Published : 14 Jul 2014 10:00 AM
Last Updated : 14 Jul 2014 10:00 AM
பெரும் சவாலொன்றைச் சற்று அலட்சியமாகவே எதிர்கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. புதிதாகத் தாக்கல்செய்யப்பட்டிருக்கும் நிதிநிலை அறிக்கைகுறித்து இப்படித்தான் சொல்ல வேண்டும்.
எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. நடுத்தரக் குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு விலைவாசிக் கட்டுப்பாடு, அதிக வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரவசதிகளைக் குறைந்த கட்டணத்தில், நல்ல தரத்தில் பெறுவதற்கான ஏற்பாடுகள் போன்றவை. பெருநிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் பிரம்மாண்டமானவை: எல்லாவற்றிலும் சலுகை, வரியில்லாச் சூழல், அரசின் தலையீடு அறவே இல்லாத நிலை.
ஏழைகளின் எதிர்பார்ப்புகளோ மிகமிக எளிமையானவை: தொடர்ச்சியான வேலைவாய்ப்பு, கவுரவமாக வாழ்வதற்கு வீடு, குழந்தைகளுக்குக் கல்வி, சுகாதாரத்தில் முன்னேற்றம், அவ்வளவுதான். இவற்றில் எந்தெந்த தரப்புகளின் தேவையைக் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கிறது புதிய நிதிநிலை அறிக்கை என்று பார்க்க வேண்டும்.
‘அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் 7% முதல் 8% வரை இருப்பதற்கான பயணத்தின் தொடக்கம்' என்று இந்த நிதிநிலை அறிக்கை குறித்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார். பணவீக்க விகிதத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவது, அரசின் வருவாய்க்கும் செலவுக்கும் இடையிலான பற்றாக்குறையைக் கணிசமாகக் குறைப்பது, வெளிவர்த்தகப் பற்றுவரவில் துண்டுவிழுவதைத் தடுத்து நிறுத்துவது ஆகியவை அரசின் முக்கிய நோக்கங்கள்.
அதற்கேற்ப நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. அரசு வரிச் சலுகை அளித்துள்ள பொருட்களையும், வரிவிதிப்பை அதிகப்படுத்தியுள்ள பொருட்களையும் பார்த்தாலே இது புரியும்.
அரசின் செலவுகளைக் கண்காணிக்கவும் குறைக்கவும் செலவு நிர்வாக ஆணையம் ஏற்படுத்தப்படுவது வரவேற்கத் தக்கது. தனிநபர் வருமான வரிவிலக்கு வரம்பில் ரூ.50,000 உயர்த்தப்பட்டிருப்பது, மூத்த குடிமக்களுக்கு இதில் மேலும் சலுகை தரப்பட்டிருப்பது, வருமான வரிச்சட்டம் 80 சி பிரிவின் கீழ் சேமிப்பில் முதலீடு செய்யப்படும் தொகையின் அளவு ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது, சேமிப்புக்கும் நுகர்வுக்கும் ஊக்குவிப்பை அளித்திருப்பது போன்றவையெல்லாம் வரவேற்புக்குரியவையே.
உணவு தானியங்கள், உரங்களுக்கான மானியங்களைத் தீவிரமாகப் பரிசீலிப்பதாக அரசு உறுதியளித்திருப்பதை ஒப்புக்கொள்ள முடிய வில்லை. உண்மையில், மானியங்களால் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை விட, நிறுவனங்களுக்கு வரிவிலக்கு தருவதால் ஏற்படும் இழப்பே மிக அதிகம்.
மானியங்களின் பெரும் பகுதி, அடிப்படையில் கோடிக் கணக்கான சாமானிய மக்களுக்கானவை; ஆனால், வரிவிலக்குகளோ சில கோடீஸ்வர பெருமுதலாளிகளுக்கு உரியவை. செலவுகளைக் குறைக்க வேண்டும் என்றாலே, அரசுகள் சாதாரண மக்களின் தலையில் கைவைக்க இப்படித் தயாராக இருப்பது ஏன்?
அனைத்து வகையிலும் நாடு தள்ளாடிக்கொண்டிருக்கும்போது, பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று வாக்களித்து ஆட்சிக்கு வந்தவர்கள், பெரும் பாய்ச்சலை நிகழ்த்தக்கூடிய ஒரு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்க வேண்டாமா? ஒரு பக்கம் பெருநிறுவனங்கள், மறுபக்கம் தங்களுடைய பெரும் பலமான உயர் நடுத்தர வர்க்கம் என்று இரண்டு தரப்புகளையும் மகிழ்ச்சிப்படுத்தும் முனைப்புடனேயே இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வழக்கம்போல் சில இனிப்பு மிட்டாய்கள் கொடுத்து, ஏழைகள் கைகழுவப்பட்டிருக்கிறார்கள்.
எடுத்தவுடனேயே எந்தப் பெரும் மாற்றத்தையும் செய்துவிட முடியாது, அவகாசம் தேவை என்றெல்லாம் நிதியமைச்சர் பேசியிருக்கிறார். நாடு தள்ளாடிக்கொண்டிருக்கும் நிலையில், சாவதானமாகவெல்லாம் செயல்பட நேரமில்லை என்பது உங்களுக்கும் பிரதமர் மோடிக்கும் தெரியாதா நிதியமைச்சரே?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT