Published : 06 Oct 2017 09:18 AM
Last Updated : 06 Oct 2017 09:18 AM

இப்படிக்கு இவர்கள்: காவல்துறையின் அவலங்கள்

அரசின் கடமை

எஸ்.வி.வேணுகோபாலனின் கட்டுரை (‘முதியோர் நலனில் இளைஞர்களுக்கு அக்கறை இருக்கிறதா?’, அக். 4) வாசித்தேன். சராசரி இந்தியனின் சராசரி ஆயுள்காலம் 72-ஆக உயர்ந்துள்ளதால் மூத்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முதியவர்களில் பெரும்பாலானோருக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் கிடையாது. தம் மக்களைச் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

முதுமையில் தனிமை என்பதே பெருவலியாகும். தம் சொந்த குழந்தைகளுக்குக் கூட நேரத்தை ஒதுக்க இயலாத அவல நிலையில் மூத்தோரிடம் நெருக்கம் ஏற்படுவது அரிது. சில குடும்பங்களில், மூத்த மகனால் பெற்றோரைப் பேணும் பொறுப்பினை ஏற்க இயல்வதில்லை. மகள்கள் வீட்டில் தங்கவும் அவர்களுக்குத் தயக்கம் இருக்கிறது. அரசும் ஏதாவது செய்தாக வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

 

நியாயம்தானா?

ஒரு படத்துக்கான கதைத் தேர்வில் இருந்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என திரைப்படத்துக்குத் தேவையானவர்களைத் தேர்வு செய்து, காட்சிக்கு ஏற்ப நடிகர்களை இயக்கும் இயக்குநருக்கு ரூ.25-லட்சம் தொடங்கி ரூ.1 கோடி வரை ஊதியம் கொடுப்பதையே அதிகமாகக் கருதுகிறார்கள் திரைப்பட முதலீட்டாளர்கள். அவர்களே, வெறுமனே நடித்துவிட்டுப் போகிற கதாநாயகர்களுக்கு மட்டும் ரூ.5 கோடி அள்ளித்தருகிறார்கள்.

தடைகள் பல தாண்டி மனஉறுதியுடன் திரைப்படத்தில் நடிக்க வரும் பெண்களுக்கு, நாயக நடிகர்கள் அளவுக்கு ஊதியம் தரப்படுகிறதா? இத்தகைய நியாயமற்ற திரைப்பட முதலீட்டாளர்கள் உள்ளாட்சி அமைப்புக்கான கேளிக்கை வரி குறித்து கேள்வி எழுப்புவது அர்த்தமற்ற கோரிக்கையே என்பதைத் தெளிவுபடுத்தியது பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘நியாயவான்களே... இந்தச் சலுகை நியாயம்தானா..?' (செப்.4) கட்டுரை.

-க.துள்ளுக்குட்டி, நூர்சாகிபுரம், திருவில்லிபுத்தூர்.

 

காவல் துறையின் அவலங்கள்

கருத்துப் பேழை பகுதியில் வெளியாகிவரும் ‘முடங்கிய தமிழகம்' பகுதி நாம் கண்டும் கேட்டும் கொதித்த விஷயங்களை மீண்டும் நமக்கு நினைவூட்டுவதாகவும் விழிப்புணர்வு ஊட்டுவதாகவும் உள்ளது. ஆட்சி என்பது வயிறு மாதிரி, ‘கடமுடா’வென்று சத்தம் வராதவரை அப்படி ஒரு உறுப்பு இருப்பதே தெரியாது என்பார்கள். தமிழகம் நாளொரு பிரச்சினை, பொழுதொருப் போராட்டம் என்று சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மறுபக்கம் காவல் துறை லஞ்ச ஊழல், முறைகேடுகள், அளவுக்கதிமான ஆளுங்கட்சி விசுவாசம் ஆகிய புதைசேற்றில் சிக்கித் தவிக்கிறது. தொடர் கொள்ளைகள், சாலையில் சங்கிலிப் பறிப்பு போன்றவை அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. மொத்தத்தில் காவல் துறை என்ற தமிழகத்தின் கல்லீரல் கெட்டுக்கொண்டிருக்கிறது.

-ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

 

ஓர் ஆச்சரியத் தொடர்பு

செப்.4 அன்று வெளியான மூன்று வெவ்வேறு கட்டுரைகளுக்கு இடையேயான தொடர்பு ஆச்சரியம் தருகிறது. தன் தந்தையை நன்றாகப் புரிந்துகொண்டவரின் (சுனீல் சாஸ்திரி) கட்டுரை அவரின் தந்தை தன்னைப் புரிய வைத்த விதத்தையும் சொன்னது. அதே நாளில் தன்னை உணர்ந்துகொள்ளாமல், தவறான புரிதலைக் கொண்டு போராடும் மகன் (ஹரிலால்) விஷயத்தில் காந்தி எதிர்கொண்ட சங்கடங்களை விளக்கும் திரைப்படத்தைப் பற்றி ‘இணைய களம்’ பேசியது. ‘முதியோர் நலனில் இளைஞர்களுக்கு அக்கறை இருக்கிறதா?’ கட்டுரை முதியோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அலசியது. நமக்கும் நம் முன்னோருக்கும் மட்டுமல்லாமல் சந்ததியினருக்கும் சரியான வழிமுறைகளைத் தரும் கட்டுரைகள் இவை.

-ஓம்பிரகாஷ், மதுரை.

 

பிறவிப் போராளி

பிரபஞ்சன் எழுதிவரும், ‘எமதுள்ளம் சுடர் விடுக’ தொடரைத் தொடர்ந்து வாசிக்கிறேன். 11-வது அத்தியாயத்தில், ‘வி.எஸ்.’ என்று மக்களால் பேரன்புடன் அழைக்கப்பட்ட வ.சுப்பையாவைப் பற்றிச் சிறப்பாக எழுதியிருக்கிறார் பிரபஞ்சன். அவரை ‘ஒரு பிறவிப் போராளி' என்று அடையாளப்படுத்தியிருக்கிறார். காங்கிரஸ்காரராக இருந்த போதும் கம்யூனிஸ்ட்டாக மாறியபோதும் கொள்கையில் தீவிரமாக இருந்துள்ள சுப்பையாவைப் பற்றி அவ்வாறு குறிப்பிடுவது பொருத்தமானதே.

-பொன்.குமார், சேலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x