பற்றி பொருளாதார நிபுணர்களைவிட மக்களுக்கே நன்கு தெரியும். மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வண்ணம், அரசுக்கான மக்கள் நலன் சார்ந்த கொள்கை முடிவுகளை மக்களாகிய நாம் உருவாக்கி, பொதுவெளிக்குக் கொண்டுவந்தால் வெற்றி நமதே.
- சு.பாலகணேஷ். மாதவன்குறிச்சி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT