Published : 09 Nov 2017 09:39 AM
Last Updated : 09 Nov 2017 09:39 AM

இப்படிக்கு இவர்கள்: ஆய்வுக்கு உதவும் நூல்

‘திஇந்து’ நாளிதழின் நடுப்பக்கத்தைத் தொடர்ந்து வாசிப்பவன் என்ற முறையில், ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ புத்தகத்திலிருந்து தேர்ந்தெடுத்து வெளியிடப்படும் கட்டுரைகள் மற்றும் பேட்டிகளையும் வாசித்தேன். அனைத்துமே சிந்திக்க வைத்தன. குறிப்பாக கருணாநிதியின் செயலராக, நிழலாக இருந்துவரும் சண்முகநாதனின் பேட்டி கருணாநிதி எனும் தனிமனிதர், கடின உழைப்பாளி, அரசியல் தலைவர், ஊழியர் களுடனும் குடும்ப உறவோடும் பழகும் பாங்கு என பல பரிமாணங்களைத் தொட்டு விவரித்துள்ளது. இந்நூல் திராவிட இயக்கம் பற்றிய நூல் மட்டுமல்ல, ஆய்வாளர்களுக்கும்கூடப் பெரிதும் உதவக்கூடியது என்றே கருதுகிறேன்.

- கே.வி.ராஜ்குமார், தலைவர் - தென் இந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் (சிஸ்ஃபா), தமிழ்நாடு.

அரசின் கடமை

‘பருவ மழையை எதிர்கொள்ள வெற்று வார்த்தைகள் போதாது’ (தலையங்கம், நவ.2) யோசித்துச் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. வெற்றுவார்த்தைகளால் இயற்கையின் சீற்றங்களையும் பேரழிவுகளையும் தவிர்க்க முடியாது. ஆனால், அந்த சீற்றங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, பேரிடர்களை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதனை உணர வேண்டாமா?

சென்னை போன்ற பெருநகரங்களில் பெருகிவரும் மக்கள் நெருக்கடியும் அதனைச் சமாளிக்கும் விதமான பாதாள சாக்கடை, கால்வாய் வசதிகள் விரிவுசெய்தும் ஆக்கபூர்வமான செயல்பாடுகளின் மூலமாக வடகிழக்குப் பருவ மழை மட்டுமல்ல, எப்போது மழை வந்தாலும் சமாளித்து மக்களுக்குச் சிரமம் இல்லாத நிலையினை உருவாக்கித் தருவதே மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசின் கடமையாகும்.

- கூத்தப்பாடி மா.பழனி, தருமபுரி.

ஏழ்மை தடையல்ல

அக். 31-ல் வெளியான, ‘மேலாண்மை பொன்னுச் சாமி எனும் கதையுலக சம்சாரி’ படித்தேன். சொற்களைப் பூப்போலப் பயன்படுத்தத் தெரிந்தவர். வார்த்தைகளின் வழியாய் குரலற்றவர்களின் வலியை நமக்குள் கடத்தியவர். அவரது ‘அரும்பு’ போன்ற கதைகள் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கின. ‘உள்வட்டம்’, ‘கூறை’ போன்றவை மனித மனங்களின் விசித்திரத்தைப் பேசின. இயக்கவாதியாய் இருப்பது படைப்புக்குத் தடையல்ல என்பதைத் தன் படைப்புகளின் வழியாய் நிரூபித்தவர் அவர். வறுமை உட்பட எதுவும் உச்சங்களைத் தொடத் தடை அல்ல என நமக்கு உணர்த்திய வாழ்க்கை அவருடையது.

- நந்தலாலா, கவிஞர், திருச்சி.

தமிழால் இணைந்த நாளிதழ்கள்

‘தினத்தந்தி’யின் 75 ஆண்டு வரலாற்றை ‘தி இந்து’ தனது வாசகர்களைத் திரும்பிப் பார்க்க வைத் துள்ளது. தலையங்கத்துடன் நடுப்பக்கத்தை முழுவதுமாக இன்னொரு தமிழ்ப் பத்திரிகைக் காக ஒதுக்குவது என்பது எந்தத் தமிழ்ப் பத்திரிகையும் இதுவரை செய்யாத ஒரு காரியம். ‘தமிழால் இணைவோம்’ என்பது வெற்று முழக்கமல்ல, என்பதை ‘வெல்க தமிழ்’ என்ற முழக்கம்கொண்ட தந்தியை வாழ்த்தியதன் மூலம் நிரூபித்திருக்கிறது ‘தி இந்து’.

பாலசுப்பிரமணியன் ஆதித்தன் தன் பேட்டியில், “படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது ஆனால், வாசிப்பு என்பது அதிகரிக்கவில்லை” என்று சொல்வதில் உள்ள ஆதங்கமும், “நீங்கள் தந்தியைப் பார்த்துக்கொள்ளுங்கள் நாங்கள் உங்களைப் பார்த்துக்கொள்கிறோம்” என்று தனது ஊழியர்களுக்கு அவர் கூறியதில் உள்ள பொறுப்பும் சிலிர்க்க வைக்கிறது.

‘‘அடுத்த 25 வருடங்கள் கழித்து என்ன செய்யப்போகிறோம் என்பதற்கு உண்மையில் எங்களிடம் எந்தத் திட்டமும் இல்லை” என்ற கள யதார்த்தமும், “தமிழ், தமிழர் நலன், தமிழர் உரிமையை ஓங்கி ஒலிப்பதில் என்றும் தினத்தந்தி தளராது” என்பதும் பேட்டியின் உச்சங்கள்.

- வீ.சக்திவேல், டி.கல்லுப்பட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x