Published : 15 Jul 2014 09:00 AM
Last Updated : 15 Jul 2014 09:00 AM
எல்லோரும் எதிர்பார்த்ததைப் போலவே ஜெர்மனி அணி உலகக் கோப்பையை வென்றுவிட்டது. பிரேசில் அணியை அதன் சொந்த மண்ணில், கோல் மழை பொழிந்து 7-1 என்ற கணக்கில் எப்போது அரையிறுதிப் போட்டியில் தோற்கடித்ததோ அப்போதே ஜெர்மனியின் வெற்றி உறுதியாகிவிட்டது. இறுதிப் போட்டியில் அது எதிர்கொண்ட அணி அர்ஜென்டினா என்பதால், ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருந்தது. அர்ஜென்டினா சாமானியமான அணி அல்ல என்றாலும், ஜெர்மனியைப் பணிய வைக்கும் அளவுக்கு அதனிடம் உத்தி இல்லை என்பது இறுதி ஆட்டத்தில் வெளிப்பட்டுவிட்டது.
உலகக் கோப்பை இறுதியாட்டத்தில் கோல் மழையை எதிர்பார்த்திருந்த காலங்களெல்லாம் போய்விட்டன. ஆனால், பிரேசிலுக்கு எதிரான ஜெர்மனியின் அசாதாரண ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு, கொஞ்சம் எதிர்பார்ப்புகள் இருந்தது உண்மைதான். அந்த வகையில் ஏமாற்றம்தான் என்பதை மறுக்க முடியாது. இரு அணிகளுமே திறமை வாய்ந்த அணிகளாக இருந்தாலும், தங்களுடைய பலத்துக்கு உகந்த ஆட்டத்தை மட்டும் ஆடுவது, வீண் சாகசங்களில் ஈடுபட்டு
உள்ளதையும் இழந்துவிடக் கூடாது என்ற ரீதியில் முன்னெச்சரிக்கை உணர்வே இரு அணிகளின் ஆட்டத்திலும் வெளிப்பட்டது. முழு நேரமும் ஆடி, முடிவு கிடைக்காததால் இருமுறை கூடுதல் நேரம் வழங்கப்பட்டு, இரண்டாவது கூடுதல் நேரத்தின் பிற்பகுதியில்தான் ஒரு கோல் விழுந்து முடிவு கிடைத்தது. இதனாலேயே நல்லதொரு இறுதி ஆட்டத்தைப் பார்த்த முழுத் திருப்தி பெரும்பாலானோருக்கு ஏற்படவில்லை.
சுமார் 64 ஆண்டுகளுக்குப் பின் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே உலகக் கால்பந்து போட்டியை நடத்திய பிரேசிலுக்கு இந்தப் போட்டிகள் பெருத்த ஏமாற்றம்தான் என்றாலும், பிரேசில் வெளியேறிவிட்ட பிறகும் பிரேசிலியர்களிடம் வெளிப்பட்ட கால்பந்தாட்ட உற்சாகம் உலகம் கவனிக்க வேண்டியது. தங்களை அரை இறுதியில் தோற்கடித்த அணிதான் ஜெர்மனி என்றாலும், பிரேசில் ரசிகர்கள் ஜெர்மனியின் வெற்றியை அங்கீகரித்தனர், வரவேற்றனர். உண்மையான விளை யாட்டுக்கு இது மரியாதை.
உலகெங்கிலும் ஊடகங்கள் வாயிலாக மட்டுமே இந்தக் கால்களின் திரு விழாவில் பங்கேற்ற நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கிரிக்கெட்டைத் தாண்டியும் விளையாட்டுகள் இருக்கின்றன என்கிற உணர்வை நம்முடைய ஆளும் வர்க்கத்துக்கு இத்தகைய திருவிழாக்கள்தான் உருவாக்க வேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT