Published : 17 Mar 2022 06:50 AM
Last Updated : 17 Mar 2022 06:50 AM
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்துவரும் யுத்தம், உலகப் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புகளை விளைவித்துள்ளது. பணவீக்கத்தின் காரணமாக, அன்றாடம் பயன்படுத்தும் அனைத்துவகையான பொருட்களின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கச்சா எண்ணெயின் விலை உயர்வு இதற்கு முக்கியக் காரணம். இறக்குமதியாகும் கச்சா எண்ணெயின் விலை உயர்வையும் கீழிறங்கிக்கொண்டிருக்கும் பண மதிப்பையும் இந்தியா எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான மதிப்பீடுகளின்படி, எரிபொருட்களின் விலையும் உணவுப் பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கின்றன. ஜனவரியில் 6.01% ஆக இருந்த சில்லறை விற்பனை பணவீக்கமானது பிப்ரவரியில் 6.07% ஆக அதிகரித்துள்ளது. சில்லறை விற்பனை பணவீக்கத்துக்கு ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள அதிகபட்ச அளவு இது; மார்ச் 2026 வரையில் 4% என்ற அளவிலேயே நிலையாகப் பராமரிக்க வேண்டும். அதிகபட்சமாக 2% கூடவோ குறையவோ செய்யலாம் என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜனவரியில் 5.43% ஆக இருந்த நுகர்வோர் உணவுப்பொருட்கள் விலைக் குறியீட்டெண்ணும் பிப்ரவரியில் 5.85% ஆக அதிகரித்துள்ளது. சமையல் எண்ணெய் மட்டுமல்லாது காய்கறிகள், பழ வகைகள், மாமிசம், மீன், முட்டை, மளிகைப் பொருட்கள் என்று அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்தபடியே உள்ளது. இந்நிலையில், பணவீக்கத்தை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் முன்னெடுக்க வேண்டியது அவசியம்.
இதுபோலவே, ஜனவரியில் 12.96% ஆக இருந்த மொத்த விற்பனை விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம், பிப்ரவரியில் 13.11% ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் இது 4.83% ஆக இருந்தது. ஏப்ரல் 2021 தொடங்கி, தொடர்ந்து 11 மாதங்களாக இந்தப் பணவீக்கம் இரட்டை இலக்கத்திலேயே தொடர்ந்துவருகிறது. கச்சா எண்ணெய், அடிப்படை உலோகங்கள் மற்றும் வேதிப் பொருட்களின் உலகளாவிய விலை உயர்வு இதற்குக் காரணம். இந்தியாவுக்கு இறக்குமதியாகும் சூரியகாந்தி எண்ணெயில் ஏறக்குறைய 90% ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிலிருந்து பெறப்பட்டுவந்த சூழலில், தற்போது அது தடைபட்டுள்ளது.
விவசாயத்தில் பயன்படுத்தப்படும் வேதிக் கலப்புரங்களில் ஏறக்குறைய 60 சதவீதமும் உள்கட்டமைப்புத் திட்டப் பணிகளுக்கான பொருட்களில் ஏறக்குறைய 30 சதவீதமும் ரஷ்யாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டுவருகிறது. தவிர, அடிப்படை உலோகங்களான அலுமினியம், நிக்கல், எஃகு ஆகியவற்றின் உலகளாவிய விலையும் அதிகரித்தபடியே உள்ளது. இவ்வுலோகங்களின் விலை உயர்வு, வீட்டு மின்சாதனப் பொருட்களின் விலையேற்றத்துக்கும் காரணமாகிவிட்டது.
அதிகரித்துவரும் விலைவாசியானது நுகர்வு, முதலீடு இரண்டிலுமே நீண்ட காலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை இன்னும் தீவிரமாக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், வங்கிகளுக்கான வட்டி விகிதங்களைப் போலத் தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கான வட்டியும் குறைக்கப்பட்டிருப்பது அதிருப்தி அலைகளையும் உருவாக்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT