Published : 07 Mar 2022 06:09 AM
Last Updated : 07 Mar 2022 06:09 AM

நீட்: ஒரு மறுவிசாரணை

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் உயிரிழந்ததையடுத்து நீட் தேர்வின் தேவை குறித்து தேசிய அளவில் விவாதம் எழுந்துள்ளது. நவீனின் மரணத்துக்கு நீட் தேர்வும் ஒரு காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார் கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி. எஸ்எஸ்எல்சி தேர்வில் 96% மதிப்பெண்களும், பியூசி தேர்வில் 97% மதிப்பெண்களும் பெற்றிருந்தபோதும் அம்மாணவரால் தான் விரும்பியபடி இந்தியாவில் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நீட் தேர்வு விலக்கு சட்ட முன்வடிவை நினைவூட்டியிருக்கிறார். உக்ரைனில் போர் நிறுத்தம் பெற்றோர்களுக்குச் சற்றே ஆசுவாசத்தை அளித்தாலும், அந்த மாணவர்கள் இந்தியாவிலேயே தங்களது மருத்துவப் படிப்பைத் தொடர வகைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழ ஆரம்பித்துள்ளன.

அதற்காக, ஏற்கெனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை இடங்களை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் புதிய கல்லூரிகளைத் தொடங்கலாம் என்றும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கான அனைத்துத் தேவைகளையும் பூர்த்திசெய்யாமல், அவசர கதியில் அரசே மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்ற மாற்றுக் கருத்துகளும் நிலவுகின்றன. ஆனால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிலவும் இந்தச் சிற்சில குறைபாடுகள் எளிதில் சரிசெய்யப்படக் கூடியவையே.

நீட் தேர்வில் வெற்றிபெற்று, தனியார் கல்லூரிகளில் சேர்வதைக் காட்டிலும் உக்ரைன் போன்ற நாடுகளில் குறைவான கல்விக் கட்டணத்தில் படிக்க முடிகிறது. அதே நேரத்தில், நீட் தேர்வுக்கும் மாணவர்கள் வெளிநாடு சென்று படிப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற வாதங்களையும் சில கல்வி ஆலோசகர்கள் உறுதியாக முன்வைக்கின்றனர். நீட் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்குள் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பைப் பெறும் மாணவர்களின் எணணிக்கை எப்படியும் மாறுவதில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மாநிலக் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றபோதும் நீட் தேர்வில் தகுதி பெறுவதற்குரிய மதிப்பெண் பெறாமல் போவதற்கான காரணம், மாறிவரும் போட்டிகள் நிறைந்த கல்விச் சூழலும் மாநில அரசுகள் தங்களது பாடத்திட்டத்தைக் கற்பிக்கும் முறையை வலுப்படுத்தாததுமே என்பதையும் இவர்கள் முன்வைக்கிறார்கள்.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கு மிகப் பிரம்மாண்டமான ஒரு தொகையைக் கூடுதல் கட்டணமாக வசூலிப்பதைத் தடைசெய்தாலே ஏழை மற்றும் மத்திய வர்க்க மாணவர்களுக்கான மருத்துவக் கல்விக் கனவு அவர்கள் மாநிலத்துக்குள்ளேயே பூர்த்தியாகிவிடும் என்பதையும் அரசு மருத்துவக் கல்லூரிகள் புதிதாகத் தொடங்கப்பட்டு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அதிகப்படுத்துவது இதற்கு ஒரு தீர்வாக இருக்கும் என்பதையும் யாரும் மறந்துவிடக் கூடாது. அத்துடன் சேர்த்து, நீட் தேர்வுக்கு எதிரான கருத்துகளும்கூட விவாதத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x