Published : 21 Feb 2022 06:26 AM
Last Updated : 21 Feb 2022 06:26 AM
இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை மீட்டெடுப்பதில் தமிழ்நாடு அரசும் அறநிலையத் துறையும் காட்டிவரும் செயல்முனைப்பு பாராட்டுக்குரியது. கோயில்களின் நில விவரங்களையும் மீட்கப்பட்ட நிலங்கள் பற்றிய விவரங்களையும் அறநிலையத் துறையின் இணைய தளத்தில் அனைவரும் பார்க்கும்வண்ணம் தொடர்ந்து வெளியிட்டுவருவது வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது.
திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக்கொண்டதிலிருந்து இதுவரை ரூ.2,043 கோடி மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகச் சமீபத்தில் அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. கோயில் நிலங்களை விழிப்புடன் பாதுகாக்க, அறநிலையத் துறை அலுவலகங்களில் வட்டாட்சியர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட புதிய அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதுபோலவே நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வாடகை, குத்தகை பாக்கிகளை வசூலிக்கவும் வளர்ச்சியடைந்துவரும் பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் கடைகளுக்கான வாடகை நிர்ணயங்களைக் காலத்துக்கேற்ப உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இம்முறை திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து கோயில்கள் நிர்வாகம் சார்ந்து தனி அக்கறை காட்டிவருகிறது. அறநிலையத் துறை மானியக் கோரிக்கையிலும் குறிப்பிடத்தக்க பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றுள் முக்கியமானது, ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் 12,959 கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.1,000 அறிவிக்கப்பட்டதாகும். வருமானம் அதிகம் உள்ள கோயில்களிலும்கூட, அங்கு பணிபுரியும் அர்ச்சகர்கள் உள்ளிட்ட அனைத்து வகைக் கோயில் பணியாளர்களின் ஊதியமும் சொற்ப அளவிலேயே உள்ளது என்பதே உண்மை நிலை.
இந்நிலையில், நீண்ட காலமாகத் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்துவரும் கோயில் ஊழியர்கள் பணி வரன்முறை செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பு வரவேற்பைப் பெற்றுள்ளது. அறநிலையத் துறை சார்பில் 10 இடங்களில் கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படுவதற்கான பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளன. அங்கு பணிபுரியத் தேர்ந்தெடுக்கப்படும் உதவிப் பேராசிரியர்களுக்குத் தொகுப்பூதியங்களை நிர்ணயிக்காமல், முன்கூட்டியே பல்கலைக்கழக மானியக் குழுவின் ஊதிய நிர்ணயங்களைப் பின்பற்றுவது நல்லதொரு முன்னுதாரணமாக அமையும்.
திருத்தணிகை, சமயபுரம், திருச்செந்தூர் கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம், முடி காணிக்கைக்கான கட்டணம் ரத்து, மாற்றுத் திறனாளிகளின் திருமணங்களுக்குத் திருமணக் கட்டணம் ரத்து போன்ற பல அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்திருப்பது பாராட்டுக்குரியது.
முழு நாள் அன்னதானத் திட்டங்களை ராமேஸ்வரம், திருவண்ணாமலை போன்ற வாய்ப்புள்ள மற்ற கோயில்களுக்கும் இனி வரும் காலத்தில் விரிவுபடுத்த வேண்டும். கோயில் நிர்வாகம் தொடர்பில் மிகச் சில மாதங்களிலேயே வரவேற்கத்தக்க மாற்றங்கள் பல நடந்திருந்தபோதிலும், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்களை இன்னும் அதிகாரிகளே நிர்வகித்துவருகின்றனர். அனைத்துக் கோயில்களிலும் அறங்காவலர்களை நியமிக்கவும் அதிகாரிகளுடன் அவர்கள் இணைந்து செயல்படவும் விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...