Published : 30 Nov 2017 10:00 AM
Last Updated : 30 Nov 2017 10:00 AM
தோல்விகளை... அவமானங்களை எதிர்கொள்வதற்குக்
கற்றுத்தராத கல்வி எதற்கு?
ஒ
வ்வொரு நாள் செய்தியும், தமிழகத்தின் ஏதோ ஒரு ஊரில்... பள்ளிப்படிப்பில் இருக்கும் பதின் பருவத்துப் பிள்ளைகளின் தற்கொலை குறித்த செய்திகளைச் சுமந்தபடியேவருவது, அதிர்ச்சிதருகிறது. என்ன ஆனது இன்றைய குழந்தைகளுக்கு? ஒவ்வொரு தற்கொலைக்கும் பின் நிகழ்த்தப்படும் ஆசிரியர்களின் கைதுகளும், பணியிட மாற்றங்களும் எந்த மாற்றத்தையும் நிகழ்த்தப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம். தோல்விகளை... அவமானங்களை எதிர்கொள்வதற்கும் தன்னம்பிக்கை தலையெடுக்கவும் கற்பிக்காத கல்வி எதற்கு? மன அழுத்தத்தில் பெற்றோர்கள், மன அழுத்தத்தில் பிள்ளைகள், மன அழுத்தத்தில் ஆசிரியர்கள் என்று என்ன சாதிக்கப்போகிறோம்? வகுப்பறைக் கல்வியையும் தேர்வுமுறை மதிப்பெண்களையும் கடந்த வசந்தமான ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதைப் பிள்ளைகளுக்கு அறிவிப்போம். அதற்கேற்ப பாடத்திட்டத்தை மாற்றுவோம். தற்கொலைக்குத் தேவையான துணிவில் பாதி இருந்தால், வாழ்க்கையை முழுமையாக, சந்தோஷமாக வாழ்ந்துவிடலாம் என்ற உண்மையை குழந்தைகளின் ஆழ்மனங்களில் விதைப்போம்.
- வளவன்.வ.சி., குழந்தைகள் நலச் செயல்பாட்டாளர், சென்னை.
எளிமையில் அறிவியல்!
எ
ன்.ராமதுரை எழுதிய ‘நிலவில் ஒரு குகை’ கட்டுரை யைப் படித்தபோது நாமே நிலவில் பயணித்தது போன்ற ஒரு சிலிர்ப்பு இருந்தது. அறிவியல் கட்டுரைகளைப் பாமரரும் படிக்க வேண்டும் என்றால், இதுபோன்ற எளிய நடை அவசியம். இதுபோன்ற புதிய தகவல்களை மாணவர்களுக்கு அளிக்கும்போது தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் மீது ஈடுபாடு அதிகரிக்கும்.
- பா.தங்கராஜ், திப்பணம்பட்டி.
ஆண்களின் கடமை!
கே
.பாரதி எழுதிய ‘பெண் உரிமையின் முதல் குரல்!’ (நவ.23) வாசித்தேன். ‘பெருமைக்குரிய வரலாற்றைக் கொண்ட இந்திய மாதர் சங்கத் தின் நூற்றாண்டு விழா சமீபத்தில் நடந்தேறியது. ஆனால், பொதுவெளியில் அது உரிய கவனத்தைப் பெறாமல் போனது பெரிய வருத்தம்’ என்கிறார் கட்டுரையாளர். நூற்றாண்டுகளைக் கடந்துவிட்ட நிலையிலும் மாதர் சங்கங்கள் முன்னெடுத்த பல திட்டங்கள் முழு வெற்றி காண ஏற்ற சூழல் இம்மண்ணில் இன்னும் உருவாகவில்லை. உலக மக்கள்தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கு இந்த உரிமையைப் பெற்றுத்தரும் கடமை ஆண்களுக்கும் இருக்கிறது.
- விவேகன், செங்குடி.
குழாய் பதிக்கலாமே?
செ
ன்னையில் சமீபத்திய மழையின்போது வெள்ள நீர் வடிய வசதியாக, உயர்ந்திருந்த சாலைகளின் குறுக்காக வெட்டி வழி ஏற்படுத்தினார்கள். ஒவ்வொரு மழைக் காலத்திலும் இது தொடர் நடவடிக்கையாக இருக்கிறது. இதற்குப் பதிலாக, சாலையின் குறுக்கே வெட்டப்பட்ட இடத்தில் பலப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் குழாய்களைப் புதைத்தால் அடுத்துவரும் மழைக் காலத்தில் நீர் தானாக வெளியேறும்.
- மு.கணேசன், முதுநிலைப் பொறியாளர், ஓய்வு, சென்னை.
அவசியம் என்ன?
பா
லாவின் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘நாச்சியார்’ படத்தின் டீஸரில் கண்ணியக் குறைவான வசவுச் சொல் இடம்பெற்றிருக்கும் சர்ச்சை தொடர்பாக, (28-ம் தேதி) ‘தி இந்து’ நாளிதழில் எஸ்.வி.சேகர் ஒரு விளக்கம் அளித்திருக்கிறார். அதில், ‘‘ஜோதிகா பேசும் அந்தச் சொல் அவ்வளவு முக்கியமா என முதலில் இயக்குநர் யோசிக்க வேண்டாமா?’’ என்று ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். எப்போதுமே இயக்குநர் பாலாவுக்கு ஒரு விதமான தனிக் குணம் உண்டு. ‘அவன் இவன்’ படத்தில்கூட குழந்தைகள் இசைக் கலைஞரான அனந்த் வைத்தியநாதனைக் குடிகாரராக நடிக்க வைத்தவர்தானே பாலா!
- க.திருக்குமரன், தென்காசி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT