Published : 24 Jun 2014 07:33 AM
Last Updated : 24 Jun 2014 07:33 AM
தொழிற்சாலைகள் அமைக்க, சுரங்கங்கள் வெட்ட, மேம்பாலம் கட்ட, நெடுஞ்சாலைகள் போட, கட்டுமானங்களை நிறுவ நிலங்கள் தேவைப்படுகின்றன. இந்தத் தேவை அரசுக்கும் இருக்கிறது, தனியார் தொழில் நிறுவனங்களுக்கும் இருக்கின்றன. இந்த நிலங் களைக் கையகப்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, இவற்றைத் தீர்க்க இந்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. ‘நிலம் கையகப்படுத்தலில் நியாய மான இழப்பீடு, வெளிப்படையான நடவடிக்கைகள், மறுவாழ்வு, மறு குடியமர்த்தல் சட்டம் -2014' என்று அதற்குப் பெயர்.
புதிய சட்டம் இயற்றப்பட்டு ஆறு மாதங்கள்தான் ஆகின்றன என்றாலும், புதிய பிரதமர் நரேந்திர மோடி தொழில்துறையின் நண்பர் என்பதாலும் வளர்ச்சிதான் தனது தாரக மந்திரம் என்று அவர் முழங்கிய தாலும் இந்தச் சட்டத்தை மேலும் எளிமையாக்கி, நீர்த்துப்போக வைக்க சிலர் கோரிக்கைகளை எழுப்பியுள்ளனர். அதிகச் செலவில்லாமலும் தங்களுக்கு வேண்டிய இடத்தில், வேண்டிய அளவில் நிலங்களை எளிதில் வாங்கிவிட அவர்கள் விரும்புகின்றனர். இதற்காக அவர்கள் வைக்கும் கோரிக்கைகள் நியாயமாக இல்லை. ‘பொதுத் தேவைகளுக்காக' நிலங்களைக் கையகப்படுத்தலாம் என்று 1894-ம் ஆண்டு நிலக் கையகப்படுத்தல் சட்டத்தில் உள்ள பிரிவை பெரும்பாலும் தவறாகவே இதுவரை பயன்படுத்திவந்துள்ளனர்.
2014 ஜனவரியில் இயற்றப்பட்டுள்ள புதிய சட்டம், பல வகைகளிலும் பழைய சட்டத்தைவிட மேம்பட்டது. இழப்பீட்டுத் தொகையைப் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு திட்டத்துக்காகப் பலருடைய நிலங் களைக் கையகப்படுத்தும் நிலை ஏற்பட்டால், பாதிக்கப்படுவோரில் 80% பேருடைய ஒப்புதல் தேவை என்ற நிபந்தனை சட்டத்தில் சேர்க்கப் பட்டிருக்கிறது. இதனால், சமூகத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளை ஆராய்ந்து முடிவெடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு மறுவாழ்வு தரப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
கிராமப்புறங்களில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்குச் சந்தை மதிப்பைப் போல ஆறு மடங்கு இழப்பீடு தரப்பட வேண்டும் என்று முதலில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், சட்டத்தில் மூன்று மடங்கு கொடுத்தால் போதும் என்று குறைக்கப்பட்டது. பலவகைப் பயிர்கள் விளையும் நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது என்று முதலில் கூறப்பட்டது. தொழிலதிபர்கள் கேட்டுக்கொண்டதையடுத்து அந்தப் பிரிவும் கைவிடப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களின் குரலுக்கோ அரசாங்கங்கள் செவிமடுப்பதில்லை.
இந்த நாட்டின் வலிமைக்கு ஆதாரமாக விளங்குவது விவசாயமும் வனவளமும்தானே தவிர, வீட்டுவசதித் திட்டங்களும், நூற்றாண்டுக்கும் குறைந்த ஆயுள் உள்ள தொழிலகங்களும் சுரங்கங்களும் அல்ல. முதலில் இந்தச் சட்டத்தை அப்படியே அமல்படுத்தி, அதன் அனுபவத் தின்பேரில் இதில் மாற்றங்களைச் செய்யலாம். அப்போதும்கூட வனவளம், விவசாய வளம், நில உரிமையாளர்களின் நலன் ஆகியவற்றைப் பற்றி மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கெனவே, தோல் பதனிடும் தொழிற்சாலைகளையும் சாயப்பட்டறைகளையும் அனுமதித்துவிட்டு, நீர்வளத்தையும் நிலவளத்தையும் பாழடித்ததிலிருந்து இன்னமும் நாம் பாடம் கற்கவில்லை. தற்காலிக லாபத்துக்காக இயற்கை வளங்களை அழிப்பதைப் போன்ற தற்கொலை முயற்சிகளை இத்தகைய சட்டத் திருத்தங்கள் மூலம் அரசு மேற்கொள்ளக் கூடாது என்பது முக்கியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT