Published : 31 Mar 2022 06:21 AM
Last Updated : 31 Mar 2022 06:21 AM
பணமதிப்பு வீழ்ச்சியடைந்து, படுமோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு அருகமை நாடான இந்தியா தொடர்ந்து செய்துவரும் மனிதநேய உதவிகள், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வளர்த்தெடுக்கும் வகையில் அமைந்துள்ளது. மார்ச் 15 அன்று இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வந்த இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, பிரதமர் மோடியைச் சந்தித்து இந்தியா செய்துவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, நெருக்கடியைச் சமாளிக்க மேலும் உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோரையும் அவர் சந்தித்தார். இந்தச் சந்திப்புகளை அடுத்து உணவு, மருந்துப் பொருட்களுக்காக 100 கோடி அமெரிக்க டாலர்களை வழங்குவதாக இந்தியா உறுதியளித்தது. இந்திய மதிப்பில் இது ரூ.7,500 கோடி ஆகும். இத்தொகைக்கு ஈடான அத்தியாவசியப் பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்படும்.
சில தினங்களுக்கு முன்பு இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அந்நாட்டின் அரசும் அமைச்சர்களும் மிகப் பெரும் மரியாதையை அளித்துள்ளனர். இலங்கை அதிபர் மற்றும் பிரதமருடனான சந்திப்பில், மேலும் இந்தியா 150 கோடி அமெரிக்க டாலர்கள் கொடுத்து உதவ வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள 3 தீவுகளில் மரபுசாரா மின்னுற்பத்தித் திட்டங்களை மேற்கொள்ள சீன நிறுவனத்துடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டிருந்த நிலையில் அவை ரத்துசெய்யப்பட்டு, தற்போது அப்பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு இந்திய நிறுவனம் ஒப்பந்தமாகியிருப்பது, இந்தியாவின் எல்லையோரப் பாதுகாப்பு தொடர்பிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இலங்கையுடனான வெளிநாட்டு உறவில் உருவாகியுள்ள இந்தப் பிணைப்பு, இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைகள் குறித்து விவாதிக்கவும் தீர்வுகளைப் பரிந்துரைக்கவுமான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வகையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கையில் மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
இலங்கையில் வாழும் அனைத்து மக்களையும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கவும் இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தவும் முயற்சிகளை எடுத்துவரும் இந்திய அரசு, தமிழ்நாட்டு மீனவர்களின் மீது இலங்கைக் கடற்படை தொடர்ந்து நடத்திவரும் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தவும் மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முயல வேண்டும்.
இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி நிலை, தமிழ்நாட்டு மீன்பிடிப் படகுகளைத் தாக்கி அவர்களிடம் உள்ள பொருட்களைப் பறித்துச்செல்லும் கடற்கொள்ளைச் சம்பவத்துக்கும் காரணமாகியுள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்திவரும் வன்முறைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண இருநாட்டு மீனவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்திச் சமரசம் காண வேண்டும். அதற்கான நல்லதொரு வாய்ப்பாக, தற்போதைய சூழலைப் பயன்படுத்திக்கொள்வதே தேர்ந்த ராஜதந்திரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...