Published : 03 Nov 2017 09:19 AM
Last Updated : 03 Nov 2017 09:19 AM

இப்படிக்கு இவர்கள்: ஆழமான உண்மைகளைப் பேசும் நடுப்பக்கங்கள்!

முதுபெரும் தலைவர் கருணாநிதியின் அரசியல் பங்களிப்பைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூலிலிருந்து கட்டுரைகள், பேட்டிகளை ‘தி இந்து’வின் நடுப்பக்கத்தில் வெளியிட ஆரம்பித்த நாளிலிருந்து பரவசத்தில் இருக்கிறேன். காமராஜரோ அண்ணாவோ யாராக இருந்தாலும் அவர்கள் இருக்கும் காலத்தில் அவர்களின் பங்களிப்பை இருட்டடிப்பு செய்துவிட்டு, இறந்த பிறகு பெருமை பேசுவது தமிழனின் வழக்கம். ‘தி இந்து’ நாளிதழ் அதை மாற்ற முனைந்து எடுத்திருக்கும் முயற்சி நெஞ்சாரப் பாராட்டத்தக்கது.

ஆளும் கட்சியாக திமுக இல்லாதபோது ‘தி இந்து’ இப்படிச் செய்வது குறிப்பிடத்தக்கது. கருணாதியின் உதவியாளர் சண்முகநாதனின் பேட்டி கருணாநிதி என்கிற ஆளுமையைப் பற்றி மட்டும் சொல்லவில்லை; இன்னொரு ஆளுமையான எம்ஜிஆர், திமுக அதிமுக இரு கட்சிகளின் பின்கதைகள் என்று நவீன தமிழ்நாட்டின் ஒரு முக்கியமான காலகட்டத்தையே நம் கண் முன் கொண்டுவருகிறது. எந்தவித மனமாச்சரியமும் இல்லாமல் எம்ஜிஆரையும் கூட உரிய அன்பு, மதிப்பினூடாக அணுகுவது சண்முகநாதனின் சிறப்பியல்பு என்றே சொல்ல வேண்டும். எந்தத் தலைவர்தான் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்? காந்தி மீது இல்லாத விமர்சனமா? கருணாநிதியின் வரலாற்றை விமர்சனங்களால் மட்டுமே நிறைத்துவிட முடியாது. மிக ஆழமான உண்மைகளை வெளிக்கொண்டுவருகின்றன நடுப்பக்கங்கள். வாழ்த்துகள்!

- சிவகுமார், சென்னை.

பாராட்டுக்குரிய செயல்

க்.31 தேதியிட்ட கோவாவில் ஏடிஎம் கொள்ளை யைத் தடுத்த காவலாளிக்குக் குவியும் பாராட்டு கள் என்ற கட்டுரை படித்தேன். ‘தி இந்து’வின் வித்தியாசமான அணுகுமுறை மிகவும் பிடித்திருந்தது. ஏடிஎம் கொள்ளையைப் பற்றி வெளியிட்டதுடன், மறுநாள் அக்காவலாளி பாராட்டுச் சான்றிதழ் பெறும் புகைப்படத்துடன், இதுபோன்ற தனியார் பாதுகாப்புத் துறைக் காவலர்களின் அவலங்களையும், பணி பாதுகாப்பின்மையும் வெளியிட்டுள்ளது நல்ல விஷயம். தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யும் பணியாளர்கள் என்றென்றும் பாராட்டுக்குஉரியவர்கள்தான்.

- ஜீவன்.பி.கே. கும்பகோணம்.

இதழியல் முன்னுதாரணம்!

தமிழ் இதழியல் வரலாற்றில் முதன்முறையாக, ஒரு நாளிதழ், அதே மொழியில், சமகாலத்தில் வந்து கொண்டிருக்கும் இன்னொரு நாளிதழைப் பற்றி நடுப்பக்கத்தில் தலையங்கம், கட்டுரை, பேட்டி என வெளியிட்டிருப்பது புதுமை. வரவேற்க வேண்டிய செயல். ‘வாழ்க நீ தினத்தந்தி!’ தலையங்கத்தில் தினத்தந்தி நாளிதழ் எந்தக் காலச் சூழலில் எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பதை விளக்கிய விதம் அருமை. ‘ஆதித்தனார் : தமிழ் இதழியலின் பிதாமகன்’ கட்டுரையில் "அரிசி விற்றால் சாக்காவது மிச்சப்படும். பத்திரிகை நடத்தினால் என்ன மிஞ்சும்" எனக் கேட்ட மாமனார் ஓ.ராமசாமியே வியக்கும் வண்ணம் வெற்றி கண்ட ஆதித்தனாரின் உழைப்பு அசாத்தியமானது.

தந்தி குழும இயக்குநர் பாலசுப்பிரமணியன் ஆதித்தனின் பேட்டி, தந்தியின் எதிர்காலத் திட்டம் பற்றிப் பேசியது. அச்சு ஊடகத்துக்கு ஒரு அணுகுமுறையும் காட்சி ஊடகங்கத்துக்கு ஒரு அணுகு முறையும் கொண்டு இயங்கும் அவரின் தனிப் பாணி வரவேற்க வேண்டியது. அதிலும் ‘பேப்பர் போடும் பையன்’ வரை தொழிலாளர்கள் மேல் அவர் கொண்டுள்ள அக்கறை நெகிழவைத்தது!

- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

தமிழ்ப் பத்திரிகை உலகில், 75 ஆண்டுகளைக் கடந்து தனக்கென்று ஒரு தனியிடத்தைத் தக்கவைத்துள்ள 'தினத்தந்தி', அதன் லட்சியப் பாதையில் வெற்றியடைய 140 ஆண்டு கால பாரம்பரிய மிக்க ‘தி இந்து' வாழ்த்தியிருப்பது அற்புதமான விஷயம். விற்பனையில் மட்டுமல்லாமல் வாசகர் எண்ணிக்கையிலும் ‘தினத்தந்தி’ முதலிடத்தில் இருப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. எளிய தமிழ் நடை அதன் முக்கிய பலம். பார்வைக் குறைவுள்ள பெரியவர்களையும் படிக்கத் தூண்டும் வண்ணம் பெரிய எழுத்துருவில் தலைப்புச் செய்திகளை அச்சிடுவதும் குறிப்பிடத்தக்க அம்சம். கிராம மக்களிடையே நாளிதழ் படிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து, அவர்களின் பொது அறிவை வளர்க்க தினத்தந்தி பெரும் பங்காற்றியது என்றால் அது மிகையில்லை.

- அ.ஜெயினுலாப்தீன், சென்னை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x