Published : 27 Dec 2017 11:16 AM
Last Updated : 27 Dec 2017 11:16 AM

இப்படிக்கு இவர்கள்: கதைகளின் வழி வாழ்வைக் காட்டிய கதையறிஞர்!

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘கடவுளின் நாக்கு’ தொடர் செறிவான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. உலகளாவிய நவீன இலக்கிய எழுத்துலகில் நடைபெறும் மிக நுட்பமான மாற்றங்களைப் புலப்படுத்தியது. இணைய வாசலில் அவர் தந்திருந்த இணைப்பில் நேரடியாகக் கதைகளை வாசிக்க முடிந்தது. ஒரு படைப்பாளி தேர்ந்த வாசகனாய் மாறி சம கால எழுத்துகளை அறிமுகப்படுத்தும்போது, வாசகன் - புதிய வாசிப்புத் தளங்களை இனங்காண முடிகிறது. இத்தொடரின் வெற்றிக்கு எஸ்.ராவின் கதை சொல்லும் முறையிலான நடை காரணமாய் அமைந்தது.

வெள்ளைத் தாளுக்கு முன் பக்கம் பின் பக்கம் என்று கிடையாது. எதை முதலில் பார்க்கிறோமோ அதுவே அதன் முன் பக்கம் என்ற கவிதை வரிகளைச் சரியான இடத்தில் அவர் பயன்படுத்தியிருப்பதைச் சான்றாகக் கூறலாம். புரிந்துகொள்ளப்படாத மௌன இடைவெளிகளில்தான் காலம் கடந்து நிற்கும் நல்ல படைப்பின் வேர் தன்னைப் பரப்பி, கிளையாய், இலையாய், கனியாய் உருப்பெறுகிறது. தமிழ்ச் சிறுகதைகளின் நூறாண்டுக் கால அடுத்த படிநிலையை இளம் படைப்பாளிகள் நகர்த்தத் தொடங்கிவிட்டார்கள்.

உலகளாவிய அளவில் கதை சொல்லும் வேறுபட்ட முறையை உள்வாங்கித் தமிழுக்குத் தரத் தொடங்கிவிட்டார்கள். காலம் தந்த கொடை கதை இலக்கியங்களே. உலகக் கதைகளின் மூலம் மாறிவரும் வாழ்வை நுட்பமாய் படம்பிடித்த எஸ்.ரா.வின் தொடர் நிறைவுக்கு வந்ததில் வருத்தமே! ‘கடவுளின் நாக்கு’ நூலாக வர வேண்டும்.

- செளந்தர மகாதேவன் , திருநெல்வேலி.

 

ஒரு சிறு உறுத்தல்கூடவா இல்லை?

வெண்மணியின் சோகம் குறித்து அதன் நினைவு நாளில் கட்டுரை வெளியிட்டது பாராட்டுக்குரியது. அன்று என்ன தீர்ப்பை உயர்நீதி மன்றங்கள் வழங்கினவோ, அந்த எண்ணமே இன்று வரை நிலவுகிறது என்பது வருத்தத்துக்குரியது. பணம் படைத்தவர்கள் தீயிட்டுக் கொளுத்தும் அளவுக்குத் தரம் தாழ மாட்டார்கள் என்று அன்று சொன்னதையே.. அதன் பிறகு வெவ்வேறு விதமான வார்த்தைகளில் தீர்ப்புகள் சொல்கின்றன.. அவ்வளவே.

ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது காலங்காலமாக மாறாமலே இருக்கிறது. இப்போதும்கூட, இடதுசாரிகளும் அவர்களைச் சார்ந்த தொழிற்சங்கங்களுமே வெண்மணியில் அஞ்சலி செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மனித இனத்துக்கு நேர்ந்த கொடுமைக்கு தமிழகமே அஞ்சலி செலுத்த வேண்டாமா? இது குறித்து யாருக்கும் ஒரு சிறு உறுத்தல்கூட இல்லையா?

- எஸ்.ஜெயஸ்ரீ, கடலூர்.

 

விவசாயக் கூலிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட கூலியைச் சற்று உயர்த்தித் தாருங்கள் என்று கேட்ட காரணத்துக்காகவே கூலியாட்களைப் பணியிலிருந்து நீக்கியதோடு அல்லாமல், மாற்று ஆளைப் பணிக்கு அமர்த்தியதில் ஏற்பட்ட தஞ்சை வெண்மணிப் போராட்டத்தில் 44 உயிர்களை இழந்த சோகம் 50 ஆண்டுகள் என்ன 500 ஆண்டுகள் ஆனாலும் மறக்கக் கூடியதா... மனித உரிமை மீறல், சாதி ஆதிக்கம், ஆணவப் படுகொலைகள் இன்றும் தொடர்வதை எவ்வாறு தடுக்கப் போகிறோம்?

- எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.

 

நம்பிக்கை அதிகரிக்க வழி

அரசியலில் ஊழல்களுக்கும் சாதியப் படிநிலைகளுக்கும் இடையேயான தொடர்பு குறித்து சேகர் குப்தா எழுதியிருந்த கட்டுரையைப் படித்தேன். ஊழல் என்பது சமரசமின்றித் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. ஊழல் செய்தவர் ஒடுக்கப்பட்டவர் எனும் பெயரில் அனுதாபம் பெற நினைப்பது எவ்வளவு தவறோ அதனினும் பெரிய தவறு உயர் வகுப்பினர் போர்வையில் சிலர் உதவிகள் பெற்று விடுதலை பெற்றுவருவது.

இம்மாதிரியான நிகழ்வுகள், தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, நீதியும் நியாயமும் தேவைப்பட்டால், உயர் வகுப்பினருக்கு வசதிக்கேற்ப கரிசனம் காட்டும் எனும் தோற்றம் நிலைபெற்றுவிடும். இதை உணர்ந்து, அரசு எந்திரமும் நீதித் துறையும் எவ்வித பாரபட்சமுமின்றி ஊழல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமே, நீதிமன்றங்களின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க வழிவகுக்கும்.

- செ.த.ஆகாஷ், மாணவர், தஞ்சாவூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x