Published : 18 Jun 2014 08:00 AM
Last Updated : 18 Jun 2014 08:00 AM
பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் பூடானுக்குத்தான். சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள எட்டு நாடுகளின் தலைவர்களைத் தன்னுடைய பதவியேற்பு விழாவுக்கு அழைத்திருந்த மோடி, சுற்றுப்பயணத்துக்குத் தனது முன்னுரிமை நாடாக பூடானைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. சுதந்திர நாடான பூடானின் பாதுகாப்புக்கு முழுப் பொறுப்பேற்ற இந்தியா, அதன் வெளியுறவுக் கொள்கைத் தேவைகளையும் பூர்த்திசெய்துவந்தது. 2007-ல் செய்துகொண்ட நட்புறவு ஒப்பந்தப்படி அந்த நாடு, தன்னுடைய தேவைகளுக்கேற்ப எந்த நாட்டுடனும் உறவுகொள்ளத் தடையில்லை என்று கூறப்பட்டது. ஆனால், 2012-ல் வெளிநாட்டில் நடந்த சந்திப்பில் சீனப் பிரதமர் வென் ஜியாபோவை பூடான் பிரதமர் ஜிக்மே தின்லே தனியாகச் சந்தித்துப் பேசினார். அந்த இரு நாடுகளுக்கும் இடையில் சுமார் 500 கிலோ மீட்டர் நீளத்துக்குப் பொது எல்லை இருந்தாலும் இரு நாடுகளுக்கும் இடையில் தூதரக உறவு இதுவரை இல்லை.
பூடானை இந்தியா தொடர்ந்து அரவணைத்துவருகிறது. சுமார் 40,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும், சுமார் 7.5 லட்சம் மக்களையும் கொண்ட பூடான், தனது பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவையே பெரிதும் நம்பியிருக்கிறது. கலாச்சார ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் இந்தியாவுடன் பல நூற்றாண்டுகளாகத் தொடர்புள்ள அந்த நாடு இலங்கை, வங்கதேசம், மாலத்தீவுகள், பாகிஸ்தான் வரிசையில் சீனத்துடன் நெருங்கிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வாலோ என்னவோ மோடி, பூடானுக்குச் செல்ல முடிவு எடுத்திருக்கிறார். அது மட்டுமின்றி, இந்தியா மிகப் பெரிய நாடு, நம்மை அடக்கி ஆளத்தான் பார்க்கும் என்ற எண்ணம் இந்தியாவைச் சுற்றி இருக்கும் சிறிய நாடுகளுக்கு உள்ளூர இருக்கிறது. எனவே, இந்தியாவைக் கட்டுக்குள் வைக்க, சீனத்துடன் நெருக்கமாகச் செல்ல விரும்புவதைப் போல அந்த நாடுகள் காட்டிக்கொள்கின்றன. அந்த அச்சத்தைப் போக்கவும் நம்பிக்கையை ஊட்டவும்கூட மோடி இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத் திருக்கலாம் என்று தோன்றுகிறது.
அடித்தளக் கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, நீர்மின் திட்டங்கள் ஆகிய துறைகளில் பூடானுக்கு இந்தியா 1961 முதல் நிதியுதவி செய்கிறது. கடந்த ஆண்டு ஐந்தாண்டு திட்டத்தில் பூடானுக்கு ரூ.4,500 கோடி ஒதுக்கப்பட்டது. ‘மன்னராட்சி' என்பதிலிருந்து ‘மன்னராட்சிக்குக் கட்டுப்பட்ட ஜனநாயக நாடாக' பூடான் மாறியிருக்கிறது. சீனத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது. இத்தகைய முக்கியத்துவத்தாலேயே மோடி இந்த நாட்டைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இப்படியே இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளின் நட்புறவை அவர் வளர்த்துவிட்டால், நம்முடைய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்கள் பெருமளவு குறைவது நிச்சயம்.
இது பயனுள்ள சுற்றுப்பயணம்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், சீனாவுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ளுமோ என்ற எதிர்மறை எண்ணத்தில் மட்டும் பூடானுடன் உறவுகொள்ளத் தேவையில்லை. அதன் சமூக, பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் நாடாக இந்தியா இருக்கும்பட்சத்தில் பூடான், சீனத்துடன் நெருங்கிச் செல்ல வேண்டியிருக்காது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT