Published : 12 Jul 2021 03:12 AM
Last Updated : 12 Jul 2021 03:12 AM

தகவல் தொழில்நுட்ப விதிகள் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கக் கூடாது

கடந்த பிப்ரவரி 25-ல் அறிவிக்கப்பட்டு, மே 26 முதல் நடைமுறைக்கு வந்துள்ள ‘தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள்-2021’, இந்திய அரசமைப்பால் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்துக்குக் கடுமையான நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளது. சமூக ஊடகங்கள், இணைய வழி ஒளிபரப்புகள் ஆகியவற்றுடன் இணையவழியிலான செய்தி உள்ளடக்கங்களையும் கட்டுப்படுத்துவதாக இந்த விதிகள் அமைந்துள்ளன. சமூக ஊடகங்கள் தேவையெனில், தங்களது பயனர்களைப் பற்றிய விவரங்களை அரசுக்குத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அது தனிமனிதச் சுதந்திரத்துக்கு எதிரானது என்று வாட்ஸ்அப், ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. எனினும், சில நாட்களுக்கு முந்தைய டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவால், புதிய விதிமுறைகளை ட்விட்டர் நிறுவனம் ஏற்றுக்கொண்டுவிட்டது. நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற பிரபல ‘ஓவர்-த-டாப்’ (ஓடிடி) ஒளிபரப்பு நிறுவனங்கள் ஏற்கெனவே இந்தப் புதிய விதிமுறைகளுக்கு இணங்க தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளன.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (பிடிஐ) தொடர்ந்துள்ள வழக்கில், நடைமுறைக்கு வந்திருக்கும் புதிய விதிகளை இணையவழிச் செய்திகளின் உள்ளடக்கத்தை அரசும் நிர்வாகமும் தீர்மானிப்பதற்கான கருவி என்று கூறி அதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளது. அச்சிதழ்கள் மற்றும் இணையவழிச் செய்திகள் இரண்டுக்கும் இடையில் வேறுபாடுகளை உருவாக்கும் இவ்விதிகள், அரசமைப்பின் கூறு 14-க்கு எதிரானதாகவும் வாதிடப்பட்டுள்ளது. தவறான செய்தி வெளியிடப்பட்டால் உரிமையியல், குற்றவியல் சட்டங்களின் கீழ் தண்டிப்பதற்கு ஏற்கெனவே வகைசெய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு விதியின் அவசியம் என்னவென்ற கேள்வி முக்கியமானது. இவ்வழக்கில் பதிலளிக்குமாறு ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்துக்கும் செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இணையதளச் செய்தி நிறுவனங்களின் மீது புதிய விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மும்பை, சென்னை நீதிமன்றங்களிலும் செய்தி நிறுவனங்களின் கூட்டமைப்புகளால் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை ஒருசேர விசாரிக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இதுவரையிலும் ஏற்றுக்கொள்ளவில்லை. கருத்துச் சுதந்திரம் என்பது சட்டரீதியான, நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் வெவ்வேறு நாடுகளை வெவ்வேறு வகையான ‘கருத்துச் சுதந்திரத்துடன்’ அணுகுவதால் அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு அரசாங்கம் விதிகளை இறுக்குவதைத் தவறென்று சொல்ல முடியாது. ஆனால், பொறுப்போடும் நடுநிலையோடும் செயல்படும் உள்நாட்டு ஊடகங்களுக்கு இவ்விதிகளே ஒரு மூச்சுத் திணறலாக மாறிவிடக் கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x