Published : 22 Jul 2014 09:00 AM
Last Updated : 22 Jul 2014 09:00 AM
நோயாளிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்! ஆம், நீரிழிவு, இதய நோய் போன்ற நோய்களுக்கான 108 மருந்துகளுக்கு அதிகபட்ச விற்பனை விலை இவ்வளவுதான் என்று 'தேசிய மருந்து விலை ஆணையம்' (என்.பி.பி.ஏ.) நிர்ணயித்திருக்கிறது. மருந்து-மாத்திரை உற்பத்தித் துறையினர் இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இந்த மருந்துகள் ‘பட்டியல்-1'-ன் கீழ்வரும் மருந்துகளோ, தேசியப் பட்டியலில் இடம்பெறும் அத்தியாவசிய மருந்துகளோ இல்லை என்பதுதான் எதிர்ப்புக்கு முக்கியக் காரணம்.
இந்த 108 மருந்துகளும் வெவ்வேறு விதமான கூட்டுப்பொருட்கள் அடங்கிய தயாரிப்புகள். இதில் உள்ள ஒவ்வொரு மருந்தையும் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தயாரிக்கின்றன. எனவே, ஒவ்வொன்றின் விலையும் வித்தியாசப்படுகிறது. ஆனால், இந்த விலை வித்தியாசம் சாதாரணமாக இல்லாமல் மிகமிக அதிகமாக இருக்கிறது. இந்த மருந்து களைத் தயாரிப்பதற்குச் சராசரியாக ஆகும் செலவைக் கணக்கிட்டு அதைப் போல 125% விலையை, மருந்துவிலைக் கட்டுப்பாட்டு ஆணையம் இப்போது நிர்ணயித்திருக்கிறது. இதனால் எந்த நிறுவனமும் நஷ்டம் அடையப்போவதில்லை. மாறாக, பல நிறுவனங்களுக்குக் கிடைத்துவந்த மிதமிஞ்சிய லாபம் குறையப்போகிறது. அதற்காகத்தான் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக எதிர்க்கின்றன.
மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது மருந்துகளின் பொதுப்பெயரில் அல்லாமல் வியாபாரப் பெயரில் பரிந்துரைசெய்கின்றனர். நோயாளிகளுக்கு எந்த மருந்தை எதற்காகச் சாப்பிடச் சொல்கிறார்கள் என்றோ, எந்த மருந்தில் என்னென்ன கூட்டுப்பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன என்றோ, அது அவசியமா என்றுகூடத் தெரியாது. இந்த நிலையில், தன்னுடைய நோய்க்கு விலை குறைவான மருந்தே போதுமானது என்றாலும்கூட, டாக்டர் பரிந்துரைசெய்த விலையுயர்ந்த மருந்துதான் தன்னுடைய உடலுக்கு ஏற்றது, மற்றதை வாங்கிச் சாப்பிட்டால் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்றும் நோயாளி அஞ்சுகிறார்.
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள், ஒரு நிறுவனத்தால் 10 மாத்திரைகள் வெறும் 25 ரூபாய்க்கும் இன்னொரு நிறுவனத்தால் ரூ.385-க்கும் விற்கப்படுகின்றன. நீரிழிவைக் கட்டுப்படுத்த 10 மாத்திரைகள் ரூ.133 என்ற விலையில் முன்னணி மருந்து நிறுவனத்தால் விற்கப்படுகின்றன. அதே மாத்திரை மற்றொரு நிறுவனத்தால் வெறும் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் ஏழைகள்தான். மருத்துவத்துக்கே தங்களுடைய வருவாயில் அல்லது சேமிப்பில் அதிகபட்சம் செலவிடுகிறவர்கள். மக்களுடைய நல்வாழ்வில் அக்கறை செலுத்த வேண்டிய எந்த அரசும் இந்த விலை வித்தியாசத்தைக் கண்டும் காணாமல் இருக்க முடியாது. ஆனால், மருந்து உற்பத்தி நிறுவனங்களோ போதுமான லாபம் என்பதில் திருப்தி கொள்ளாமல், கொள்ளை லாபம் என்ற இலக்கில் ஏழை நோயாளிகளைச் சுரண்டுகின்றன.
மிதமான லாபத்துக்கு விற்பதற்கு மருந்து உற்பத்தியாளர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழியே இல்லை. தனியார் நிறுவனங்களுக்குக் கட்டற்ற சந்தையை அமைத்துக்கொடுத்ததன் விளைவுதான் இது. இப்போதாவது அரசு தலையிட்டதே என்று ஆசுவாசப்பட்டுக்கொள்ளலாம். ஆனால், அரசு தலையிட வேண்டிய விஷயங்கள் இன்னும் இதுபோல ஏராளம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment