Published : 13 Nov 2017 09:22 AM
Last Updated : 13 Nov 2017 09:22 AM
மகத்தான பணி!
‘ந
வம்பர் 11 அன்று ‘நூல்வெளி’ பகுதியில் வெளியான ‘தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வாசிப்புப் பயணம் எங்கெங்கும் பரவட்டும்!’ தலையங்கம் வாசித்தேன். புத்தகக் காட்சிகள், இலக்கிய விழாக்கள் என்று எப்போதுமே வாசிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் தமிழகம். புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக ‘தமிழ்நாடு அறிவியல் இயக்கம்’ பள்ளிகளை நோக்கி மேற்கொண்டிருக்கும் பயணம் பாராட்டத்தக்கது. பள்ளிகளில் புத்தகக் காட்சி நடத்துவது என்பது பள்ளிப் படிப்பைத் தாண்டி மாணவ - மாணவிகளுக்குப் புதிய அனுபவத்தை வழங்கக்கூடியது. இன்று தத்தம் துறையில் சிறப்பாகப் பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் பள்ளி நாட்களிலேயே வாசிப்புப் பழக்கத்தைக் கைக்கொண்டவர்கள் என்றே சொல்லலாம். ஏழைக் குழந்தைகள் பயன் பெற நூலகம், புத்தகங்களைப் பரிசளிப்பது என்று வரும் தலைமுறையை வளமாக்க மேற்கொள்ளப்படும் அத்தனை பணிகளும் மிகுந்த நம்பிக்கையளிக்கின்றன.
- ஆர்.குமரேசன், வேலூர்.
வா
ரந்தோறும் ‘நூல் வெளி’ பகுதியைக் காத்திருந்து படிக்கும் ஆர்வம் உடையவன் நான். நவ.11-ல் வெளியான ‘தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வாசிப்புப் பயணம் எங்கெங்கும் பரவட்டும்’ தலையங்கம் கண்டு மெய்சிலிர்த்தேன். காரணம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயத்தின் பணிகளை ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் முழுமையாக உள்வாங்கி, வாசிப்பு உலகத்துக்குக் கவனப்படுத்தியிருக்கிறது. ‘தி இந்து’ வெளியீடான ‘நம் கல்வி நம் உரிமை’ உட்பட ஏராளமான நூல்கள் வாசித்து விவாதிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் மத்தியில் பெரும் மனமாற்றத்தை ஏற்படுத்தி வகுப்பறைகளில் நேரடியாக மாற்றங்களை உருவாக்கிய தொடர் செயல்பாடு அது. தலையங்கத்தில் அதுபற்றியும் குறிப்பிட்டிருக்கலாம். ‘தி இந்து’ வின் பெரும் சேவைக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
- என்.மணி, ஈரோடு.
ஏனிந்த விமர்சனம்?
ச
சிகலா குடும்பத்தினர் முறைகேடான வழிகளில் சொத்து சேர்த்த விவரங்கள் 1992-ல் இருந்தே பல்வேறு ஊடகங்களில் வந்துகொண்டிருக்கின்றன. 1996-ல் திமுக ஆட்சிக்கு வந்த பின், ஜெயலலிதா - சசிகலா குடும்பத்தினர் சேர்ந்து செய்த முறைகேடுகள் அதிகாரபூர்வமாக அம்பலப்படுத்தப்பட்டு வழக்குகளும் பதியப்பட்டன. ஒரு வழக்கில், ஜெயலலிதா தண்டனையும் பெற்றார். இத்தகைய எல்லா தகவல்களும் ஏற்கெனவே மக்களுக் குத் தெரிந்துள்ள நிலையில், தற்போது நடந்துவரும் வருமான வரித் துறை சோதனை மக்களிடம் பெரும் மாற்றங்களைத் தூண்டவில்லை. மாறாக, சசிகலா குடும்பத்தினர் அதீதமான சொத்து சேர்த்த விவகாரங்கள், வருமான வரித் துறையினருக்கு இப்போதுதான் தெரிந்துள்ளது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. அதேபோல, கடந்த 20 வருடங்களாக சசிகலா குடும்பத்தினர் முறைகேடுகளில் ஈடுபட பல வகையிலும் உதவியாக இருந்த அரசு அதிகாரிகள், முன்னாள் - இந்நாள் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், மிடாஸில் இயக்குநர் குழுவில் பொறுப்பு வகித்தவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தியிருந்தால், அது மத்திய அரசுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருக்கும். இந்தளவுக்கு விமர்சனத்துக்கு ஆளாகியிருக்காது.
- செ.சல்மான், ராமேஸ்வரம்.
தமிழகமும் கொண்டாடட்டும்!
ந
வம்பர் 10 அன்று வெளியான ‘திப்பு சுல்தான்: மதச்சார்பின்மையின் மகத்தான முன்னோடி!’ என்னும் கட்டுரை படித்தேன். இஸ்லாமியர் என்பதாலேயே அவர் மீது மதச் சாயம் பூசி விமர்சிப்பவர்கள் மத்தியில், இந்தக் கட்டுரை பாராட்டுக்குரியது. அவர் கர்நாடகத் தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் கூட கொண்டாடப்பட வேண்டியவர். தமிழகத்தின் பல பகுதிகளை ஆட்சி செய்திருக்கிறார். ஹைதர் அலி-திப்பு சுல்தான் படை தமிழக மண்ணில் ஆங்கிலேயப் படைகளை வீழ்த்தியிருக்கிறது. ஏவுகணை நாயகனான திப்புவின் ஏவுகணைப் படை அதுவரை உலகம் கண்டிராதது. திப்பு சுல்தான் நல்லாட்சியின் அடையாளம், திப்பு ஆங்கிலேய எதிர்ப்பின் அடையாளம், மத நல்லிணக்கத்தின் அடையாளம்.
- அப்துல் ரஜாக் முஸ்தபா, மாணவர், மின்னஞ்சல் வழியாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT