Published : 04 Jun 2014 10:00 AM
Last Updated : 04 Jun 2014 10:00 AM

கவனம் ஈர்க்கிறது மத்தியப் பிரதேசம்!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயம் நாளுக்கு நாள் கீழே சென்றுகொண்டிருக்கும் நிலையில், மத்தியப் பிரதேசம் முன்னோக்கிப் பாய்ந்து எல்லோருடைய கவனத்தையும் கோருகிறது.

வேளாண் உற்பத்தியில் 25% வளர்ச்சியை மத்தியப் பிரதேசம் கண்டிருக்கிறது. 2012-13-ல் மாநிலத்தின் வேளாண் துறையில் 20.16% வளர்ச்சி ஏற்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டு 2011-12-ல் அது 19.85% ஆக இருந்தது. ஆக, ஒவ்வோராண்டும் வளர்ச்சி உயர்ந்தவண்ணம் இருக்கிறது.

மத்திய அரசின் புள்ளிவிவரத் துறை திரட்டிய தகவல்களிலிருந்து இந்தச் சாதனை தெரியவருகிறது. வேளாண் உற்பத்தியில் சிறந்து விளங்குவதற்காகக் கடந்த இரு ஆண்டுகளாக ‘கிருஷி கர்மன்' விருதையும் மத்தியப் பிரதேசம் பெற்றுள்ளது.

கடந்த 2004-05 வளர்ச்சியை அடிப்படை ஆண்டாகக் கொண்டு இந்த வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. 2004-05- ல் மத்தியப் பிரதேசத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) வேளாண் துறையின் பங்கு மட்டும் ரூ.31,238.3 கோடியாக இருந்தது. 2013-14-ல் இது ரூ.69,249.89 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு 121% ஆகும். 2004-

05-ல் 73.27 லட்சம் மெட்ரிக் டன்களாக இருந்த கோதுமை உற்பத்தி, 2013-14-ல் 193 லட்சம் டன்களாக அதிகரித்துள்ளது. சோயா பீன்ஸ் உற்பத்தி 37.6 லட்சம் டன்னிலிருந்து 50 லட்சம் டன்களாகவும், அரிசி உற்பத்தி 13.09 லட்சம் டன்னிலிருந்து 69.5 லட்சம் டன்களாகவும் உயர்ந்துள்ளது. 2004-05-ல் மத்தியப் பிரதேசத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.1.12 லட்சம் கோடியாக இருந்தது. அதுவே 2013-14-ல் ரூ.2.38 லட்சம் கோடியானது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 11.08% அதிகமாகும். அதேபோல, சாகுபடிப் பரப்பளவும் 34% அதிகரித்திருக்கிறது.

விவசாயத்தின் ஏற்றம் மாநிலத்தின் சராசரி தனிநபர் வருமானத்திலும் எதிரொலிக்கிறது. சராசரி தனிநபர் வருமானம் சுமார் 350% அதிகரித் திருக்கிறது. 2004-05-ல் தனிநபர் சராசரி வருமானம் ரூ.15,442 ஆக இருந்தது. இப்போது ரூ.54,030 ஆக உயர்ந்திருக்கிறது.

இந்த உயர்வு திடீரென வந்துவிடவில்லை. மத்தியப்பிரதேசத்தை ஆளும் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பா.ஜ.க. அரசு வகுத்திருக்கும் தெளிவான திட்டங்களே இதைச் சாத்தியமாக்கி யிருக்கின்றன. வட்டியில்லாத விவசாயக் கடன், விதை உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்களின் விரிவாக்கம், புதுமையான தொழில் நுட்பங்களின் செயலாக்கம் என்று வேளாண் உற்பத்தியைப் பெருக்க அரசின் பல்வேறு திட்டங்களைக் காரணமாகக் கூறுகிறார்கள் விவ சாயிகள். எல்லாவற்றையும்விட அடிப்படையான, முக்கியமான ஒரு விஷயம் உண்டு. விவசாயத்தின் மீதும், விவசாயிகளின் மீதும் அரசுக்கு இருக்கும் அக்கறை. அது இருந்தால், மத்தியப் பிரதேசத்தில் மட்டும் அல்ல; இந்த வளர்ச்சி எங்கும் சாத்தியம்தான். தேர்தல் சமயத்தில் வளர்ச்சி தொடர்பாக எழுந்த விவாதங்களில் அதிகம் ஒப்பிடப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. எல்லாவற்றிலும் முன்னோடி மாநிலம் தமிழகம் என்று பெருமையாகப் பேசும் முதல்வர், மத்தியப் பிர தேசத்தின் விவசாய வளர்ச்சியையும் கவனத்தில் கொள்ள வேண்டும்!​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x