Published : 21 Dec 2017 09:41 AM
Last Updated : 21 Dec 2017 09:41 AM
நீரின்றி அமையாது உலகு
டி
ச.18 அன்று வெளியான ‘நதிகளை வணங்கி,கொல்கிறோமா?’ கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் அவலங்கள், நதிகளின் நிலைமையைப் பதிவுசெய்திருக்கின்றன. இன்று மூதாதையருக்கு நீர்நிலைகளில் சடங்குசெய்யும் நாம்; நாளை நம் முன்னோர் நமக்கு விட்டுச் சென்ற ஆறுகளுக்கும் நதிகளுக்கும் ஈமச்சடங்கு செய்யப்போகிறோமா என்ற அச்சம் எழுந்திருக்கிறது. அண்மையில் மயிலாடுதுறையில் புஷ்கரம் விழாவின்போது காவிரியாற்றில் தமிழக முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்கள் நீராடிச் சென்றார்கள். விழா முடிந்த மறுநாள் டன் கணக்கில் குவிந்துக் கிடந்த பழைய ஆடைகள், காலணிகள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் நகராட்சி நிர்வாகத்தால் அப்புறப்படுத்தப்பட்டன. தமிழ் நாட்டில் உள்ள ஆறுகள், ஏரிகள், வாய்க்கால்கள், குளங்கள், குட்டைகள் என அனைத்து நீர்நிலைகளும் இன்று மிகவும் மோசமான நிலையில்தான் உள்ளதை பாதுகாக்க தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்!
- ச.அருள், விளநகர்- ஆறுபாதி.
நிதிக்குழுவின் பணிகள்
மு
ன்னாள் வருவாய்த் துறைச் செயலர் என்.கே. சிங் தலைமையிலான 15-வது நிதிக்குழுவுக்கு முன் மிகப் பெரிய சவால்கள் உள்ளன. மாநில அரசுகள் ஏற்கெனவே நிதி நெருக்கடிக்கிடையில் இருக்கும் தருணத்தில் மத்திய அரசும் நிதி நெருக்கடியிலிருப்பது குழுவின் பணி எப்படி அமையும் என்று தெரியவில்லை. பணியை ஒதுக்கும் நிதிக்குழு மத்திய அரசால் வழங்கப்படும் நிதியின் பயன்பாட்டை கண்காணிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். ஒருவகையில், இது தமிழ் நாடு போன்ற மாநிலங்களின் சுயாட்சிக்கு எதிரானது என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது.
- எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.
ரத்த தானத்தின் மகத்துவம்
டி
ச. 20 அன்று வெளியான ‘உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா?’ என்ற கட்டுரையை வாசித்தேன். ரத்த தானம் என்பது வெற்று விளம்பரமாக இல்லாமல் ஆக்கபூர்வமான ஒன்றாக மாற ரத்த தானம் என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும். பள்ளி, கல்லூரி மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் இதற்கான வேலைகளை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். நாம் வழங்கும் ரத்தம் பலரின் உயிரைக் காப்பாற்றப்போகிறது என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில் ரத்த தானம் செய்ய முன்வருபவர்கள் பலர்.கட்டுரையாளர் குறிப்பிட்டிருப்பதைப் போல், ரத்த தானம் செய்பவர்களை ஊக்குவிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, சாலை விபத்துகள் குறைந்து ரத்தம் தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் குறைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்!
- கூத்தப்பாடி மா. பழனி, தருமபுரி.
மருத்துவர்கள் எடுக்கும் முடிவுகள்
டி
ச.18 அன்று வெளியான ‘மருத்துவர்கள் எடுக்கும் முடிவுகள் எப்போதும் கைகொடுக்குமா?’ கட்டுரை மிக முக்கியமான பதிவு. மனித வாழ்வில் மருத்துவத்துக்குத் தனி இடம் இருந்தாலும் மருத்துவர்கள் எடுக்கும் முடிவுகள் எல்லா சமயங்களிலும் சரியாக இருந்ததில்லை. நம்மில் பலர் சொந்த அனுபவத்தின் மூலம் இதை உணர்ந்திருப்பார்கள். கட்டுரையாளர் தெரிவித்திருப்பதுபோல் நோய் என்ன என்று தெரிந்துகொள்வதில்தான் பெரும்பாலும் தவறு நேர்கிறது. அது சிகிச்சையையே தவறானதாக்கிவிடுகிறது. அனுமானத்தின் அடிப்படையில் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகளில் இதுபோன்ற ஆபத்துகள் நிறைய உண்டு. ஒரே பாதிப்பு குறித்து மருத்துவர்கள் வெவ்வேறு கருத்துகளைத் தெரிவிப்பதும் நடக்கிறது. இது நோயாளிகள், உறவினர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
- பி.கே. ஜீவன், கும்பகோணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT