Published : 01 Apr 2014 09:54 AM
Last Updated : 01 Apr 2014 09:54 AM

அதிகரிக்கும் சுமைகள்

உலக இளைஞர்களின் முதுகில் மேலும் சுமை அதிகமாகி விட்டிருக்கிறது என்கிறது ‘சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு’. ஆம். 2013-ல் வேலையில்லாதோர் பட்டியலில் மேலும் 10 லட்சம் இளைஞர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்கிறது இந்த ஆண்டின் தொடக்கத்தில் அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கை.

2007, 2008-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவாகப் பணி நிரந்தரமின்மை, பணியில் இருந்தாலும் வறுமை நீங்காத நிலை ஆகியவை மோசமாக ஆயின. 24 வயதுக்கு உட்பட்டவர்களுக்கிடையே வேலையில்லாமல் இருப்போர் எண்ணிக்கை 13.1%. இந்த வயதுவரம்பைத் தாண்டியிருப்போர் மத்தியில் காணப்படும் வேலையில்லாத் திண்டாட்டத்தைவிட இது இரு மடங்கு அதிகம்.

மொத்த மக்கள்தொகையில் 50 சதவீதத்துக்கும் மேல் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களைக் கொண்ட இந்தியாவுக்கு இது மிகவும் கவலையளிக்கும் ஒரு விஷயம். வேலை, கல்வி, தொழிற்பயிற்சி என்று எதிலும் ஈடுபட்டிருக்காதவர்களின் எண்ணிக்கை பெரும்பாலான நாடுகளில் அதிகரித்துவருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. தொடர்ந்து இந்தியாவுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் தகவல்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கின்றன.

இந்தியாவில் அமைப்புசாரா தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 90% சமூகப் பாதுகாப்பு ஏதும் இல்லாத நிலையில்தான் வேலை பார்க்கிறார்கள். ஆரோக்கியமான உற்பத்திச் சூழலுக்குத் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்புதான் மிகவும் முக்கியம். இதையெல்லாம் மேற்கண்ட அறிக்கையின் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும். புதிதாகத் தொழிலாளர்கள் உருவாகும் வேகத்தைவிட, வேலைவாய்ப்புகள் உருவாகும் வேகம் மிகவும் குறைவே என்கிறது இந்த அறிக்கை.

இதன் விளைவாக, வரும் ஐந்து ஆண்டுகளில் வேலையில்லாதோர் எண்ணிக்கை ஆண்டுக்கு உலகெங்கும் 20 லட்சம் என்ற விகிதத்தில் அதிகரிக்கப்போகிறது. வேலை தேடுவோர்களின் இந்தப் புதிய கூட்டத்தில் கிட்டத்தட்ட 45 சதவீதம் பேர் கிழக்காசியாவையும் தெற்காசியாவையும் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். மனித ஆற்றல் வளர்ச்சிக்கான பல்வேறு குறியீடுகளில் வெகுவாகப் பின்தங்கியிருப்பவை மேற்கண்ட பிரதேசங்களே.

2013-ல் மட்டும் வேலையில்லாதோரின் பட்டியலில் உலகெங்கும் மேலும் 50 லட்சம் பேர் கடந்த ஆண்டில் சேர்ந்திருக்கிறார்கள். பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, மீட்சியை நோக்கிச் சீரற்ற நிலையில் சென்றுகொண்டிருக்கிறோம் என்பதற்கான அடையாளம் இது. அப்படி இருக்கும்போது, வேலையில்லாமல் திண்டாடுவோரின் நலன்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, அதற்கான முயற்சிகளை அரசுகள் மேற்கொள்ளாவிட்டால், பின்விளைவுகள் மிகவும் மோசமானவையாக இருக்கும்.

கூடவே, சமூகப் பாதுகாப்புக்கான உறுதியான நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். இது ஒட்டுமொத்தத் தொழிலாளர் சமூகத்தின் நலன்களையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்துவ தோடல்லாமல், வரக்கூடிய 20 ஆண்டுகளில் ஏற்படப்போகும் பெரும் பிரச்சினை ஒன்றையும் எதிர்கொள்வதற்கான சக்தியை அது தரும். ஆம், இறப்பு விகிதம் குறையவிருப்பதுதான் அந்தப் பிரச்சினை. இதனால், முதியவர்களின் தொகை பெருமளவில் அதிகரித்து, பெரும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். முன்னெச்சரிக்கை உணர்வில்லாத கொள்கை வகுப்பாளர்களின் பாடு அப்போது நிச்சயம் திண்டாட்டம்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x