Published : 24 Oct 2017 09:12 AM
Last Updated : 24 Oct 2017 09:12 AM
தெற்கிலிருந்து ஒரு சூரியன்
இ
ந்திய மாநிலங்களில் தமிழகம் நிலப் பரப்பிலும், இயற்கை வளத்திலும் குறைவாக இருந்தபோதும் அதன் வளர்ச்சிக்கு 50 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சியின் பங்கு அளப்பரியது. அதைச் சிறப்பிக்கும் விதமாக ‘தி இந்து’ தமிழ் - திசைப் பதிப்பகத்தின் சார்பாக ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நுால் வெளியிடப்பட்டுள்ளது என்பது தமிழர்கள் அனைவரும் பெருமைப்படத்தக்க செய்தி. பெரியாரால் போடப்பட்ட பகுத்தறிவுப் பாதையில் பயணித்த அண்ணாவின் முழக்கமான, ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ என்ற கூட்டாட்சித் தத்துவத்தை அவரின் வழி வந்த கருணாநிதி, 1974-ல் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மாநில சுயாட்சித் தீர்மானம்தான் இன்றைக்கும் தமிழகத்தில் திராவிடப் பாரம்பரியத்தைக் கட்டிக் காக்கிறது. கட்சிக்கு அப்பாற்பட்டு, கருணாநிதியின் 60 ஆண்டு கால சட்ட மன்றப் பணிகளில் அவர் செய்த சாதனைகளை தமிழகம் நினைவுகூர இந்நுால் உதவியாக இருக்கும். எம்ஜிஆரின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவருக்கு ‘எம்.ஜி.ஆர் 100 - காலத்தை வென்ற காவியத் தலைவர்’ என்ற நூலையும் வெளியிட்டு, இன்றைக்கு கலைஞருக்கு ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ என்ற நூலையும் வெளியிட்டு, யாருடைய திறமையாக இருந்தாலும் சரி, அதனை வெளிக்கொணர்வதே எங்கள் பணி என்றிருக்கும் ‘தி இந்து’வின் வாசகன் என்று கூறிக்கொள்வது மிகவும் பெருமையாக இருக்கிறது.
- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.
திட்டக் குழுவின் முன்னோடி
இ
ந்தியாவிலேயே முதன்முதலாக மாநிலத் திட்டக் குழு அமைக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான். ‘கற்கும் சமூகத்தை நோக்கி’ என்ற திட்டக் குழு வின் அறிக்கையில், தமிழ்நாட்டுக்கான கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. கலைஞர் தந்த நற்கொடை அது. இன்றும் அர்த்தமுள்ளதாக உள்ள அதனை நடைமுறைப்படுத்துவது பற்றிச் சிந்திப்பது சிறப்பாகும்.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
புரட்சியெல்லாம் வந்துவிடாது
அ
க்.23 அன்று வெளியான ‘திரைப்படங்கள் அரசியல் பேசக் கூடாதா?’ கட்டுரை வாசித்தேன். திரைப்படம் வெறும் கலை ஊடகம் மட்டுமல்ல, கருத்து ஊடகமும்கூட. மேலும், நேரடியாக மக்களைச் சென்றடையும் எளிய வழியும் அதுதான். தமிழ் சினிமாவுக்கு தமிழக அரசியல் வரலாற்றில் மாபெரும் வினையாற்றுத்தன்மை உண்டென்பதை மறுக்க இயலாது. திரைப்படத்தில் காட்சிப்படுத்துதல் மட்டுமே மக்களின் மனநிலையில் கொந்தளிப்பு, புரட்சி ஏற்படுத்திவிடும் என்பது உண்மை இல்லை. அப்படி இருப்பின் ‘ரமணா’, ‘முதல்வன்’ உள்ளிட்ட படங்கள் மக்களிடமும், ஆட்சியாளர்களிடமும் சிறு மாறுதலைக்கூட ஏற்படுத்தவில்லை என்பது சுடும் உண்மை. ‘மெர்சல்’ திரைப்படம் மத்திய அரசின் தவறான நடவடிக்கைளை இடித்துரைக்கும் முயற்சியாக எடுத்துக்கொள்ளலாம். வருங்காலத் தில் வாக்குகளைப் பெறுவதும் இழப்பதும்தான் இத்திரைப் படத்தின் பின்னால் உள்ள ஆதரவு மற்றும் எதிர்ப்புணர்வின் காரணம். திரைப்படங்களை ஏற்பதும், எதிர்ப்பதும் மக்கள் முடிவாக இருக்க வேண்டுமே தவிர, ஆட்சியாளர்களின் முடிவாக இருக்கக் கூடாது.
- சு.ராமமூர்த்தி, சப்தலிபுரம்.
கண்ணப்பரின் நாய்கள்
அ
க்.22 அன்று கலை ஞாயிறு பகுதியில் வெளியான தியடோர் பாஸ்கரனின் கண்ணப்பரும் அவரது நாய்களும் தனித்துவமான கட்டுரை. நாய்கள் இல்லா மல் வேட்டை எப்படிச் சாத்தியம்? ஆனால், கண்ணப்ப நாயனார் புராணத்தில் அவரது நாய்கள் வர்ணிக்கப்படவில்லை என்ற தகவல் ஆச்சரியப்பட வைக்கிறது. இலக்கியத்தில் நாய்களின் பாத்திரங்களைப் படைப்பதும் அதைப் பற்றி இலக்கியவாதிகள் பேசுவதற்கும் மனத்தடை கள் இருந்ததா என்பதும் ஆய்வுக்குரிய விஷயமே. அல்லதுஎழுத்தைக் காட்டிலும் சிற்பியின் படைப்பு மனம் அதிகக் கூர்மையும் படைப்பாற்றலும் அதிகம் கொண்டதா? இதுபற்றிய தொடர் ஆய்வுகளுக்குக் களம் உள்ளதா என்பதையும் இலக்கிய ஆய்வாளர்கள் அவதானிக்க வேண்டும். மேலும், எவ்வளவு பழங்கால புராதனக் கோயில்களாக இருப்பினும் பெரும்பாலானவர்கள் மூலஸ்தானத்துக்குச் சென்று சிரத்தையுடன் வழிபாடு செய்பவர்களாக மட்டுமே இருப்பதும் இத்தகைய அரிய பொக்கிஷங்களைக் கண்டு ரசிக்கப் பயிற்றுவிக்கப்படாமல் இருப்பதும் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
- என்.மணி, ஈரோடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT