Published : 06 Nov 2017 09:46 AM
Last Updated : 06 Nov 2017 09:46 AM

இப்படிக்கு இவர்கள்: எம்ஜிஆர் பிரிய யார் காரணம்?

ண்ணாவின் பேச்சாலும் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காங்கிரஸிலிருந்து விலகி, 1952-ல் திமுகவில் நுழைந்தார். 1957-ல் முதல் முறையாக திமுக தேர்தலில் நின்று, 15 சட்ட மன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்த நேரத்தில் புரட்சித் தலைவருக்கு மக்களிடம் அமோக ஆதரவு இருந்தது. அண்ணாவும் அடுத்தகட்ட திமுக வின் தலைவர்களும் எழுத்தாலும் பேச்சாலும் கட்சியை வளர்த்தார்கள் என்றால், கடைக்கோடி பாமர மக்களிடமும் சினிமா மூலம் திமுகவைக் கொண்டுசென்றார் எம்ஜிஆர்.

1958-ல் ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சின்னமாக திமுக கொடியை அறிமுகப்படுத்தினார். கருப்பு, சிவப்புக் கொடியை திமுக கொடி என்று சொன்னவர்களைவிட, எம்ஜிஆர் கொடி என்று சொன்னவர்கள் அந்நாட்களில் அதிகம். பிறகு வெளியான அனைத்துப் படங்களிலும் திமுக கொடியையும், அண்ணாவையும் பகிரங்கமாக முன்னிலைப்படுத்தினார். 1962 தேர்தலில் திமுக 50 இடங்களில் வென்றதற்கும் ஒரு முக்கியமான காரணமாக எம்ஜிஆர் இருந்தார். 1967 தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடிக்கவும் எம்ஜிஆர் முக்கியமான காரணமாக இருந்தார். அந்தச் சமயத்தில்தான் அவர் எம்.ஆர்.ராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்தார். திமுகவின் அமைச்சரவைப் பட்டியலை வெளியிடும் முன்பு, எம்ஜிஆரிடம் காட்டிவரச் சொல்லி அப்போது அனுப்பியிருந்தார் அண்ணா. அந்த அளவுக்கு ஒரு முக்கிய இடத்தை அவர் எம்ஜிஆருக்குக் கொடுத்திருந்தார். அண்ணாவின் மறைவுக்குப் பின் நெடுஞ்செழியன் முதல்வராகாமல், கருணாநிதி முதல்வரானதற்கும் கட்சித் தலைவரானதற்கும் முக்கியமான காரணமாக இருந்தவர் எம்ஜிஆர். மீண்டும் 1971 தேர்தலில் 184 தொகுதிகளில் வரலாறு காணாத வெற்றியைத் திமுக குவித்ததன் பின்னணியிலும் எம்ஜிஆரின் கடுமையான உழைப்பு இருந்தது. திமுகவின் பொருளாளராக இருந்த புரட்சித் தலைவருக்கு சுகாதாரத் துறை அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் விரும்பினார்கள். ஆனால், சினிமாவிலிருந்து விலகி சுகாதாரத் துறை அமைச்சர் பதவி ஏற்க வேண்டும் என்ற நிலையில், அந்தக் கோரிக்கையைப் புரட்சித் தலைவர் நிராகரித்தார். ஏனென்றால், அப்போது அவருக்கு சினிமாதான் முதல் விருப்பமாக இருந்தது. பதவியை அவர் ஒரு பொருட்டாக நினைக்கவே இல்லை என்பதுதான் உண்மை.

1971 தேர்தலுக்குப் பிறகு, கருணாநிதியின் போக்கில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. மேலும், சட்ட மன்ற உறுப்பினர்கள் செய்யும் தவறுகளைக் கண்டுகொள்ளாமல், அவர்கள் ஆதரவு மட்டும் இருந்தால் போதும் என்று அனுசரித்துச் சென்றார். அடுத்த கட்டமாக, எம்ஜிஆருக்குப் போட்டியாக மு.க.முத்துவை சினிமாவில் கொண்டுவந்தார். முத்துவின் பெயரால் திமுகவில் ஏராளமான ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. பிளவை நோக்கித் தள்ளிய புள்ளிகளில் முக்கியமான ஒன்று இது. ஏனென்றால், எம்ஜிஆர் மன்றங்கள் நெருக்கடியில் அப்போது தள்ளப்பட்டிருந்தன.

சென்னையில் எம்ஜிஆர் மன்றத்தின் அடையாளச் சின்னமான தாமரைப்பூ கொடிக்கு அங்கீகாரம் கேட்பது தொடர்பாக ஒரு கூட்டம் நடத்தினோம். 1972 அக்டோபர் 1 அன்று நடந்த அந்தக் கூட்டத்தில் பேசும்போதுகூட ‘‘திமுகதான் நமது ஒரே அமைப்பு; திமுகதான் நம்முடைய கொடி; தனித்த வேறு அடையாளம் எதுவும் நமக்குத் தேவை இல்லை’’ என்று பேசினார் எம்ஜிஆர். அப்போது மாநிலம் முழுக்க மு.க.முத்து மன்றங்கள் தொடங்கப் பட்டுவரும் சூழலை எம்ஜிஆரிடம் எடுத்துச் சொன்னவன் நான். அடுத்த ஒரு வாரத்தில் திருக் கழுக்குன்றம் கூட்டத்தில் எம்ஜிஆர் கணக்கு கேட்டதற்கும் அடுத்த மறு வாரமே திமுகவிலிருந்து அவர் நீக்கப்பட்டதற்கும் கருணாநிதியின் போக்குகளே காரணம்.

- சைதை துரைசாமி, முன்னாள் மேயர், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x